இன்றைக்கு குடும்பத்திற்குள் இருக்கும் உறவினர்களையே நம்ப முடியாத நிலை இருக்கும் போது, வெளியில் இருந்து சொந்தம் கொண்டாடிக்கொண்டு வரும் நபரை எடுத்த உடனே கண் மூடித்தனமாக நம்பிவிடக்கூடாது. ஆண்களை விட பெண்களுக்கு மனமுதிர்ச்சி சற்று அதிகமாகவே இருக்கும். ஒரு ஆண் தன்னிடம் தவறாக பழகுகிறான் என்பதை, அவர்களது உள்ளுணர்வே காட்டிக்கொடுத்துவிடும். அப்படி இருந்தும், அதற்கு இடம் கொடுப்பதால் தான், பொள்ளாச்சியில் நடந்தது போன்ற சம்பவங்களில் சென்று முடிகின்றன.
சில ஆண்கள் உண்மையாகவே அண்ணன் போல நடந்து கொள்கின்றனர். சில பெண்கள் உண்மையாகவே தங்கை போல நடந்து கொள்கின்றனர். இருந்தாலும் பெரும்பாலான ஏமாற்று போர்வளிகள், அண்ணன் என்ற போர்வையில் எளிதாக நெருங்கிப்பழகி, போகப்போக தன்னுடைய விஷத்தை கக்க ஆரம்பிக்கின்றான். எந்த விதத்திலும் மடியாத பெண்ணை, தன்னை நோக்கி இழுக்க வைக்கும் யுக்தியாக, சில ஆண்கள் “அண்ணன்” என்ற ஆயுதத்தை கையில் எடுக்கின்றனர்.
சமீபத்தில் சோஷியல் மீடியாவில், ஒரு பெண்ணின் எல்லா போட்டோக்களுக்கும் கமெண்ட் போட்டுப்பார்த்த ஒருவன், தன்னுடைய ராஜதந்திரம் எடுபடவில்லை என்று, “அண்ணன்கிட்ட கூட பேசமாட்டியா.?” என்று உருகி பதிவிடுகிறேன். உடனே அந்த பெண் பதிலுக்கு கமெண்ட் செய்கிறது. இது கண் கூடாக, நான் பார்த்தது. இப்படித்தான் தொடங்குகிறது ஏமாற்று வேலை. அண்ணன் என்ற ஒற்றை வார்த்தையில், சிறுமிகளும், டீன் ஏஜ் பெண்களும் மயங்கிவிடுகின்றனர்.
அந்த அண்ணன் அடுத்து எனென்ன செய்யப்போகிறான் என்று தெரியாமல், அப்பாவித்தனமாக சென்று ஆபத்தில் சிக்கிய பெண்களும் உண்டு. ஒரு பெண் குழந்தையை வளர்க்கும் போது, “வெளியே போகாதே மேசமானவர்கள் நிறைய இருக்கிறாங்கன்னு” சொன்ன நிலை மாறி, “வீட்டிற்குள்ளும் மோசமானவங்க இருக்காங்க..பத்திரமா இருன்னு” சொல்லும் நிலைக்கு காலம் வேகமாக ஓடிவிட்ட நிலையில், வெளியில் இருந்து சொந்தம் கொண்டாடிக்கொண்டு வருபவனை எப்படி நம்ப முடியும் சொல்லுங்கள்..?