டியர் மேடம், என் வயது 26. ஐந்து வருடங்களாக ஒருவரைக் காதலித்து, சமீபத்தில் திருமணமும் செய்துகொண்டேன். காதலுக்கு எங்கள் வீட்டில் பெரிதாக எதிர்ப்பில்லை. ஆனால், கணவர் வீட்டாருக்குப் பிடிக்கவில்லை. அவர்களை எதிர்த்தே கல்யாணம் செய்தோம். கல்யாணத்துக்குக்கூட அவரது பெற்றோர் வரவில்லை.
எம்.பி.ஏ. படித்திருக்கிற நான், வேலைக்குச் செல்லவில்லை. ஹனிமூனெல்லாம் முடிந்து, குடும்பத்தில் செட்டிலான பிறகு வேலை தேடலாம் என்கிற எண்ணத்தில் இருந்தேன். எத்தனை கனவுகளுடனும் கற்பனைகளுடனும் கல்யாணம் செய்து கொண்டேனோ, அவ்வளவும் இன்று ஏமாற்றமாகப் போய்விட்டன. கல்யாணம் முடிந்து, நாங்கள் சிங்கிள் பெட்ரூம் ஃபிளாட்டில் குடியேறினோம்.
ஆசை ஆசையாக புது வாழ்க்கையை ஆரம்பிக்க இருந்த நேரம்… கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் என் மைத்துனர்கள் (கணவரின் தம்பிகள்) இருவரும், ஹாஸ்டலில் ஏதோ பிரச்னை என்று எங்கள் வீட்டுக்கு வந்து விட்டார்கள். இன்னும் 2 வருடப் படிப்பு முடிகிற வரை அவர்கள் எங்களுடனேயே இருக்கப் போகிறார்களாம். அவர்களைப் பார்த்ததும் கணவருக்குத் தாங்க முடியாத சந்தோஷம்.
எனக்குத்தான் தர்மசங்கடமாக இருக்கிறது. இரவுவேலை முடிந்து, கணவர் தாமதமாகத்தான் வீட்டுக்கு வருவார். தம்பிகளோ, சீக்கிரமே வந்து விடுவார்கள். டி.வியை சத்தமாக வைத்துக்கொண்டு அமர்க்களப்படுத்துவார்கள். சரி… கணவர் வந்த பிறகாவது அவருடன் ஆசையாக நான்கு வார்த்தைகள் பேசலாம் என்றால் அதுவும் முடியாது. இருப்பதோ ஒரே ஒரு பெட்ரூம்.
அங்கே நாங்கள் என்ன பேசினாலும், பக்கத்து அறையில் இருக்கும் அவரது தம்பிகளுக்குக் கேட்கும். இதனாலேயே எங்களுக்குள்ளான அந்தரங்க உறவும் பாதித்தது. ஒரு நாள் இது பற்றி கணவரிடமும் பேசினேன். காதலுக்காக தன் வீட்டாரை எதிர்த்துக் கொண்டு வந்ததால், அவருக்கு தம்பிகள் மூலம் விட்டுப்போன உறவுகள் மறுபடி சேராதா என்கிற ஏக்கம் இருப்பது தெரிந்தது. ‘அப்படித்தான் இருக்கும்… கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்’ என்கிறார்.
கணவருக்கு சமைப்பது, துணி துவைப்பது போதாது என்று, அவரது தம்பிகளுக்கும் அத்தனை வேலை களையும் நான்தான் செய்கிறேன். மூன்றே மாதங்களில் எனக்கு எல்லாம் வெறுத்து விட்டது. ஆசைகாட்டி என் கணவர் மோசம் செய்து விட்டாரே எனத் தோன்றுகிறது. என்னால் அந்த வீட்டுக்குள் இயல்பாக இருக்க முடியவில்லை. தற்கொலை எண்ணம்கூட வருகிறது. என் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?
– பெயர் வெளியிட விரும்பாத சென்னை வாசகி.
அன்புத் தோழி,
ஐந்து வருடங்கள் காதலித்ததாகச் சொல்கிறீர்கள். காதலிக்கிற போதுள்ள மனித உறவுகளின் பரிமாணங்கள், கல்யாணத்துக்குப் பிறகு முற்றிலும் மாறிப்போவது இயற்கை. இத்தனை நாள் நாம் காதலித்த பெண்தானே என்கிற எண்ணத்தில், கணவர், மனைவி மீது ஆதிக்கம் செலுத்துவது மிகவும் தவறு. அப்படிச் செய்தால் ஆரம்பத்திலேயே நீங்கள் அதை எதிர்க்க வேண்டும்.
கணவரின் தம்பிகளுக்கும் சேர்த்து, அதுவும் வாலிப வயதில் இருப்பவர்களுக்கு சமைத்துப் போடச் சொல்வதும், துணி துவைத்துத் தரச் சொல்வதும் உங்களை எந்தளவு மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கும் என்பது புரிகிறது. காதலுக்காக வீட்டாரை எதிர்த்துக்கொண்டு வந்த போது பெரிதாகப்படாத உறவுகள், கல்யாணத்துக்குப் பிறகு அவசியமாகத் தோன்றுகிறது உங்கள் கணவருக்கு. அதற்காக புதிதாகக் கல்யாணமான இளம் மனைவி மீது இப்படி பொறுப்புகளை வைப்பது தவறு. மனைவியின் மனதைப் புரிந்துகொள்ளத் தவறியதையும் ஏற்க முடியாது.
நீங்கள் எம்.பி.ஏ. படித்தது, திருமணம் செய்து கொண்டது என எல்லாம் வேறு விஷயங்களுக்காக… இப்படி வேலைக்காரி மாதிரி நடந்து கொண்டு, உங்கள் சுயத்தை இழப்பதற்காக அல்ல. அதை அவருக்குப் புரிகிற படி எடுத்துச் சொல்லுங்கள். உங்களுக்கேற்ற ஒரு வேலையைத் தேடிக் கொள்ளுங்கள். உங்களுக்கான சுதந்திரம் மறுக்கப்படுகிற போது, அதை எதிர்த்து நிற்க வேண்டியது உங்கள் கடமை.
அதே நேரம், கணவருடன் காலம் முழுக்க வாழப் போகிறோம் என்கிற எண்ணத்தை மறக்காமல், பக்குவமாக, யார் மனதும் காயப்படாமல் பேசிப் புரிய வைப்பது உங்கள் சாமர்த்தியம்.இப்போதுதான் வாழவே ஆரம்பித்திருக்கிறீர்கள். எதிர்மறை எண்ணங்களைத் தூக்கிப் போட்டுவிட்டு, பக்குவமாகவும், பொறுமையாகவும் பிரச்னையை அணுகுங்கள்.
கேள்வி :
அன்புள்ள அம்மாவுக்கு,
என் வயது 28. எனக்கு திருமணமாகி, எட்டு வருடங்கள் ஆகிவிட்டன. எனக்கு, ஒரு மகன் உள்ளான். என் தங்கைக்கு திருமணமாகி, நான்கு வருடமாகிறது. என் தங்கைக்கும், ஒரு மகன் உள்ளான். என் கணவர் பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வந்தார். தினசரி வசூலுக்கு போயிருந்த சமயத்தில், என் மொபைல் எண்ணுக்கு என் தங்கை கணவர், வேறு யாரோ போல் பேசி, அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார்.
பணி நிமித்தமாக, ஒரு மாதம் வெளியூர் சென்றிருந்தார் என் கணவர். அந்த சமயத்தில், என் தங்கை கணவர், என் வீட்டுக்கு வந்து, என்னுடன் உறவு கொண்டார். நானும் சபலபுத்தியில் அதற்கு உடன்பட்டேன். பின், அடிக்கடி வரத் தொடங்கினார். பல சமயம் நானே என் கணவர் இல்லாத சமயத்தில், போன் செய்து வரச்சொல்லி உறவு கொள்வோம்.
என் கணவர் மீதும், தாம்பத்ய விஷயத்தில், ஒரு குறையும் சொல்ல முடியாது. என் மீது, முழு நம்பிக்கை வைத்துள்ள கணவர், இந்த விஷயம் தெரிந்தால், உயிரையே விட்டு விடுவார். இது தவறு என்று தெரிந்தும், எப்படி விடுபடுவது என்று தெரியவில்லை.
என் தங்கை கணவரை விட்டு விலகவும், என் தங்கை கணவருக்கு புரியும்படியும், அறிவுரை சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.
— இப்படிக்கு உயிர் மகள்.
பதில்:
அன்புள்ள மகளுக்கு,
உன் கடிதம் கிடைத்தது.
“அண்ணன் பொண்டாட்டி அரை பொண்டாட்டி; தம்பி பொண்டாட்டி முழு பொண்டாட்டி’ என கிராமப்புறங்களில் சொலவடை கூறுவர். “அக்கா புருஷன் அரை புருஷன்; தங்கை புருஷன் முழு புருஷன்’ என்கிற புது சொலவடையை நீ உருவாக்கி விட்டாய்.
உனக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகின்றன. உனக்கு ஏழு வயதில் மகன் இருக்கிறான். தாம்பத்யத்தில் குறை சொல்ல முடியாத கணவன். உன் தங்கைக்கு திருமணமாகி, நான்கு வருடங்கள் ஆகின்றன. தங்கைக்கு மூன்று வயதில் மகன் இருக்கிறான். திருமண பந்தம் மீறிய உறவுகளில் ஈடுபட துடிக்கும் கணவனை பெற்றிருக்கிறாள் உன் தங்கை.
கைபேசி யுகம் இது. கைபேசியால் ஆயிரம் நன்மைகள் இருந்தாலும், தலையாய தீமைகளும் உள்ளன. தவறான உறவுகளுக்கு கை கொடுக்கிறது கைபேசி. கைபேசி மூலம் ஒருவன் ஒரு பத்தினிப் பெண்ணை ஆயிரம் தடவை தொடர்பு கொண்டு பேசினால், பத்தினிப் பெண்ணின் உள்ளத்தையும் சிறிது தடம் புரள செய்து விடலாம். கைபேசி, கல்லையும் கரைக்கும் வீரியம் கொண்டது. உன்னுடைய கைபேசி எண்ணை, உன் தங்கையின் கைபேசியில் பார்த்து தெரிந்து கொண்டே, உன் தங்கை கணவன் ராங்கால் போல் பேசி, முதலில் உன் மனதில் ஆழம் பார்த்திருக்கிறான். ராங்கால் என நினைத்து, நீ ஏதோ வாய் வார்த்தைகளை விட்டிருக்கிறாய். உன் வாய் வார்த்தைளால், உன் பலவீனமான பக்கத்தை புரிந்திருக் கிறான் தங்கை கணவன். ஒரு கட்டத்தில், உன் மீதிருந்த பயம் தெளிந்து போய், உன் வீட்டிற்கே வந்திருக்கிறான். நீ அவனை திட்டவில்லை, அடித்து விரட்டவில்லை, அரவணைத்துக் கொண்டாய். அதையடுத்து, உன் கணவன் வீட்டில் இல்லாதபோது, உன் தங்கை கணவனை நீயே வரவழைத்து உறவு கொள்கிறாய்.
நீ மிக அதிகமாக தமிழ் சீரியல்கள் பார்க்கும் பெண் என நம்புகிறேன். அவைகளில் தான் உறவு கலப்படங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. அந்த நியாயத்தைதான், நீ உன் வாழ்க்கையிலும் எடுத்துக் கொண்டிருக்கிறாய்.
திருமணத்திற்கு முன்னும் பின்னும் சரி, நீ ஆண்களை கவரும் விதமாய், உன் பேச்சு வார்த்தைகளை, அங்க அசைவுகளை வடிவமைத்துக் கொண்டிருக்கிறாய். ஆண்கள் உன்னை கண்டால் சொக்கி போவது உனக்கு ரகசிய சந்தோஷம்.
குடிநோயாளி, போதை பழக்கத்திலிருந்து விடுபட முயற்சித்து தோற்பதை போல, நீயும் இப்பழக்கத்தி லிருந்து வெளிவர முயற்சித்து தோற்றுப் போகிறாய். உணர்ச்சிகள் பெரிய மீனாகின்றன. உறவுகள் நலம், கற்பு நெறி பேணுதல் சின்ன மீனாகின்றன. பெரிய மீன், சின்னமீனை விழுங்குகின்றன. உன் தங்கை பிற ஆடவர் நோக்கினால், உன் தங்கை கணவர் தாங்குவாரா அல்லது உன் கணவர் பிற பெண்டிருடன் தொடர்பு கொண்டால், நீ தாங்குவாயா?
விவரம் தெரிந்த நாளிலிருந்து இன்று வரை, உன் தங்கை உன்னுடன் பழகும் விதத்தை, ப்ரேம் பை ப்ரேம் மனக்கணக்கில் கொண்டு வந்து பார். உன் தங்கை மகன் உன்னை பெரியம்மா என்று ஆசையாய் விளிப்பானே… அதை கேட்கும் சுகம் உனக்கு மறந்து விட்டதா?
இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா மகளே…
உன் கைபேசி எண்ணை மாற்று அல்லது கைபேசி வைத்துக் கொள்ளாதே. தரைபேசி வைத்துக் கொள். இதுவரை நீ செய்த தவறுகளுக்கு, உன் கணவனின் புகைப்படத்தின் முன் நின்று, உன் தலையில் நீயே குட்டிக் கொண்டும், உன் கன்னத்தில் நீயே அறைந்து கொண்டும் தண்டனை வழங்கு.
உன் தங்கை கணவன், உன் கணவன் இல்லாத சமயங்களில் வீட்டுக்கு வந்தால், தயவுதாட்சண்யம் பார்க்காமல் அடித்து விரட்டு. அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்து. கணவருடன் தாம்பத்ய எண்ணிக்கை களை கூட்டு. தமிழ் சீரியல்கள் பார்ப்பதை நிறுத்திவிட்டு, நல்ல புத்தகங்களை படி, பள்ளி படிக்கும் மாணவனுக்கு, மாலை நேரங்களில் பாடம் சொல்லிக் கொடு. உன் தங்கை மற்றும் அவளது மகனிடம் மானசீகமாக மன்னிப்பு கேள்.
மிருகங்களுக்குத் தான் வாழ்க்கையில் ஒரு கொள்கையோ, ஒரு இலக்கோ இராது. நாம் மனிதர்கள். உன்னுடைய வாழ்க்கையில் கற்புநிலை தவறாத கொள்கையும், குடும்பநல இலக்கும் கொண்டு நட. இப்போது உன்னை திருத்திக் கொள்ளாவிட்டால், எதிர்காலத்தில் இன்னும் பல தவறுகள் புரிய ஆரம்பித்து விடுவாய்.
நீ அடுக்களையை பூட்டி வைத்தால், திருட்டுப்பூனை சமையல் பாத்திரங்களை உருட்டிச் செல்லாது. உனக்குதான் அறிவுரை தேவை; தங்கை கணவனுக்கல்ல. அவன் திருந்தாவிட்டால் எங்காவது அடிபட்டோ, உதைபட்டோ, குத்துபட்டோ பிணமாய் கிடப்பான். அவனுக்கு என் அனுதாபங்கள்!