Home சூடான செய்திகள் சென்னை முதல் கொல்கத்தா வரை: போதை கும்பலில் பெண் தலைவிகள்

சென்னை முதல் கொல்கத்தா வரை: போதை கும்பலில் பெண் தலைவிகள்

37

201605151350042789_Chennai-to-KolkataDrug-gangMatriarch_SECVPFஇந்தியாவில் போதைப்பொருள் வியாபாரத்தில் அடிமட்டக் கூலிகளாய் பெண்கள் இருந்த நிலை மாறி, அவர்களே தலைவிகளாய் தலைமையேற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. நாடெங்கும், போதை ராணிகளின் ஆளுகையின் கீழ் இந்த மிதப்பு சாம்ராஜ்ஜியம் ஜாம் ஜாமென்று நடக்கிறது.

டெல்லி, கொல்கத்தா தொடங்கி சென்னை வரை இந்த நிலை நிலவுவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொல்கத்தாவின் போதைப்பொருள் மாபியா கும்பல் ஒன்றின் தலைவி, தீப்தி. இவர் மீது எண்ணற்ற வழக்குகள் இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிரடியாக தனது போதை வியாபாரத்தை நடத்தி வருகிறார். தனது ஏரியா காக்கிச் சட்டைகளுடன் இவருக்கு நெருங்கிய உறவு இருப்பதால் போலீஸ் இவரை நெருங்கியதேயில்லை. ஆனால் ஒருவழியாய் 2011–ல் இவரை போலீஸ் சுற்றிவளைத்தது.

‘‘கொல்கத்தா நகரின் பல பகுதிகள் இந்தப் பெண்ணின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. துறைமுகப் பகுதி முதல் தாக்கூர்பூர், பெகேலா வரை இவரின் ராஜாங்கம் பரந்து விரிந்திருந்தது’’ என்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி.

நடுத்தர வயது பெண்ணான தீப்தியின் போதை வாடிக்கையாளர்களில் கொல்கத்தாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களும் அடங்குவர்.

இப்படி நாடெங்கும் பல ‘தீப்தி’கள் இருக்கிறார்கள். அவர்களில் பலர் இத்தொழிலுக்குள் பலவந்தமாக இழுக்கப்பட்டார்கள். ஆனால் இன்று அவர்களே விரும்பியே இத்தொழிலில் ஈடுபடுகிறார்கள்.

தீப்தியைப் போல இன்னொரு உதாரணம், சண்டிகாரைச் சேர்ந்த 50 வயது பாலா. 2013–ம் ஆண்டு கைது செய்யப்பட்ட பாலாவுக்கு கடந்த 2015–ல் பத்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பாலா கையாண்டு வந்த போதைப்பொருள், ஹெராயின். ஆரம்பத்தில் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டுவந்த பாலா, பணம் கொட்டிய போதைப்பொருள் வியாபாரத்துக்கு பின்னர் மாறிவிட்டாள்.

சண்டிகாரின் 38–வது செக்டார் பகுதியில் செயல்பட்டுவந்த இவருக்குக் கீழே ஒரு சுறுசுறுப்பான இளைஞர் படை இருந்தது. அவர்கள், பைக்குகளில் சீறிச் சென்று வாடிக்கையாளர்களுக்கு போதைப்
பொருட்களை டெலிவரி செய்துவந்தனர். இவருக்கு போதைப்பொருள் வந்த மூலாதாரம் எது என்று போலீசாரால் இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை.

‘போதைப்பொருள் வியாபாரத்தைப் பொறுத்தவரை ஆண், பெண் பேதமில்லை’ என்கிறார், தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு முன்னாள் அதிகாரி ஒருவர்.

போதைப்பொருள் பெண்கள் பெரும்பாலும் கஞ்சா, அபின், பார்ட்டிகளில் பயன்படுத்தப்படும் போதைப்பொருட்கள் போன்றவற்றை வினியோகம் செய்கின்றனர். இப்பெண்களின் உபயத்தில் பஞ்சாப்பில் ‘புக்கி’ எனப்படும் ஒருவகை அபின் உமி வினியோகம் தாராளமாய் நடக்கிறது. இது மலிவானதுதான். ஒரு பொட்டலத்தின் விலை ரூ. 50. இதை விற்பனை செய்யும் பெண் புள்ளிகளில் ஒருவர், பிரகாஷோ கவுர்.

கொல்கத்தாவில் இந்த போதைப் பொருள் பெண்களின் ‘நெட் ஒர்க்’ படுபயங்கரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. பாபி, மெகதாப் பீபீ, லட்சுமி, இவரது மகள் சரஸ்வதி, சுமித்ரா தேவி ஜாதவ்… போன்றவர்கள் அவர்களில் சிலர்.

போதைப் பொருள் விற்பனை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் அதிகரித்திருக் கிறது என்கிறார், இதுதொடர்பாக வழக்குகளில் வழக்கமாக ஆஜராகிவரும் ஒரு வழக்கறிஞர்.

‘முன்பெல்லாம் இந்த மாதிரி குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் பெண்களின் எண்ணிக்கை வெகு குறைவாக இருந்தது’ என்கிறார் இவர்.

போதை தொழிலில் ஈடுபடுவது ஆண்களை விட பெண்களுக்கு வசதியாக இருக்கிறது என்று சொல்கிறார் இன்னொரு போலீஸ் அதிகாரி.

‘‘போதை பிசினஸ் விறுவிறுப்பாக நடைபெறுவது இரவில்தான். சட்டப்படி நாங்கள் அந்த நேரத்தில் பெண்களை கைது செய்ய முடியாது’’ என்று கூறுகிறார் இவர்.

மற்றொரு நடைமுறைப் பிரச்சினை, பெண்களை பெண் போலீசாரை கொண்டுதான் சோதனையிட வேண்டும். ஆனால் பெண் போலீசாருக்கோ பற்றாக் குறை. தவிர, போலீஸ் பிடியில் இருந்து தப்பிப்பதற் காக இந்த போதை ராணிகள் எந்த எல்லைக்கும் செல்லத் தயங்குவதில்லை.

ஒருமுறை போதை கும்பல் தலைவி ஒருத்தியை போலீஸ்காரர் ஒருவர் துரத்திச் சென்றபோது அப்பெண் சட்டென்று தனது ஆடைகளைக் களைந்து அம்மணமாக நின்றார். அப்புறம் என்ன, போலீசார் திரும்பிவந்துவிட்டார். மீண்டும் பெண் போலீசாரை அழைத்துக்கொண்டு குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றபோது அந்தப் பெண்மணிக்கான தடயமே அங்கு இல்லை.

மும்பையில் பார்ட்டிகளில் பயன்படுத்தப்படும் போதைப்பொருளான மெபோடிரோனின் விற்பனை தலத்தின் சங்கேதப் பெயர், ‘மியாவ் மியாவ்’ தெரு. இந்தத் தெரு முழுக்க, ‘பேபி’ என்றழைக்கப்படும் 55 வயதுப் பெண்மணியான சசிகலா பட்னாகரின் கட்டுப்பாட்டில் இருந்தது.

மூன்று மாநில போலீசார் முழுமூச்சில் தேடி கடைசியாக கடந்த 2015 மார்ச்சில் பேபியை கைது செய்தனர். எண்ணற்ற இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கி இருந்த பேபி, மும்பை ஒர்லி பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் ஒரு குட்டி வீட்டில் இருந்து செயல்பட்டு வந்தார். ஆனால் புனே, லோனாவாலா நகரங்களில் பேபிக்கு படா படா மாளிகைகள் இருந்தன. மும்பையில் உள்ள இவரது சொத்துகளின் மதிப்பு மட்டும் 15 கோடி ரூபாய்.

போலீஸ் விசாரணையில் வாய் திறந்த பேபி, தனக்கு சாமுவேல் என்ற நபர் போதைப்பொருள் சப்ளை செய்ததாகவும், அது வெளியில் இருந்து மும்பைக்கு வருவதாகவும் கூறினார்.

பேபியால் தொடர்ந்து பல ஆண்டுகள் வெற்றிகரமாகச் செயல்பட முடிந்ததற்குக் காரணம், அவர் பல போலீசாருடன் படுக்கை உறவு வைத்திருந்ததுதான் என்று போலீஸ் வட்டாரத்திலேயே கூறுகிறார்கள்.

‘அந்த விஷயத்தில் அவள் புத்திசாலி. மேலதிகாரி, கீழதிகாரி என்ற பாகுபாடெல்லாம் பார்ப்பதில்லை’ என்கிறார் ஒரு காக்கிக்காரர்.

பேபி– போலீஸ் உறவு கூற்றை நிரூபிக்கும்விதமாக, 2015–ல் மும்பை போலீஸ் கான்ஸ்டபிள் தரம்ராஜ் கலோகேயின் வீட்டில் இருந்து 114 கிலோ மெபோடிரோன் போதைப் பொருளை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றினர். அந்த கான்ஸ்டபிள், தான் பணிபுரிந்த மெரீன் டிரைவ் போலீஸ் நிலையத்திலேயே இன்னொரு 12 கிலோ போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்தார்.பேபிக்கும் கான்ஸ்டபிள் தரம்ராஜுக்கும் இருந்த நெருக்கம், ஊரறிந்த ரகசியம்.

பல்வேறு தடைகள், தடங்கல்களையும் மீறி 2015 ஏப்ரலில் பேபியை போலீஸ் கைது செய்தது. ஆனால் விரைவிலேயே அவர் ஜாமீனில் வெளிவந்துவிட்டார்.

இப்படி கைது செய்யப்பட்டு சிறை சென்றுவந்த பிறகும் பல பெண்கள் போதை தொழிலை தொய்வின்றித் தொடர்வதுதான் ஆச்சரியம்.

சென்னையில் ‘கஞ்சா ராணி’ என்று அழைக்கப்படும் பெண்மணி, இந்தத் தொழிலில் ரொம்பவே சீனியர். 77 வயதாகும் இவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தொழிலில் இருக்கிறார். கள்ளச்சாராயம் தொடங்கி மரிஜுவானா வரை பல்வேறு போதைப்பொருட்களின் மொத்த விற்பனைதாரர் இவர்.

இவர் மீது மட்டும் 40 வழக்குகள் இருக்கின்றன, 5 முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் வயதின் காரணமாகவே எளிதில் ஜாமீன் பெற்றுவிடும் கஞ்சா ராணி, தனது தொழிலை விடுவதாயில்லை. போதை தொழில் போட்டியில் தனது சொந்த மகனையே பலிகொடுத்த பிறகும் இவர் திருந்தவில்லை.

‘போதை தொழிலில் ஆண்கள், பெண்கள் என்கிற வேறுபாடு எல்லாம் இல்லை. சமயங்களில் இந்தப் பெண்கள், ஆண்களுக்கும் ஒரு படி மேலே செல்வார்கள்’ என்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி.