Home உறவு-காதல் சிரிக்க கற்றுக்கொள்ளுங்கள்

சிரிக்க கற்றுக்கொள்ளுங்கள்

21

நீங்கள் பஸ்சிலோ, ரெயிலிலோ பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அலுவலகம் செல்பவர் என்றால் குறித்த நேரத்திற்குள் அலுவலகம் சென்றுவிட வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருப்பீர்கள். வரன் பார்க்க செல்பவர் என்றால் நல்ல நேரம் தவறிவிடக்கூடாதே; இந்த நேரம் பார்த்து, டிரைவர் இப்படி உருட்டுறாரே என்று மனதிற்குள் திட்டிக் கொண்டிருப்பீர்கள்.

இப்படி ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு சிந்தனை ஓடிக்கொண்டிருக்கும்.
சரி… உங்களை விடுங்கள். ஒரு பிச்சைக்காரரை வைத்துக்கொள்வோம். காலை சாப்பாட்டிற்கு 20 ரூபாய் தேறி விடாதா என்று விடாமுயற்சியோடு (?!) கத்தி பிச்சை கேட்டுக் கொண்டிருப்பார்.

இப்படி ஒவ்வொருவரது எண்ண ஓட்டங்களும் சிதறி ஓடிக்கொண்டிருக்கும்போது உங்களால் எப்படி வாய் நிறைய சிரிக்க முடியும்?
நீங்கள் பயணம் செய்யும் அதே பஸ்சில் அல்லது ரெயிலில் பெற்றோருடன் பயணித்துக் கொண்டிருக்கும் சின்னஞ்சிறு குழந்தைகளை பாருங்கள். வாய் நிறைய சிரித்துக்கொண்டிருப்பார்கள். பொன்னகை இருக்கிறதோ இல்லையோ, முகம் நிறைய புன்னகை அப்பியிருக்கும்.
அதேநேரம், உங்களிடம் மட்டும் அந்த சிரிப்பு, உற்சாகம் தொலைந்துபோய் இருப்பது ஏன்?

எல்லோரும் சிந்திக்க வேண்டிய கேள்வி இது.

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்
– இது பழமொழி!

இது எல்லோருக்கும் தெரிந்து என்ன பயன்? சிரித்து மகிழ்ந்தால் தானே அதற்கான பலன் உங்களுக்கு கிடைக்கும்.

ராமையாவுக்கும் இந்த பழமொழி தெரியும். அதனால் தான், தனக்கு காய்ச்சல் வந்த அன்றைய தினம் அந்த திடீர் முடிவுக்கு வந்தார்.

அலுவலகத்திற்கு செல்ல காலையில் ரெயிலில் ஏறிய அவர், அலுவலகம் செல்வது வரை சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று தனக்குள் தீர்க்கமான முடிவை எடுத்துக் கொண்டார்.

பிளாட்பாரத்தில் ரெயில் வந்து நின்றதும் வேகமாக ஓடிச்சென்று ஏறிக்கொண்டார். ஏதாவது இருக்கை இருக்கிறதா? என்று பார்வையை ஓடவிட்டவர், ஜன்னலோரம் காலியாக இருந்த இருக்கையில் அரக்கபறக்க ஓடி இடம்பிடித்து அமர்ந்து கொண்டார்.

இன் பண்ணியிருந்த சர்ட்டை சரி செய்துவிட்டு நேராக பார்த்தார். 75 வயதை தொட்ட மூதாட்டி ஒருவர் இருந்தார். வாயில் ஒரு பல் கூட இல்லை.
வாய் நிறைய சிரிக்க வேண்டும் என்று நாம் முடிவெடுத்த நேரம், இப்படிப்பட்ட பல் விழுந்த கிழவியா நம் முன் இருக்க வேண்டும்? எல்லாம் உன் நேரம்டா! என்று தன்னையே திட்டிக் கொண்டார்.

கிழவிக்கு பல் விழுந்தால் என்ன? லேசாக சிரித்து தொலைப்போமே என்று வாயை திறந்தார். பதிலுக்கு மூதாட்டியும் தனது பொக்கை வாயை அசைக்க, ஒருகனம் ஆடியேப் போய்விட்டார் ராமையா.

மூதாட்டியிடம் தான் சிரிக்க முடியாது. வேறு யாரையாவது பார்த்து சிரிப்போமே என்று இடது பக்கம் திரும்பினார். அங்கு இருந்தவரை பார்த்ததும் தான் தாமதம்; ராமையாவின் இதயத்தின் லப்-டப் வேகம் கொஞ்சம் எகிறியது தான் மிச்சம்.

மறைந்த மாயாவி வீரப்பன் ஸ்டைலில் மீசையை முறுக்கிக்கொண்டு அங்கே அமர்ந்திருந்த போலீஸ்காரர் தான் அதற்கு காரணம்.

என்னடா வம்பாப் போச்சு! வாய் நிறைய சிரிக்க வேண்டும் என்று நாம் முடிவெடுக்கும்போது தானா இப்படியெல்லாம் நடக்க வேண்டும்? என்று தன்னையே நொந்து கொண்டார். உட்கார்ந்து இருக்கிற இடத்தில் தான் ஒன்றும் சரியில்லை. பக்கத்திலாவது நோட்டமிடுவோமே என்று பார்வையை சற்று திருப்பினார்.
கல்லூரிக்கு செல்கிறாரா? அல்லது பீச்சுக்கு செல்கிறாரா? என்ற சந்தேகத்தை கிளப்பும் வகையில் டைட் ஜீன்ஸ் பேன்ட் மற்றும் டீ-சர்ட் அணிந்திருந்த இளம்பெண் ஒருத்தி, இருக்க இடம் கிடைக்காததால் நின்று கொண்டிருந்தாள். வெளியே வேகமாக வீசும் காற்றில் பறந்து முகத்திற்கு முன்பு விழுந்து கொண்டிருந்த முடியை வேண்டா வெறுப்பாக சரி செய்து கொண்டிருந்தாள்.
இவள் தான் நமக்கு லாயக்கு என்று அடுத்தக்கட்ட முடிவு எடுத்த ராமையா, வடிவேலு ஸ்டைலில் உதட்டை லேசாக அங்கும் இங்கும் அசைத்துக்கொண்டு ஒரு சின்ன ஸ்மையிலுடன் அவளை பார்த்து சிரிப்பை உதிர்த்தார்.
சிரித்தது தான் தாமதம், காலில் அணிந்திருந்த ஹை&ஹீல்ஸ் செருப்பை கழற்ற குனிந்துவிட்டாள் அவள்.

இன்னிக்கு நமக்கு நேரம் சரியில்லை என்று முடிவெடுத்து, தனது சிரிக்கும் திட்டத்தை காலவரையற்று ஒத்தி வைத்தார் ராமையா.

வாய் நிறைய சிரிக்க வேண்டும் என்று ராமையா முடிவெடுத்தது சரி தான். தனது வயது 40-ஐ தொட்டுவிட்டது என்பதை மறந்து அவர், சம்பந்தம் இல்லாதவர்களிடம், சம்பந்தமே இல்லாத முறையில் சிரிப்பை வெளிப்படுத்த முயன்றது தான் தவறாகிவிட்டது.

சிரிப்பை எப்படி, எப்போது, எங்கே வெளிப்படுத்த வேண்டும் என்பதற்கு எழுதப்படாத பல விதிமுறைகள் இருக்கின்றன. அந்த விதிமுறைகளை மீறினால் ராமையா கதி தான் நமக்கும் ஏற்படும்.

நீங்கள் எப்போதெல்லாம் வாய் நிறைய சிரிப்பை வெளிப்படுத்தலாம்?

 

* குழந்தைகளிடம் எந்த வயதினரும் சிரிப்பை வெளிப்படுத்தலாம். நீங்கள் அந்த குழந்தைகளிடம் சின்னதாக சிரித்தாலே அவர்கள் பெரியதாய் சிரிப்பார்கள்.
* இளம்வயதினர் எதிர்பாலினரிடம் சிரிக்கும்போது பார்த்து சிரிக்க வேண்டும். நீங்கள் ஒருவரை பார்த்த மாத்திரத்திலேயே, அவர் நம்மை ஆமோதிக்கிறாரா இல்லையா என்பதை ஓரளவிற்கு புரிந்து கொள்ளலாம். அதன்படி லேசாக புன்னகையை வெளிப்படுத்துவதில் தவறில்லை. அதற்காக, அடுத்தவன் காதலியிடம் போய் சிரிப்பது போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் கொண்டுபோய்விடும்.

* வயதான முதியவர்கள் உங்கள் அருகில் இருக்கிறார்களா? ஆதரவான பார்வையோடு மிக லேசாக பற்கள் தெரியும்படி சிரிப்பை வெளிப்படுத்துங்கள். அந்த வயதிலும், சிரிக்க முடியாவிட்டாலும்கூட உங்களது அந்த ஆதரவான புன்னகைக்காக சிரிப்பார்கள்.

* உங்கள் எதிரில் இருப்பவர்கள் நோய், நொடியால் பாதிக்கப்பட்டவர்கள் எனில் கண்டிப்பாக சிரித்து மட்டும் விடாதீர்கள். அப்போது கவலைப் பார்வையை அவர்கள் மீது வீசுவதை தவிர்த்து ஆறுதலான பார்வையை வீசுங்கள். அவர்களும் தங்கள் கவலையை மறந்து நிச்சயம் லேசான புன்னகையை வெளிப்படுத்துவார்கள்.

* தாலி கட்டிய மனைவியிடம் சிரிப்பை வெளிப்படுத்தும்போதும்கூட நேரம், காலம் பார்த்து தான் வெளிப்படுத்த வேண்டும். அவர் கஷ்டப்பட்டு வேலை செய்யும்போது, அய்யோ… அய்யோ… என்று வடிவேலு மாதிரி சிரித்தால் அன்றைய தினம் சாப்பாட்டில் உப்பு அதிகமாகிவிடும், இல்லையென்றால் காரம் அதிகமாகிவிடும்.

* பணிபுரியும் இடத்திலும் புன்னகையோடு இருங்கள். உங்கள் பற்றிய மேலான எண்ணங்கள் அனைவருக்கும் நிச்சயம் ஏற்படும்.
* பெண் ஒருத்தி அதிகம் சிரிப்பது வீட்டிற்கு ஆகாது என்ற கருத்து இன்றும் உலா வருகிறது. அதாவது, ஒரு பெண் ஆனவள் மற்றொரு ஆணிடம் வாய்விட்டு சிரிக்கும்போது அவள் மீதான கீழான எண்ணங்கள் தான் அதிகரிக்கும் என்பதால் அன்று அப்படி சொல்லி வைத்தார்கள். இந்த வழக்கு சரியா? தவறா? என்ற விவாதம் ஒருபுறம் இருந்தாலும், பெண்கள் அமைதியாக சிரிப்பது நல்லது தான். வாய்விட்டு சிரிக்கும் பெண்ணைக் காட்டிலும் மிதமாக சிரிக்கும் பெண்கள் இன்னும் கொஞ்சம் அழகாகவே தெரிவார்கள்.

மொத்தத்தில் சிரிப்பு என்பது மனிதகுலத்திற்கு கிடைத்த ஒரு வரம் என்று தான் சொல்ல வேண்டும். சிந்திக்க தெரிந்த சமூக விலங்கான மனிதனால் மட்டுமே சிரிக்க முடியும். அந்த சிரிப்பை மிஸ் பண்ணினால் வாழ்க்கையில் பல விஷயங்களையும் மிஸ் பண்ண வேண்டியிருக்கும்.