தாய்ப்பாலூட்டுவதால் மாதவிடாயை நிறுத்தும் முறை (Lactational Amenorrhea Method)
குழந்தை பிறந்த சிறிது காலத்திற்கு தாய்மார்கள் தொடர்ந்து தாய்ப்பாலூட்டுவதை கருத்தடை முறையாகப் பயன்படுத்த முடியும். இந்த முறையை தாய்ப்பாலூட்டுவதால் மாதவிடாயை நிறுத்தும் முறை (LAM) என்கிறோம்.
குழந்தை பிறந்த பிறகு, தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு வெவ்வேறு நாட்களில், அதாவது சீரான இடைவெளி இல்லாமல் மாதவிடாய் ஏற்படும். சிலருக்கு குழந்தை பிறந்த சில வாரங்களிலேயே மாதவிடாய் ஏற்படும், இன்னும் சிலருக்கு சில வருடங்கள் வரை வராமல் இருக்கலாம். தாய்ப்பாலூட்டுவது மாதவிடாயையும் கருவுறுதலையும் தடுக்கும் கால இடைவேளிய தாய்ப்பாலூட்டுவதால் மாதவிடாய் தடைபடும் காலம் (லாக்டேஷனல் அமினோரியா (LAM)) என்கிறோம்.
LAM என்பது குழந்தை பிறந்த பிறகு கருவுறுதலைத் தடுப்பதற்கான இயற்கையான, பாதுகாப்பான, பலன்மிக்க வழியாகும். இது குழந்தை பிறந்த பிறகு ஆறு மாதங்கள் வரை பலனளிக்கக்கூடும்.
தாய்ப்பாலூட்டுவது எப்படி கருவுறுதலைத் தடுக்கும்? (How does breastfeeding prevent pregnancy?)
குழந்தை வாயால் உறிஞ்சி பாலருந்தும் செயலால் ஹைப்போதலாமசில் இருந்து குறிப்பிட்ட இடைவெளியில் கொனடோட்ரோபினை வெளிவிடும் ஹார்மோன் (GnRH) சுரப்பது தடைபடுகிறது. இதனால் பிட்யூட்டரியில் இருந்து லூட்டினைசிங் ஹார்மோன் (LH) சுரப்பது குறைகிறது. குழந்தை முலைகளை உறிஞ்சுவதால் GnRH ஹார்மோன் வெளியிடுவது எப்படி தடைபடுகிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இந்த சுழற்சியின்போது, இரத்தில் உள்ள ஃபாலிக்கில் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோனின் (FSH) அளவு போதுமான அளவு அதிகரித்து சினைப்பையில் இருக்கும் ஃபாலிக்கில்கள் வளர்ச்சியடைகின்றன. ஆனால் ஃபாலிக்கில்கள் கருமுட்டையை வெளியிடப் போதுமான அளவு LH ஹார்மோன் இருக்காது.
இப்படியாக, குழந்தை பாலை உறிஞ்சிக் குடிப்பதால் வழக்கமான சினைப்பை செயல்பாட்டுச் சுழற்சி மீண்டும் தொடங்கத் தாமதமாகிறது. கருமுட்டை வெளியிடப்படாமல் இருப்பதால் கரு உண்டாகாது.
குழந்தை முலையை உறிஞ்சும்போது ஏற்படும் அழுத்தம் குறையும்போது, மீண்டும் வழக்கமான அளவுக்கு லூட்டினைசிங் ஹார்மோன் வெளியிடப்பட்டு சீரான நிலைக்கு வரும், இதனால் கரு முட்டை வெளியாகும், பிறகு இயல்பாக கருத்தரித்தல் நடக்கும்.
தாய்ப்பாலூட்டுவதை கருத்தடை முறையாக எப்படிப் பயன்படுத்திப் பயிற்சியெடுக்க வேண்டும்? (How should you practice breastfeeding as a method of lactation?)
கீழே கொடுக்கப்பட்ட நிபந்தனைகள் எல்லாம் சரியாக நிறைவேறும்பட்சத்தில், இந்தக் கருத்தடை முறை 98% பலனளிக்கக்கூடியது:
குழந்தைக்கு (வேறு திரவ அல்லது திட ஆகாரங்கள் கொடுக்காமல்) முற்றிலும் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.
மாதவிடாய் ஏற்பட்டிருக்கக் கூடாது.
குழந்தை பிறந்து ஆறுமாத காலத்திற்குள்ளாக இருக்க வேண்டும்.
மேலே குறிப்பிட்ட நிபந்தனைகள் நிறைவேறாவிட்டால், வேறு கருத்தடை முறையைப் பின்பற்றுவதே நல்லது.
ஆறு மாதம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே ஊட்ட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. ஏனெனில் அதன் பிறகு அவர்களுக்கு கூடுதல் சத்துகளை அளிக்கும் பிற உணவுகளும் சேர்த்து வழங்கப்பட வேண்டும். எனவே, ஆறு மாதம் என்ற கால அளவு இதற்குப் பரிந்துரைக்கப்படுகிறது.
எனினும், 6 மாதம் வரை தாய்ப்பாலூட்டுவதன் மூலம் கருத்தடை முறையை வெற்றிகரமாக செயல்படுத்திய பெண்கள், குழந்தைக்கு கூடுதல் ஆகாரம் கொடுக்கத் தொடங்கிய பிறகும், ஒவ்வொரு முறை அவற்றைக் கொடுக்கும் முன்பு தாய்ப்பாலூட்டுவதன் மூலம் 6 மாதத்திற்குப் பிறகும் இந்த முறையை கருத்தடை முறையாகப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த முடிகிறது என சில ஆய்வுகள் காண்பித்துள்ளன.
சில முக்கியமான விஷயங்கள் (Other important considerations)
மாதவிடாய் இல்லாமல் பார்த்துக்கொள்வதன் மூலம் மட்டுமே அல்லது தாய்ப்பாலூட்டுவதன் மூலம் மட்டுமே கருத்தடையை செயல்படுத்த முடியாது, அதுவும் LAM என்பதும் ஒன்றல்ல. எந்த சமயத்திலும், மேலே குறிப்பிட்ட 3 நிபந்தனைகளும் நிறைவேறும்பட்சத்தில் மட்டுமே இது செயல்படும், ஏதேனும் ஒன்று நிறைவேறாவிட்டாலும் உடனடியாக வேறு கருத்தடை முறைக்கு மாற வேண்டும்.
LAM முறையானது பால்வினை நோய்கள் பரவுவதைத் தடுத்துப் பாதுகாப்பை வழங்காது (அவற்றைத் தடுக்க, ஆணுறைகளைப் பயன்படுத்த வேண்டியது அவசியம்).
குழந்தை முலைகளை எந்த அளவுக்கு அழுத்தமாக உறிஞ்சி பாலருந்துகிறது என்பதைப் பொறுத்தே இந்த முறையின் பலன் இருக்கும். ஆகவே தாய்ப்பாலூட்டும் அளவைப் பொறுத்தே இதன் வெற்றி அமையும். முற்றிலுமாக தாய்ப்பால் ஊட்டுபவர்கள் மற்றும் முழுவதுமாக தாய்ப்பால் ஊட்டுபவர்களுக்கு இந்த முறை பெருமளவு வெற்றி கொடுத்துள்ளது, அவ்வப்போது தாய்ப்பால் ஊட்டுபவர்களுக்கு இம்முறையின் வெற்றி விகிதம் குறைவாகவே இருந்துள்ளது.