Home பெண்கள் பெண்குறி சிஸ்டோசீல் – யோனிக்குள் சிறுநீர்ப்பைப் பிதுக்கம்

சிஸ்டோசீல் – யோனிக்குள் சிறுநீர்ப்பைப் பிதுக்கம்

23

யோனிக்குள் சிறுநீர்ப்பைப் பிதுக்கம் என்பது என்ன? (What is a cystocele?)

சிறுநீர்ப்பைக்கும் யோனி சுவருக்கும் இடையே உள்ள தாங்கு திசுக்கள் மற்றும் தசைகள் பலவீனமாகி விரிவடையும் பிரச்சனையையே யோனிக்குள் சிறுநீர்ப்பைப் பிதுக்கம் (சிஸ்டோசீல்) என்கிறோம்.

இதற்கு பின்வரும் பெயர்களும் உள்ளன:

முன்பகுதி கீழிறங்குதல் (ஆன்டீரியர் ப்ரோலாப்ஸ்)
சிறுநீர்ப்பை கீழிறங்குதல் (பிளாடர் ப்ரோலாப்ஸ்)
தொங்கிய/துருத்திய சிறுநீர்ப்பை
காரணங்கள் (Causes)
தசை பலவீனமடைந்து விரிவாக சாத்தியமுள்ள காரணங்கள்:

கீழ் இடுப்புப்பகுதி பாகங்களைத் தாங்கிப் பிடிக்கும் திசுக்களும் தசைகளும் சேதமடைதல்
மலங்கழிக்கும்போது குடல் அசைவினால் தகைவுறுதல்
கடுமையான அல்லது நாள்பட்ட இருமல்
மலச்சிக்கல்
பளு தூக்குதல்
உடல் பருமன்
யோனியின் வழியே குழந்தை பிறத்தல்
ஈஸ்ட்ரோஜென் அளவு குறைதல்
அறிகுறிகள் (Symptoms)
யோனிக்குள் சிறுநீர்ப்பைப் பிதுக்கத்தின் அறிகுறிகளில் சில:

அடிக்கடி கழிவறைக்குச் செல்லுதல்
சிறுநீர் அடங்காமை
அடிக்கடி சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுகள் ஏற்படுதல்
சிறுநீர்ப்பை பெரிதாகி யோனிக்குள் செல்லுதல்
கீழ் இடுப்புப் பகுதியில் பளுவாக அல்லது சிறுநீர் நிரம்பியிருப்பது போன்ற உணர்வு
உடலுறவில் ஈடுபடும்போது வலி
நோய் கண்டறிதல் (Diagnosis)

கண்டறிந்ததை உறுதிப்படுத்த கீழ் இடுப்புப் பகுதி பாகங்களின் ஆய்வு மற்றும் ஆய்வகப் பரிசோதனைகள் செய்யப்படும்.

இந்தப் பிரச்சனையில் மூன்று வகைகள் உள்ளன:

வகை 1: சிறுநீர்ப்பையின் சிறிதளவு யோனிக்குள் இறங்கும். இது லேசான பிரச்சனையாகும்.
வகை 2: மிதமான வகை – யோனியின் திறப்புக்குள் சிறுநீர்ப்பை இறங்குதல்
வகை 3: சிறுநீர்ப்பை யோனியின் திறப்பின் வழியாக வீங்கி இறங்குதல்
இதற்கான பரிசோதனைகளில் சில:

சிஸ்டோயூரோத்ரோகிராம்: சிறுநீர் கழிக்கும்போது சிறுநீர்ப்பையை எக்ஸ்ரே படமெடுத்து, சிறுநீர்ப்பையின் வடிவம் நன்கு ஆய்வு செய்யப்படும், சிறுநீர் இயல்பாக வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் ஏதேனும் அடைப்புகள் உள்ளதா என ஆய்வு செய்யப்படும்.
யூரோடைனமிக்ஸ்: சிறுநீர்ப்பையின், சிறுநீரைத் தேக்கி வைத்திருக்கும் மற்றும் சிறுநீரை வெளியேற்றும் திறனை மதிப்பிடும் சோதனை.
சிஸ்டோஸ்கோப்பி: குழாய் போன்ற ஒரு கருவி சிறுநீர்த்திறப்பின் வழியாக செலுத்தப்பட்டு சிறுநீர்ப்பை ஸ்கேன் செய்யப்படும், இந்த சோதனையில் சிறுநீர்ப்பையில் ஏதேனும் அடைப்புகள், தவறான செயல்பாடுகள், கட்டிகள் அல்லது கற்கள் உள்ளதா என்று கண்டறியப்படும்.
சிகிச்சை (Treatment)
வழக்கமாக, அறிகுறிகள் கடுமையாக இல்லையென்றால் அல்லது சிஸ்டோசீல் மிதமான நிலையில் இருந்தால் சிகிச்சை தேவையில்லை. எனினும், உடலை கடுமையாக சிரமப்படுத்துதல் அதிக பளு தூக்குதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

இதற்கான சிகிச்சை முறைகள்:

திரவங்கள் உள்ளெடுத்துக்கொள்வதை, குறிப்பாக அதிக சிறுநீர் வரச்செய்கின்ற, காபின் உள்ள பானங்கள் (டையூரட்டிக்ஸ்) எடுத்துக்கொள்வதைக் குறைத்தல்
சிறுநீர்ப்பையை அடிக்கடி காலி செய்தல்
சிறுநீர்ப்பையை முறையாக பயன்படுத்தப் பயிற்சி செய்தல்
ஈஸ்ட்ரோஜென் மாற்று சிகிச்சை
கெகல் பயிற்சிகள்
பெசாரி எனப்படும் சிலிக்கான் அல்லது பிளாஸ்டிக் சாதனம் யோனிக்குள் வைக்கப்படும். யோனிக்குள் சிறுநீர்ப்பை கீழிறங்கும் பிரச்சனை மிதமாக இருந்தால், சிறுநீர்ப்பையை அதன் இடத்திலேயே பிடித்து வைக்க இந்த சாதனம் உதவும்.
தீவிரமான நிலையில் இருந்தால், சிறுநீர்ப்பையை அதன் சரியான இடத்திற்கு நகர்த்தி வைக்க, கட்டமைப்பை மாற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படலாம் (முன்பகுதி சரிசெய்தல்)
தடுத்தல் (Prevention)
உடல் பருமன், அதிக எடை தூக்குதல், மலச்சிக்கல் போன்ற ஆபத்துக் காரணிகள் இருந்தால், அவற்றை சரிசெய்ய சிகிச்சையளிப்பது உதவும். வயது அதிகரிக்கும்போது இயல்பாக இந்தப் பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம் மற்றும் இந்தப் பிரச்சனை தோன்றுவது அதிகரித்து வருதல் போன்ற காரணங்களால் இதனைத் தடுப்பது எல்லா நேரமும் சாத்தியமல்ல.

சிக்கல்கள் (Complications)
மன அழுத்தம், சிறுநீர் வழிதல், நாள்பட்ட சிறுநீர் அடங்காமைப் பிரச்சனை மற்றும் அதனுடன் நோய்த்தொற்றுகள் போன்றவை இதற்கான சிக்கல்களில் சிலவாகும்.

அடுத்து செய்ய வேண்டியவை (Next Steps)
உங்களுக்கு இந்தப் பிரச்சனை இருப்பதாகக் கண்டறியப்பட்டால், எடை குறைக்க முயற்சிக்கவும், அதிக பளுவைத் தூக்குவதைத் தவிர்க்கவும். உங்கள் மருத்துவரின் அறிவுரைகளை முறையாகப் பின்பற்றவும், மருத்துவர் குறிப்பிடும் காலகட்டங்களில் சரியாக மருத்துவரிடம் சென்று அவரது அறிவுரைப்படி நடக்கவும்.