டீன் ஏஜ் பிள்ளைகள் தன்னைச் சுற்றி உருவாக்கிக் கொள்கிற நட்பு வட்டம்தான் இன்றைய பெற்றோருக்குப் பெரிய தலைவலி. டீன் ஏஜில் புதிதாகப் பூத்த நட்பாக இருக்கும்… ஆனாலும், அதை ஜென்ம ஜென்மமாகத் தொடரும் பந்தமாகவே கற்பனை செய்து கொள்வார்கள். கூடா நட்பாகவே இருந்தாலும், அதைப் பெற்றோர் சுட்டிக்காட்டினால் அலட்சியம் செய்வார்கள். ‘சகவாசம் சரியில்லை…’ எனப் பெற்றோர் புலம்ப, அது பொறுக்காமல் பிள்ளைகள் எதிர்க்க, இருவருக்கிடையிலும் மோதல் வெடிக்கும் வாழ்க்கையின் தர்மசங்கடமான தருணம் இது.
குழந்தைகள் வளர வளர அவர்களது நட்பின் எல்லைகள் மாறும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்… குழந்தைகளாக இருக்கும் போது, அவர்கள் அக்கம்பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடனும், பள்ளியில் சக மாணவர்களுடனும் சேர்ந்து விளையாடுவார்கள். யாரிடம் நட்பு கொள்வது என்பதில் அந்த வயதில் அவர்களுக்குப் பெரிய சாய்ஸ் இருக்காது. அருகில் இருப்பவர்களுடன் நட்பு பாராட்டத்தான் அவர்களுக்குத் தெரியும்.
டீன் ஏஜிலோ நட்பு பற்றிய அவர்களது பார்வை மாறும். யாருடன் நட்பாக இருப்பது என்பதில் அதிக கவனமாக இருப்பார்கள். அந்தஸ்து, பொதுவான விருப்பு, வெறுப்புகள், சுய மதிப்பீடு மற்றும் ஆளுமையின் அடிப்படையில் நண்பர்களைத் தேர்வு செய்வார்கள். இதை ஒரு முக்கியமான மாற்றமாகக் கருதி பெற்றோர் அங்கீகரிக்க வேண்டும்.
குழந்தைப் பருவத்தில் குழந்தைகள் தமது உணர்வு ரீதியான தேவைகளுக்கு பெற்றோர் அல்லது உடன்பிறப்புகளையே தேடுவார்கள்.
பெற்றோரிடமிருந்து விலக ஆரம்பிக்கிற விடலைப் பருவத்தில், அவர்கள் சக வயது நண்பர்களுடன் உணர்வுப்பூர்வமான பந்தத்தை உருவாக்கிக் கொள்ளவே விரும்புவார்கள். புரிதலுக்கும் ஆதரவுக்கும் வழிகாட்டுதலுக்கும் – அவர்களுக்கு பெற்றோரையும் குடும்பத்தாரையும் விட – நண்பர்களே சரியானவர்களாகத் தெரிவார்கள். உங்கள் பிள்ளைகள் பள்ளியில் சக மாணவர்களுடன் கூடி ஒரே கருத்துடைய கட்சிகளை உருவாக்குவார்கள். அவர்களுடைய கருத்துகள் உங்கள் கருத்துகளுக்குப் புறம்பானதாக இருக்கலாம். இது டீன் ஏஜில் ஏற்படுகிற இயல்பான ஒரு விஷயம்தான். ஆனாலும், பெற்றோரை உறுத்தவே செய்யும்.
பெரும்பாலும் ஆரம்பத்தில் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களுடனேயே பல குழந்தைகள் நட்பு கொள்கிறார்கள். அந்த வயதில் மிகச்சிறந்த நட்பு என்பது எப்போதும் இரு சிறுவர்கள் அல்லது இரு சிறுமிகளுக்கு இடையில்தான் இருக்கும். டீன் ஏஜ் ஆண்களின் நட்புக்கும், அந்த வயதுப் பெண்களின் நட்புக்கும் வித்தியாசமுண்டு. ஆண்களின் நட்பில் விளையாட்டு மாதிரியான நடவடிக்கைகள் அதிகமாகவும், பெண்களின் நட்பில் பேச்சும் பகிர்தலும் அதிகமாகவும் இருக்கும்.
டீன் ஏஜை தொட்டதும் அவர்களது ஹார்மோன் மாற்றங்களின் விளைவாக, நட்பு என்பது பாலினம் கலந்த நட்பாக மாறுகிறது. இன்னும் சொல்லப் போனால், அந்த வயதில் எதிர்பாலினத்தாரிடம் எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளத் தோன்றும். இதுவும் அந்த வயதுக்கே உரிய இயல்பான மாற்றம்தான். சரியாகப் புரிந்து கொள்கிற பெற்றோருக்கு இந்த விஷயத்தில் பயமிருக்காது. டீன் ஏஜில் உருவாகிற நட்பானது, பிற்காலத்தில் அவர்கள் தொழிலில் கூட பணிபுரியும் வேற்று பாலினத்தாருடனோ, மேலதிகாரியுடனோ எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான பயிற்சிக்குத் தேவையான விஷயங்களையும் கற்றுத் தருகிறது.
நட்பு என்பது அவர்களுக்கு இன்னொரு குடும்பம் மாதிரி. வீட்டில் கிடைக்காத புதிய உலக அனுபவம் அவர்களுக்கு அந்த நட்பு வட்டத்தில் கிடைப்பதாக உணர்வார்கள். நண்பர்களுக்கிடையே உணர்வுப் பரிமாற்றங்கள் சாத்தியம். ஒரு ஆண் பெண்ணிடமும், ஒரு பெண் ஆணிடமும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது அந்த நட்பு வட்டத்தின் மூலம் பாலுணர்வு அற்ற நிலையில் அவர்கள் அறிவார்கள்.
ஆயினும் அந்த பந்தம் இனக்கவர்ச்சியாக மாறுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆகையால், உங்கள் பிள்ளைகளிடம் உங்களுக்கு இணக்கம் தேவை. பெரும்பாலான பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் நட்பு வட்டம் பற்றி பிள்ளைகளிடம் கேட்டுத்தெரிந்து கொள்வதில்லை. தம் பிள்ளைகளைப் பற்றி அவர்களிடம் சேரும் செய்திகள் இரண்டாம் தரப்பாக, மற்ற பிள்ளைகளிடமிருந்து சேகரிக்கப்பட்டவையாகும்.
இவ்வாறு சேகரித்த செய்திகள் திரித்துக் கூறப்பட்ட செய்திகளாக இருக்கலாம். அச்செய்திகளின் அடிப்படையில் நீங்கள் எடுக்கும் நடவடிக்கை சரியற்றதாகவும் இருக்கலாம். அப்படி நீங்கள் நடவடிக்கை எடுப்பதும் தவறு. பிள்ளைகளிடம் நட்போடு உறவாடி அவர்களிடமிருந்தே அவர்களுடைய நட்பைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம்.