பக்குவமற்ற இளம் ரீன் ஏஜ் வயதுடைய பிள்ளைகள் நல்லது கெட்டது எது என்பது பற்றி சீர்தூக்கி பார்த்து தீர்மானங்களை எடுக்க முடியாத வயதினர். இவர்களின் அனுபவமற்ற தன்மையும் அறியாமையும் இவர்கள் தவறுகளில் சிக்குவதற்கு காரணமாக இருக்கின்றன. இவர்களது நடவடிக்கைகள் மீது பெற்றோர் கண்காணிப்பாக இருப்பதுடன் அவர்களது மனநிலைகளை புரிந்து அவர்களுக்கு ஒரு நல்ல ஆலோசகராகவும் அவர்களுடன் நட்பாகவும் அதே நேரம் கட்டுக்கோப்பாகவும் அவர்களை வழி நடத்த வேண்டும். ஆனால், பெற்றோர்களோ இன்றைய பொருளாதாரம், தமது முன்னேற்றங்கள், தமது உயர்கல்வி, பதவி உயர்வு, போட்டிகள், பொருள்தேடுதல் மற்றும் அவர்களின் தனிப்பட்ட நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து முழு மூச்சாக ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள். இந்நிலையில் தமது பிள்ளைகள் கல்வி நடவடிக்கைகளிலேயே தம்மை முற்றும் முழுதாக ஈடுபடுத்தியிருக்கிறார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் இருந்து வருகிறார்கள். இறுதியில் தமது பக்குவமற்ற வயதிலுள்ள பிள்ளைகள் விடுவிக்கப்பட முடியாத சிக்கல்களில் சிக்கிய பின்னரே திரும்பிப் பார்க்கின்றனர்.
ரீன் ஏஜ் இளம் வயதினருக்கு எவ்வாறான வழிகளில் தவறான தொடர்புகள் ஏற்பட முடியும்?
இவ்வாறான இளம் வயதினருக்கு சில சந்தர்ப்பங்களில் வீடுகளில் தனிமையே துணையாகிறது. இவர்களுக்கு கண்காணிப்பற்ற தனிமை என்பது மிகவும் ஒரு ஆபத்தான விடயம் என்பதை எவரும் உணர்வதில்லை. இப்பராயத்தினர் இரு வழிகளில் தவறான தொடர்புகளுக்கும் சிக்கல்களுக்கும் முகம் கொடுக்கிறார்கள். முதலாவது வழி இவர்களது அறியாமையே பலவீனமாகப் பயன்படுத்தி வீடுகளில் வந்துபோகும் தெரிந்தவர்கள், உறவினர்களாலேயே ஏற்படக் கூடும். அதாவது இவர்கள் இப்பிள்ளைகளுடன் அன்பாகப் பேசி நட்பாகப் பழகி தகாத உறவுவரை கொண்டுசெல்ல முடியும். இப்பிள்ளைகளோ இது குறித்து அறிவோ அனுபவமோ இல்லாமையினால் இவ்வாறான வலைகளிற்குள் சிக்கிக்கொள்ளும் பரிதாபம் ஏற்படுகின்றது.
டாக்டர் சுஜாகரன் மகப்பேற்று பெண்நோயியல் சத்திர சிகிச்சை நிபுணர்
இரண்டாவது வழி இப்பிள்ளைகள் வெளி செல்லும் போது ஏற்படும் ரீன ஏஜ் காதல் தொடர்புகள் மீளமுடியாத சிக்கல்களுக்கு முகங்கொடுக்குமளவிற்கு போய்விடுகின்றன. இவற்றிற்கு பக்க பலமாக இவர்களின் கைகளில் கொடுக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள், கணினிகள் இணையத்தளங்கள் பேஸ்புக் என்பன அமைகின்றன. தமது பிள்ளைகள் அந்தளவிற்கு போகமாட்டார்கள் என பெற்றோர்கள் தமது மனங்களில் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை எனும் பலமே இவ்வாறான சிக்கல்கள் ஏற்படுவதற்கான பலவீனமாக மாறுகின்றது.
இவ்வாறான ரீனேச் பருவத்தில் ஏற்படும் தவறான தொடர்புகளின் பின் விளைவுகள் எவை?
தவறான தொடர்புகள் இளம் பிள்ளைகளில் மீளமுடியாத உளவியல் உடற் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. உளவியல் தாக்கங்கள் என்கின்ற போது பிள்ளைகள் பிற்கால வாழ்க்கையிலும் தமது திருமண வாழ்க்கையிலும் பயந்தவர்களாகவும் தன்னம்பிக்கை இழந்தவர்களாகவும் வாழ்க்கையில் வெறுப்புடையவர்களாகவும் உளவியல் ரீதியாகவே தீர்க்கப்பட முடியாத மனத்தாக்கங்களில் சிக்கித் தவிக்கின்றனர். அத்துடன் கல்வியில் திறமைகளை வெளிக்காட்டும் தன்மை மங்கிப்போவதும் திருமண வாழ்க்கையில் வெற்றியடைய முடியாத பிரிவுகளுக்கும் பிரச்சினைகளுக்கும் முகங்கொடுப்பது வழமையாகி விடும்.
உடல் ரீதியான தாக்கங்கள் என்கின்ற போது பாலியல் தொற்று நோய்களுக்கு உள்ளாதல், வேண்டப்படாத கருத்தரித்தல், கன்னித்தன்மை இழக்கப்படுதல் என முக்கிய மருத்துவ ரீதியான சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதன் பின்னர் இதற்கான தீர்வுகளுக்காக எமது பெற்றோர்கள் ஏங்க வேண்டி உள்ளது.
ரீனேச் பருவத்தினரின் பிரச்சினைகளை தடுப்பது எவ்வாறு?
பெற்றோர்களாகிய நாங்கள் முதலில் இவ்வயது பிள்ளைகள் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினைகள் குறித்தும் அறிந்திருக்க வேண்டும். அத்துடன் இவ்வயது பிள்ளைகள் பக்குவமற்ற வயதுடையவர்கள் அறியாமையிலும் அனுபவமற்ற தன்மையிலும் உள்ளவர்கள் என்பதனை மறந்துவிடக் கூடாது. இவர்களால் ஒரு அறிவியல் ரீதியான தீர்மானங்களை எடுக்க முடியாது என்பதனை நாம் அறிந்திருக்க வேண்டும்.
இவர்களைக் கண்காணிக்க கண்டிப்புடன் நாம் நடந்து கொள்வதன் மூலம் வெற்றி கொள்ள முடியாது. இவ்வாறு கண்டிப்புடன் நடக்கும் பெற்றோர்களின் பிள்ளைகள் அன்பையும் அரவணைப்பையும் வெளியிடங்களில் தேடுவார்கள். தமது உணர்வுகளையும் மன நிலைகளையும் வெளியார்களுடனேயே பகிர்ந்து கொள்வார்கள். இதனை வெற்றி கொள்ள நாம் எமது பிள்ளைகளுக்கு ஒரு விதத்தில் நல்ல நண்பர்களாகவே நடந்து கொண்டு அவர்களை மனம்விட்டுப் பேச சந்தர்ப்பம் வழங்கி அவர்களது மனநிலைகளை அறிந்த வண்ணம் இருக்க வேண்டும். இதன் மூலமே அவர்களைச் சுற்றியிருக்கும் சூழலையும் அவர்களது உணர்வுகள் குறித்தும் அறிந்து அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
இப்பராயத்தினருக்கு தனிமை ஆபத்தானது. எனவே இதற்கான சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும். அத்துடன் குடும்பத்திற்குள் வந்து போகும் அறிந்தவர்களால் ஏற்படக்கூடிய துஷ்பிரயோகங்கள் குறித்து அறிந்திருக்க வேண்டும். ஆகையால் எமது பிள்ளைகளை அனுமதியின்றி தொடுவதற்கு எவரையும் அனுமதிக்கக் கூடாது என பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். கூடுதலாகவும் தொடர்ச்சியாகவும் எவரும் தொடுகையை ஏற்படுத்தினால் பிள்ளைகள் உடனடியாக பெற்றோர்களிடம் முறையிடுவதற்கோ அல்லது கூச்சலிட்டு கத்துவதற்கோ கற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.
எமது பிள்ளைகளை மட்டுமே அறிந்திருந்தால் போதாது அவர்களைச் சுற்றியிருக்கும் நண்பர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதனை பற்றி ஒரு கண்ணோட்டம் இருக்க வேண்டும்.
பக்குவமற்ற இளம் வயதினர் கைகளில் உள்ள கையடக்கத்தொலைபேசிகள் இணையத்தளங்களால் ஏற்படும் தொடர்புகள் நன்மை தீமைகள் குறித்து அறிந்திருக்க வேண்டும்.பாலியல் கல்வியின் பங்களிப்பு என்ன?
இளம் பராயத்தினரையும் ரீன் ஏஜ் இது போன்ற தவறான தொடர்புகளுக்கும் உறவுகளுக்கும் ஆளாகாமல் தவிர்ப்பதற்கு பாலியல் கல்வி உதவியளிக்கும் என முடிவு செய்து மேலைநாடுகளில் அதனை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் தொடுகையிலிருந்து ஆரம்பிக்கும் உறவுகள் எதுவரை சென்று முடியும் என ஆரம்பத்திலேயே பிள்ளைகள் அறிந்திருப்பார்கள்.
இதன் மூலம் சம்பவங்களை ஆரம்பத்திலேயே தடுப்பதற்கும் தவிர்ப்பதற்கும் அவர்களால் முடிந்திருக்கக் கூடும். ஆனால் எமது பிள்ளைகளிற்கு இது போன்ற அறிவுகள் இல்லாமையினால் எல்லாம் முடிவடைந்த பின்னரே விளைவுகளை உணர்கின்றார்கள். ஆனால், இன்னொரு பக்கத்தை பார்ப்போமாயின் பாலியல் கல்வியின் ஆரம்ப அறிவுகள் சிறுவர்களை தவறாக வழி நடத்தவும் அவர்களின் மனங்களைச் சிதைக்கவும் உதவியளித்துவிடுமே என அச்சமாகவும் உள்ளது.
எனவே, பாலியற்கல்வியின் இரு புறங்களையும் சீர்தூக்கிப் பார்த்தால் இது எந்தளவிற்கு நடைமுறையில் பயனளிக்குமென விவாதித்துக்கொண்டே போகலாம்.
ஆனால், அளவான பாலியல் தொடர்பான ஆரம்ப அறிவு பாடசாலை மட்டத்தில் இருப்பது நடைமுறையில் நடந்து கொண்டிருக்கும் பல வித சிக்கல்களிலிருந்து சிறார்கள் தப்பித்துக் கொள்வதற்கு அவர்களுக்கு உதவியளிக்குமென நம்புகின்றேன்