உங்களுக்கு வெஜிடேபிள் தம் பிரியாணியை வீட்டிலேயே செய்யத் தெரியுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு மிகவும் ஈஸியான முறையில் எப்படி வெஜிடேபிள் தம் பிரியாணி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக இந்த வெஜிடேபிள் தம் பிரியாணி செய்ய சற்று நேரம் ஆனாலும், மிகவும் சுவையாக இருக்கும். சரி, இப்போது அந்த வெஜிடேபிள் தம் பிரியாணியின் செய்முறையைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 1 (நறுக்கியது)
குடைமிளகாய் – 1/2 (நறுக்கியது)
கேரட் – 1 (நறுக்கியது)
பட்டாணி – 1/4 கப்
காளான் – சிறிது
பன்னீர் – சிறிது
சீரகம் – 1 டீஸ்பூன்
கிராம்பு – 5
பட்டை – 2
மிளகு – 5
பிரியாணி இலை – 3
கருப்பு ஏலக்காய் – 2
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 1/2
டீஸ்பூன் பச்சை மிளகாய் – 1 (நீளமாக கீறியது)
மஞ்சள் தூள் – 1
சிட்டிகை மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
தயிர் – 1/2 கப்
பிரியாணி மசாலா – 1 டீஸ்பூன் + 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
புதினா – சிறிது
குங்குமப்பூ தண்ணீர் – 1 டேபிள் ஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
சாதத்திற்கு…
பிரியாணி அரிசி – 1 கப் (1/2 மணிநேரம் நீரில் ஊற வைத்தது)
தண்ணீர் – 6 கப்
பிரியாணி இலை – 1
கருப்பு ஏலக்காய் – 2
மிளகு – 5
கிராம்பு – 3
உப்பு – சிறிது
செய்முறை:
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பிரியாணி இலை, கருப்பு ஏலக்காய், மிளகு, கிராம்பு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, பின் ஊற வைத்து கழுவி வைத்துள்ள அரிசியை போட்டு, மூடி வைத்து 7 நிமிடம் வேக வைக்க வேண்டும். சாதம் ஓரளவு வெந்ததும், அதனை இறக்கி, நீரை முற்றிலும் வடிகட்டி, தனியாக ஒரு தட்டில் போட்டு உலர வைக்கவும்.
அடுத்து ஒரு அகன்ற பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கிராம்பு, பட்டை, ஏலக்காய், மிளகு, பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மல்லித் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
பின்பு அதில் தக்காளி, மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்கி, பின் அதில் தயிர், பிரியாணி மசாலா, உப்பு, கொத்தமல்லி, புதினா சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
பிறகு அதில் உருளைக்கிழங்கை சேர்த்து, 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி, 5-7 நிமிடம் உருளைக்கிழங்கை வேக வைக்கவும்.
அடுத்து அதில் குடைமிளகாய், கேரட் மற்றும் பட்டாணி சேர்த்து, 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து காய்கறிகளை 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பின் மூடியைத் திறந்து, அதில் காளான், பன்னீர் சேர்த்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி, 2 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும்.
இந்நிலையில் காய்கறிகள் முற்றிலும் வேகாமல் இருக்கும். காய்கறிகள் அடிப்பிடிக்காமல் இருக்க, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கிளறி, அதன் மேல் சாதத்தை போட்டு பரப்பி, அதற்கு மேல் பிரியாணி மசாலா, குங்குமப்பூ தண்ணீர், 2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் சிறிது தண்ணீரை தெளித்து, அதற்கு மேல் சிறிது கொத்தமல்லி மற்றும் புதினா தூவி மூடி வைத்து, முதலில் தீயை அதிகரித்து 30 நொடிகள் வேக வைத்து, பின் மிதமான தீயில் 2 நிமிடம் வேக வைத்து, பின் குறைவான தீயில் 20 நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைத்து இறக்கிவிட்டால், வெஜிடேபிள் தம் பிரியாணி ரெடி!!!