Home குழந்தை நலம் டயாபரால் குழந்தைக்கு அசௌகரியமா ஆபத்தா?

டயாபரால் குழந்தைக்கு அசௌகரியமா ஆபத்தா?

25

குழந்தை பிறப்பதற்கு முன்பே, மிருதுவான பழைய பருத்தித் துணிகளைத் தேடி எடுத்து, துவைத்துக் காய வைத்து, கத்தரித்து, டஜன் கணக்கில் லங்கோடு தைத்துத் தயாராக வைத்திருப்பார்கள் அந்தக் காலத்து அம்மாக்கள். இன்று லங்கோடு என்றால் எத்தனை பேருக்குத் தெரிகிறது? குழந்தை பிறப்பதற்கு முன்பே, பாக்கெட், பாக்கெட்டாக டயாபரை வாங்கி அடுக்கும் கலாசாரம், பெருநகரங்களில் மட்டுமின்றிபட்டித் தொட்டிகளில் கூட வந்துவிட்டது. போதாக்குறைக்கு தொலைக்காட்சி விளம்பரங்களும், ‘ஒரு தடவை குழந்தைக்கு டயாபர் மாட்டிவிட்டால் ஆறுமணி நேரம் தாக்குப்பிடிக்கும். அம்மாக்கள் நிம்மதியாக இருக்கலாம்’ என சோம்பலை விதைக்கின்றன.

குழந்தைகளுக்கு டயாபர் பயன்படுத்துவது நல்லதா? கெட்டதா?

நிபுணர்களிடம் பேசினோம்…‘‘குழந்தை சிறுநீர் கழித்தால் நிறம் மாறி காட்டிக்கொடுக்கும் டயாபர் கூட வந்துவிட்டது. குழந்தையின் சிறுநீர் அல்லது மலம் பட்டவுடன் அலாரம் அடித்து பெற்றோர்களை உஷார் படுத்தும் டயாபர்கள் வெளிநாடுகளில் வந்துவிட்டன. டிஸ்போசபிள் டயாபரில் மூன்று அடுக்குகள் உள்ளன. உள் அடுக்கு பாலிப்ரோப்பிலைன் என்னும் மென்மையான பொருளால் ஆனது. இதுதான் சிறுநீர் போன்ற திரவப் பொருட்களை உள்ளிழுத்து நடு அடுக்குக்கு கடத்துகிறது. மேலும் குழந்தையின் தோலோடு நேரடியாக ஒட்டி இருக்கும் பகுதி என்பதால் பெட்ரோலியம் ஜெல்லி, கற்றாழை சாறு, வைட்டமின் இ போன்ற பொருட்கள் சிறிய அளவில் கலக்கப்படும். இதனால் குழந்தைக்கு உராய்வு ஏற்படுவது குறையும்.

நடு அடுக்கு மரக்கூழ் மற்றும் சூப்பர் அப்சார்ப்டு பாலிமர்களால் ஆனது. அப்சார்ப்டு பாலிமர் திரவ நிலையில் உள்ள கழிவுகளை உள்ளிழுத்துக் கொண்டு வெளிப்புறத்தை உலர்வாக வைக்கிறது. வெளி அடுக்கு பாலிஎத்திலின் எனப்படும் பிளாஸ்டிக்கால் ஆனது. இது கழிவுகளை கசிய விடாமல் இருக்கச் செய்கிறது. இது தவிர சில டயாபர்களில் நறுமணத்துக்கு சில பொருட்களை சேர்க்கிறார்கள். பிரபலமான கார்ட்டூன் கதாபாத்திரங்களை கூட அச்சிடுகிறார்கள். இயற்கையான பொருட்களால் செய்யப்படுவதால் பக்க விளைவுகளை உருவாக்குதில்லை. டயாபரில் இருக்கும் வேதியியல் பொருட்கள் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என சில ஆய்வுகளில் சொல்லப்பட்டாலும் எவ்வளவு நேரம் அதை குழந்தைக்கு பயன்படுத்த வேண்டும் என்ற புரிதல் அவசியம். தேவையான நேரத்தில் மட்டுமே குழந்தைக்கு போட்டு டயாபரை கழட்டிவிட வேண்டும்.

இல்லாவிட்டால் சிறுநீரில் இருக்கும் அமோனியா, யூரியா போன்ற கழிவுப்பொருட்கள் குழந்தையின் தோலை பாதிக்கும். சொறி, கொப்புளம் போன்றவற்றை உருவாக்கும். சில சமயம் நாப்கினில் உள்ள வேதியியல் பொருட்களின் ஒவ்வாமையால் கூட சரும பாதிப்பு (சொறி) ஏற்படலாம். இதை ‘டயாபர் ரேஷ்’ என்று அழைப்பார்கள். எந்நேரமும் குழந்தைக்கு டயாபர் அணிவித்து இருப்பதாலும் இந்தப் பிரச்னை ஏற்படும். டயாபர் குப்பைகளால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. டயாபரின் நடுஅடுக்கில் உள்ள சோடியம் பாலிஅக்ரிலேட் வேதிப்பொருள் தான் திரவத்தை உறிஞ்சும் செயலை செய்கிறது. இது கான்டாக்ட் டெர்மடைடிஸ் என்னும் தோல் நோயை உருவாக்கக் கூடியது. டயாபரை உருவாக்கும் தொழிற்
சாலைகளில் சோடியம் பாலிஅக்ரிலேட் வேதிப்பொருள் தொழிலாளர்களுக்கு சுவாச நோய்களை உருவாக்கும் தன்மை கொண்டது. டயாபரின் வெண்மை நிறத்துக்கு குளோரின் ப்ளீச்சிங் பொருளாக சேர்க்கப்படுகிறது.

நடு அடுக்கு மெத்தென்று குஷன் போல இருப்பதற்காக மரக்கூழ் சேர்க்கப்படுகிறது. குளோரினும் மரக்கூழும் சேர்ந்து டையாக்ஸின் என்னும் வேதிப்பொருளை உருவாக்கும். டையாக்ஸின் நரம்பு மண்டலத்தையும் நாளமில்லா சுரப்பிகளையும் பாதிப்படைய செய்யும் தன்மையுடையது. அதிக அளவில்டையாக்ஸினில் புழங்கினால் கேன்சர் கூட வரும். அதனால் டயாபர் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சில விதிமுறைகள் உள்ளன.
கேன்சரை வரவழைக்க கூடிய டையாக்சின் வகையை டயாபரில் பயன்படுத்தக் கூடாது.
எந்த அளவு டையாக்சின் உள்ளது என்பதை உறையில் குறிப்பிட வேண்டும்.
குளோரின் அல்லாத, வேதிப்பொருட்கள் அதிகம் இல்லாத டயாபர்களை அதிகம் பிரபலப்படுத்த வேண்டும்.
குழந்தைகள் எளிதில் பிரிக்காதவாறு உறையை அமைக்க வேண்டும். அப்புறப்படுத்தும் முறையின் விளக்கத்தையும் உறையில் அச்சிட வேண்டும்.
முறையாக அப்புறப்படுத்தாவிட்டால் அதில் உள்ள பிளாஸ்டிக், டையாக்சின், குளோரின் எல்லாம் கழிவுகளுடன் சேர்ந்து பல நோய்களை பரப்பும். ஆனால், இந்த விஷயங்களை டயாபர் தயாரிக்கும் எல்லா நிறுவனங்களும் கடைப்பிடிக்கின்றனவா என்பது விவாதத்துக்குரிய விஷயமாகும். டயாபரை பயன்படுத்தும் முறையை தாய்மார்களுக்கு சொல்லிக் கொடுத்தல்அவசியமாகும். குழந்தைக்கு ‘டயாபர் ரேஷ்’ வராமல் தடுக்கவும் தெரிய வேண்டும். சிலர் அடிக்கடி குழந்தைகளுக்கு டயாபரை மாற்ற மாட்டார்கள். குழந்தையின் தோலானது மென்மையான கெரட்டின் செல்களால் ஆனது.

அடிக்கடி மாற்றாமல் வைத்திருப்பதால் உராய்வு ஏற்பட்டு புண்கள் உருவாகும். சிறுநீர், மலம் இவையெல்லாம் நெடுநேரம் குழந்தையின் தோலோடு ஒட்டி இருப்பதால் அதில் உள்ள அமோனியா, யூரியா போன்ற கழிவுப்பொருட்கள் தோல் சார்ந்த நோய்களை ஏற்படுத்தும். தோல் சிவந்து தடித்து விடும். அப்படியே விட்டால் கொப்புளமாக மாறிவிடும்…’’ என பாதகமான விளைவுகளை சொல்லும் பிரியா ராமநாதன் தவிர்க்கும் வழிகளையும் சொல்கிறார்.

‘‘டயாபரை தொடர்ந்து குழந்தைக்கு போடக்கூடாது. துணியால் செய்யப்பட்ட டயாபர்களை பயன்படுத்தலாம். டயாபர் ஈரமானால் உடனே மாற்றி விட வேண்டும். சோம்பல் கூடாது. பயன்படுத்தியடயாபரை திரும்பவும் பயன்படுத்தக் கூடாது. டயாபருக்கு பதில் முடிந்த அளவு மெல்லிய துணிகளைபயன்படுத்துவது இன்னும் நல்லது. 2-3 மணி நேரத்துக்கு ஒரு முறை டயாபரை மாற்றுவது அவசியம். குழந்தையின் தோலில் விரிசல் அல்லது சிவப்பாக புண்கள் எதுவும் இருக்கிறதா என்பதை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். டயாபர் அணிவிப்பதற்கு முன் அந்தப் பகுதியில் ரேஷ் க்ரீம் தடவி விடுவது குழந்தைக்கு பாதுகாப்பளிக்கும். மலம் போகும் பகுதியில் அடிக்கடி சோப் போட்டு கழுவுவதை தவிர்ப்பது நல்லது. அது டிடெர்ஜென்ட்அலர்ஜியை ஏற்படுத்தும்.

சுத்தம் செய்ய வேண்டிய பகுதியை சுத்தமான துணியால் ஒற்றி எடுத்தால் போதும். ஐஸ்லேண்ட் நாட்டில் இருந்து வரும் ஸ்பிரிங் வாட்டர் இப்போது மருந்துக்கடைகளில் கிடைக்கிறது. ‘டயாபர் ரேஷ்’ உள்ள இடத்தில் இதை ஸ்பிரே செய்தால் புண்கள் ஆறும். குழந்தை அழுதால் டயாபரில் ஏதாவது பிரச்னை உள்ளதா என்பதை சோதிப்பது அவசியம். குழந்தைகளுக்கு முறையாக டாய்லெட் போகும் பழக்கத்தை எட்டு மாதத்தில் இருந்தே ஆரம்பித்து விட வேண்டும். அவசரத் தேவைக்காக மட்டுமே டயாபரை பயன்படுத்த வேண்டும்…’’ டாக்டர் விக்ரம்.கே.வெங்கடேஷ், பச்சிளம் குழந்தைகள் நிபுணர் ‘‘டயாபரை வசதிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். பயணம் செய்யும் போது அல்லது ஒரு விழாவுக்கு செல்லும் போது அணிவித்துவிட்டு, வீட்டுக்கு வந்தவுடன் முதல் வேலையாக கழற்றி விட வேண்டும்.

குழந்தையை இலகுவாக வைப்பது அவசியமாகும். அதிக நேரம் டயாபர் போடும் போது ஒருவித எரிச்சல் உருவாகும். சரியான முறையில் டயாபரை அணிவிக்கும் விதம் தாய்க்கு தெரிந்து இருக்க வேண்டும். குழந்தையின் தோலில் நீர்ச்சத்து குறைவாக இருக்கும். இதனால் டயாபரை அதிக நேரம் அணியும் போது சிறுநீரில் அல்லது மலத்தில் உள்ள வேதியியல் பொருட்கள் குழந்தையின் உடலை பாதித்து, தோல் பிரச்னைகளை உருவாக்கும். இந்தியாவின் தட்பவெப்ப நிலைக்கு டயாபரை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. நம் நாட்டில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பால் கொடுக்கவோ அல்லது டயாபரை மாற்றி சுத்தப்படுத்தவோ, குழந்தைகளுக்கான போதுமான கழிப்பிடங்கள் இல்லை. வெளிநாடுகளில் இதற்கெல்லாம் தனி இடங்கள் உள்ளன. இவற்றை அதிக அளவில் பொது இடங்களில் அமைப்பதன் மூலம் டயாபர் பயன்படுத்தும் பழக்கத்தை மக்களிடையே வெகுவாக குறைத்து விடலாம். தரமான டயாபர் களை வாங்கிப் பயன்படுத்துவதும் அவசியம். டிஸ்போசபிள் டயாபர்களை விட துணி டயாபர்கள் சிறந்தவை.’’