சுவீட் சாப்பிடாதவர்கள் இன்றைக்கு யாரும் இருக்கமாட்டார்கள். நீரிழிவு நோயாளிகள் கூட நா ஊறவைக்கும் அல்வா, அதிரசம், மைசூர்பாகு என்றால் கொஞ்சம் டேஸ்ட் பார்ப்பார்கள். ஆனால் ஆசைப்பட்டு சாப்பிடும் இந்த பாரம்பரிய உணவுப்பண்டங்களினால் உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று எச்சரிக்கின்றது
திருவிழா என்றாலே வீட்டில் அதிரசம் இல்லாமல் இருக்காது. அதேபோல் நெய் சொட்டும் அல்வா, மைசூர் பாகு என டப்பா டப்பாவாக வாங்கிவிடுவார்கள். குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களும் சுவீட், காரம் என வெளுத்து வாங்குவார்கள். அதனால்தான் தெருவுக்கு இரண்டு பேக்கரிகள் உருவாகிவருகின்றன. இனிப்பும், காரமும் அதிகமாய் சாப்பிடுவதாலேயே உடல் பருமன் அதிகரித்துவருகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
உணவுப்பண்டங்களில் உள்ள கொழுப்புச்சத்துக்கள் குறித்து அதனால் எந்த அளவிற்கு உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுகிறது என்பது குறித்தும் இளைய தலைமுறையினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக “கன்சியூமர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா’ என்ற தன்னார்வ நுகர்வோர் அமைப்பு ஆய்வு மேற்கொண்டது.
இன்றைக்கு வீடுகளில் இனிப்பு காரங்களை செய்வதற்கு நேரமில்லை. அதனால் பெரும்பாலானோர் கடைகளில் விற்கப்படும் இனிப்பு, காரவகைகளையே வாங்குகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு சென்னையில் உள்ள ஸ்வீட் ஸ்டால்களில் இருந்து அல்வா, மைசூர்பாக், காராபூந்தி போன்றவற்றை ஆய்வுக்கு உட்படுத்தினர்.
நாம் உண்ணும் நூறு கிராம் மைசூர்பாக் இனிப்பில் 5 சதவிகிதம் கொழுப்புசத்து இருக்கிறதாம். பெரும்பாலான கடைகளில் நெய் தவிர வனஸ்பதியினால் செய்யப்பட்ட இனிப்புகள் இருந்தது தெரியவந்தது. இது 20 சதவிகிதம் வரை உடலில் கெட்ட கொழுப்புகளை அதிகரிக்கிறதாம்.
அதேபோல் அதிரசம், அல்வாவிலும் உடலை பாதிக்கும் கொழுப்புச்சத்து அதிகம் காணப்படுகிறதாம். காரபூந்தி, உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற உணவுகளிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்புச்சத்துக்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
பெரும்பாலான இனிப்பு, காரம் பாக்கெட்டுகளில் எத்தனை சதவிகிதம் கொழுப்பு சத்து உள்ளது என்று குறிப்பிடப்படுவதில்லை. இதன் காரணமாகவே பெரும்பாலோனோர் இனிப்பு, காரம் வகைகளை வாங்கி உட்கொள்கின்றனர் என்று இந்த ஆய்வினை மேற்கொண்ட உணவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வை மேற்கொண்ட ஜி. சந்தானராஜன், இது குறித்து கூறியதாவது, நாம் அன்றாடம் உண்ணும் பெரும்பாலான தின்பண்டங்களில், அளவுக்கு அதிகமாக கொழுப்புச் சத்து உள்ளது, ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது. எனவே, பராம்பரிய இனிப்பு, கார வகைகளையும், நாம் அளவோடு உண்ண வேண்டும். இல்லையெனில், உடல் பருமன், இதய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்குக் காரணம் இதில் சேர்க்கப்படும் எண்ணெய், நெய் மற்றும் கார்போ ஹைட்ரேட் போன்றவைதான் இந்த அபாயத்தை அதிகரிக்கின்றன இவ்வாறு அவர் கூறியுள்ளார். இனி கடைகளில் மைசூர்பாக், அல்வா வாங்கி சாப்பிடும்முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து சாப்பிடுவது நல்லது என்று அறிவுறுத்துகின்றனர் ஆய்வாளர்கள்.