பொதுவாகவே டீன்-ஏஜ் பருவத்தைச் சேர்ந்தவர்கள், தன்னம்பிக்கையை குறைவாகக் கொண்டிருப்பார்கள். தம்மில் தோற்றத்தில் நிறைய குறைகளைக் காண்பார்கள்.
இத்தகைய அச்சங்களும், ஐயப்பாடுகளும் கொண்டவர்களிடம் பழகுவது சிக்கலான காரியம் .சாதாரணமாக நாம் சொல்லுகிற சொற்களை திரித்து அர்த்தப்படுத்திக் கொள்கின்ற போக்கு இந்த கால கட்டத்தில் மிகுந்திருக்கும்.
ஏறக்குறைய எல்லா உறவுமுறையினரிடமும் இந்தக் குளறுபடி இந்தாலும், பெற்றோர்க்கும் பிள்ளைகளுக்கும் இடையில் இப்படிப்பட்ட கருத்து முரண்பாடு ஏற்படுமானால், அது இருசாரார்க்கும் மிகுந்த மனவேதனையை உண்டாக்கும்.
தன் கட்டளைகளை பிள்ளைகள் மீறும்போது தன் அதிகாரத்தையே அவர்கள் தட்டிக் கேட்பதாக அப்பாவுக்குத் தோன்றும் ஏன் தந்தை என்கிற தன் நிலையையே அவர்கள் உதாசினப்படுத்துவதாக நினைப்பீர்கள். ஒரு அப்பாவால் இதைத் தாங்கிக் கொள்ள முடியாது.
சின்ன வயதில் எந்தப் பெண் குழந்தையும் தன் அப்பாவிடம் மிகவும் பாசமாக இருக்கும். அவரை ஆராதிக்கும் இந்த பாசத்திற்கும், ஆராதனைக்கும் பழக்கப்பட்டுபோன ஒரு தந்தையால் தன் டீன்-ஏஜ் மகளின் கலக்கத்தை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது தானே.
தாய்-மகள் உறவு முறை என்பது தகப்பன் – மகள் உறவு முறையிலிருந்து மிகவும் மாறுபட்டது.டீன் -ஏஜ் பருவத்தில் எந்த ஒரு பெண் பிள்ளையும் தன் தாயிடம் நெருக்கத்தை ஏற்படுத்தி கொள்வது இயல்பு.
தந்தையுடன் பகிர்ந்துக்கொள்ள இயலாத அச்சங்களையும், ஐயப்பாடுகளையும் தாயுடன் பகிர்ந்துக் கொள்கிறாள்.
தாயுடன் ஒட்டுதலாக இருக்கின்ற மகள் தன்னுடன் அப்படி இல்லையே என்று தந்தை ஏங்குகிறார். விலக்கி வைக்கப்பட்டது போல் உணருகிறார். இன்னொரு கருத்து கூட இதை மேலும் சிக்கலாக்குகின்றது.
கண்ணோட்டத்தில், பார்வையில், தம் மகள் எப்பொழுதும் குழந்தையாகவே தென்படுகிறாள். அவள் வளர்ந்து கொண்டிருக்கிறாள் என்பதை உணரத் தவறி விடுகிறார். டீன்-ஏஜ் மகளின் ஒவ்வொரு புதிய பழக்கமும் – மகளைப் பற்றி தன் மனதில் தான் பதித்து வைத்திருக்கும் படிமத்திற்கு முரணாக இருப்பதால் அவரை வெறுப்பேற்றுகிறது.
இந்த சூழ்நிலையில் தாய் என்கிற முறையிலும் மனைவி என்கிற முறையிலும் பெண்களுக்கு பெரிய கவலை ஏற்படும், சச்சரவுகளை தவிர்க்கும் பொருட்டு, அப்பாவும் மகளும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்வதையும் தவிர்க்கத் தொடங்குவர்.
வீடே ஒரு போட்டிக் களமாகக் காட்சியளிக்கும்.
“என் விருப்பப் படித்தான் நடப்பேன்” என அடம் பிடிக்கும் 14வயது மகளுக்கும். குடும்பத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முனையும் அப்பாவுக்கும் இடையில் நடக்கின்றன போட்டி, வீட்டை நின்மதியற்றதாக்கிவிடும்.
இவர்கள் இருவருக்கும் நடுவில் ஒரு சமாதான உடன்படிக்கையை ஒரு பெண்ணால் தாயால் ஏற்படுத்த முடியுமா?
அப்பா-தன் மகளிடம் அவ்வளவு கோபம் கொள்வதற்கான காரணம் என்ன என்பதைக் கண்டுபிடியுங்கள். குறிப்பாக எதைப் பற்றி அவர் நச்சரிக்கிறார்? அது புதிதாக உருவான ஒன்றா? அல்லது அப்பா மகளிடம் நெடுங்காலமாகவே குறை காணும் அம்சமா?
குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கூட்டுங்கள் குடும்பத்தினர் அனைவரும் கட்டாயம் கலந்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்துங்கள். ஒவ்வொருத்தரும் எந்த குறுக்கீடுமின்றி ஐந்து நிமிடம் பேச வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள்.
தங்கள் மனதின் மனக்குறைகள் பற்றியும் அவற்றுக்கான மூல காரணங்கள் பற்றியும் விளக்கச் சொல்லத் தூண்டுங்கள்.
“ நம் உணர்வுகளை நம் குடும்பத்தினர் அனைவரும் செவிமடுத்து கேட்கிறார்கள்” என்கிற எண்ணம் ஒவ்வொருவருக்கும் ஏற்படுவது மிகவும் முக்கியம்.
தனிப்பட்ட மனக்குறைகள் இல்லாத குடும்ப உறுப்பினர்களும், இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்ளலாம்.