Home பெண்கள் தாய்மை நலம் தாயாகும் முன்னே

தாயாகும் முன்னே

22

86534101-585x390வேலைக்கான இடப்பெயர்ச்சி தனிக் குடும்பங்களின் எண்ணிக்கையை அதிகரித்து விட்டது. கணவன், மனைவி, குழந்தைகள் என்பதுதான் இன்றைய குடும்ப கான்செப்ட். குழந்தைப்பேற்றின்போது வரும் சந்தேகங்களுக்கோ, குழந்தை பிறந்த பிறகான கேள்விகளுக்கோ, பதில் சொல்வதற்கு வீட்டில் பெரியவர்கள் இல்லை. பிரசவம் எப்படி இருக்கும், குழந்தையை எப்படித் தனியாகப் பார்த்துக்கொள்ளப் போகிறேன் என்கிற பதற்றத்தில் இருக்கிறார்கள் இளம்பெண்கள். அவர்களுக்கு உதவி செய்வதுதான் கருவுற்ற தாய்மார்களுக்கான பயிற்சி வகுப்புகள்.

கர்ப்ப காலங்களில் என்ன செய்யலாம், எதைச் செய்யக் கூடாது, பிரசவ வலியைக் கையாள்வது எப்படி, குழந்தை பிறந்தவுடன் எப்படிக் குளிப்பாட்டுவது, உணவு ஊட்டுவது, பராமரிப்பது, குழந்தையின் வளர்ச்சி போன்ற அனைத்தையும் இந்த வகுப்பில் சொல்லித்தருகிறார்கள். குழந்தைப்பேற்றுக்குத் திட்டமிடும் பெண்கள், கருவுற்ற பெண்கள் 4-7 மாதத்தில், மருத்துவர் ஆலோசனையுடன் இதில் சேரலாம்.

வகுப்பு அவசியமா?

கர்ப்ப காலம்தான் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கும் மனநிலைக்கும் மிக முக்கியமான காலக்கட்டம். கர்ப்ப காலத்தில், தாய்க்கு இருக்கும் உணர்வுகளே குழந்தையின் குணமாக உருவெடுக்க இதுவும் ஒரு காரணம். அதுபோல, ஆரோக்கியமும் தாயிடமிருந்துதான் குழந்தைக்குக் கடத்தப்படும். குழந்தை பெற்றுக்கொள்ளத் திட்டமிடும் பெண்களுக்கு, வகுப்பில் அதற்கான கவுன்சலிங் தரப்படும். கர்ப்பிணிகளுக்கான எளிய யோகாசனங்கள், பிராணாயாமப் பயிற்சிகள், நறுமணம் சூழ்ந்த சூழலை உருவாக்குதல், கற்பனைத் திறனின் மூலம் ஆரோக்கியமான, அழகான குழந்தையை உருவாக்குதல், மனதை அமைதியாக, மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுதல், இசையை குழந்தைக்கு அறிமுகப்படுத்துதல், அறுசுவையையும் சுவைத்தல் போன்ற அனைத்துப் பயிற்சிகளையும் கற்றுக் கொள்ளலாம். இவை, பிரசவ வலியைக் குறைத்து, சுகப் பிரசவத்துக்கு அழைத்துச் செல்லும் வழிகள்.

கர்ப்ப காலங்களில் எப்படி நிற்பது, நடப்பது, உட்காருவது, உறங்கும் நிலை, உடலுழைப்பு தரும் வேலைகளைச் செய்வது எப்படி என்பன போன்ற அனைத்தையும் கற்றுக்கொள்ளலாம். ஒவ்வொருவரின் உடல்நிலை பொறுத்து, அவர்களுக்கான டயட் லிஸ்ட் தரப்படும். அதற்கேற்ப, உணவுகளை உட்கொண்டுவந்தால், குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும்.

குழந்தையை எப்படிக் கையாள்வது?

குழந்தை பிறந்தவுடன், எப்படிக் குழந்தையைத் தூக்குவது, குளிப்பாட்டுவது, பராமரிப்பது, மசாஜ் செய்வது போன்ற பயிற்சிகள் தரப்படும்.பொதுவாகக் குழந்தையை பெரியவர்கள்தான் குளிப்பாட்டுவார்கள். இது தேவையே இல்லை. குழந்தையின் தாயோ, தந்தையோ குழந்தைகளைக் குளிப்பாட்டுவதே சரி. இதனால், குழந்தைக்கும் பெற்றோருக்குமான நெருக்கமும் அரவணைப்பும் உருவாகும். பிறந்தது முதல் 1 மாதம் வரை குழந்தைக்கு கறுப்பு, வெள்ளை மட்டுமே தெரியும். ஆதலால் ஃப்ளாஷ் கார்டுள் காண்பிப்பதன் மூலம், குழந்தைகளுக்கு நிறங்களை அறிமுகப்படுத்த முடியும். டி.வி, லேப்டாப், மொபைல் போன் போன்றவற்றைக் காண்பிப்பதைத் தவிர்க்கலாம். அதிலிருந்து வரும் கதிர்வீச்சுகள், குழந்தையின் கண்களைப் பாதிக்கும். கருவானது முதல் பிறந்த மூன்று மாதம் வரை தேவையான அனைத்து ஆலோசனைகளும், குறிப்புகளும் தரப்படுவதால் குழந்தைகள் நல்ல மனநிலையுடன் ஆரோக்கியமாக பிறந்து, வளரும். மகிழ்ச்சியாக இருக்கும் தாயே நல்ல உணர்வுகள் நிறைந்த ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும்.

p28aa

பாசிட்டிவ் குழந்தைகளுக்கு… தாயாகும் முன்னே

கருவுற்ற பெண்கள் நிறைய கண்ணாடி வளையல்கள் அணிந்தால், வயிற்றில் இருக்கும் குழந்தை சத்தத்தை உணரத் தொடங்கும். புல்லாங்குழல், வீணை, வயலின் போன்ற இசைக்கருவிகளின் இசையைக் கேட்கலாம்.

எலுமிச்சை, சந்தனம், ரோஜா, மல்லிகை, லாவண்டர் போன்ற நறுமணங்களைச் சுவாசித்தால், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு வாசனை அறிமுகமாகும்.

நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுத்துப் படிப்பது, சின்ன சின்ன க்ராஃப்ட் வேலைகளைச் செய்வது போன்றவை மூளைக்கும் மனதுக்கும் வேலை தருவதால், குழந்தையின் மனநிலை நல்லதாக இருக்கும்.

உடலுழைப்புக்கான வேலைகள், யோகப் பயிற்சி, கோலம் போடுதல் போன்றவை பிரசவத்தை எளிதாக்கும். இவற்றை மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகு செய்யலாம்.

குழந்தை ஆரோக்கியமாகப் பிறந்துவிட்டது, குழந்தை அழகாக இருக்கிறது, மகிழ்ச்சியாக உள்ளது என்பன போன்ற கற்பனையில் உதிக்கும் நேர்மறையான சிந்தனைகள், தேவைகளை டைரியில் எழுத வேண்டும். இதுபோல மகிழ்ச்சியான அனுபவங்களை அனுபவிப்பதுபோல எழுதிப் பழகினால், அதுபோலவே நடக்கும்.