செட்டிநாட்டு முறைப்படி முட்டை பிரியாணி அலாதி ருசியுடையது. அதிலும் செய்முறை ரொம்ப ஈசி, பொதுவாக பிரியாணி வகைகள் அனைத்தையும் சீராக சம்பா அரிசியில் செய்தால் சுமையும் மனமும் அருமையாக இருக்கும். ஒரு முறை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுங்க சாப்பிட்டு விட்டு என்ன சொல்லுறாங்கன்னு பாருங்க. அதன் ருசிக்கு நீங்க அடிமை ஆகிடுவீங்க !!!
தேவையான பொருட்கள் :
தேவையான பொருட்கள் அளவு
முட்டை 6
பிரியாணி அரிசி 1/2 kg
வெங்காயம் 6
தக்காளி 3
பச்சை மிளகாய் 5
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு 6 பல்
தேங்காய் துருவல் 1/2 கப்
கரம் மசாலா தூள் 1 தேக்கரண்டி
மிளகுத் தூள் 2 தேக்கரண்டி
பட்டை ஒரு துண்டு
ஏலக்காய் 2
கிராம்பு 2
நெய் 1/4 கப்
தயிர் 2 டேபிள் ஸ்பூன்
புதினா இலை 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லித் தழை இரண்டு கைப்பிடி அளவு
எண்ணெய் 50 கிராம்
உப்பு தேவையான அளவு
சமைக்கும் விதம் :
அரிசியைக் கழுவிக் களைந்து ½ மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் 6 முட்டையில் 4 முட்டையை எடுத்து வேகவைத்து உரித்துக் கொள்ளவும்.
மீதமுள்ள இரண்டு முட்டையை, பொடியாக நறுக்கிய 1 வெங்காயம், 2 பச்சை மிளகாயைப் போட்டு ஆம்லெட் போட்டு வைத்துக் கொள்ளவும் . ஆம்லெட்டை 4 துண்டுகளாக்கி வைக்கவும்.
பின் 5 கப் தண்ணீரை அடுப்பில் வைத்து, அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும்.
அடுத்து தேங்காய் துருவலை தயிருடன் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், ஒரு கைப்பிடி அளவும் கொத்தமல்லித் தழை அனைத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பின் அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி சூடாக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தக்காளி, மீதமுள்ள மல்லி இலை, புதினா இலை, மிளகுத் தூள் சேர்த்து வதக்கவும். கூடவே கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறவும்.
அடுத்த படியாக வேக வைத்துள்ள முட்டையை ஆங்காங்கே லேசாகக் கீறி, மசாலாவில் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வேகவிடவும்.
கூடவே ஆம்லெட் துண்டுகளைச் சேர்த்துக் கலக்கவும். மசாலா கெட்டியானதும் கொதிக்க வைத்துள்ள தண்ணீர் ஊற்றி, அரிசி சேர்த்து நன்றாகக் கலந்து மூடி போட்டு மூடவும். மிதமான சூட்டில் வேகவிடவும்.
மசாலா கலவை நன்கு திரண்டு கிரேவியானதும் இறக்கி, வைத்து மேலாக நெய் ஊற்றி விடவும். மூடி போட்டு மூடி ½ மணி நேரம் ஆனதும், திறந்து நன்கு கலந்து கிளறி பரிமாறவும்.