ஹைதராபாத்: திரையுலகில் சாதனை படைத்த நடிகைகள் சரோஜா தேவி, சாரதா ஆகியோருக்கு ஆந்திர அரசின் என்டிஆர் விருது வழங்கப்பட்டது. பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம், நடிகைகள் ஜெயசுதா, ஜெனிலியா உள்ளிட்டோருக்கு நந்தி விருது வழங்கப்பட்டது.
ஆந்திர அரசு சார்பில் திரையுலகினருக்கு வழங்கப்படும் நந்தி விருதுகள் தமிழக அரசின் கலைமாமணி விருதுக்கு இணையானவை. 2009 மற்றும் 2010-ஆம் ஆண்டுக்கான ஆந்திர அரசின் நந்தி விருதுகள் வழங்கும் விழா ஐதராபாத்தில் நடந்தது.
விழாவில் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி பங்கேற்று அரசு விருதுகளை வழங்கினார். அவர் பேசும்போது, ”அரசியலும் சினிமாவும் ஒன்றுதான். அரசியலில் யார் வெற்றி பெறுவார் என்பதை கணிக்க முடியாது. அதுபோல் சினிமாவிலும் எந்த படம் ஜெயிக்கும் என்பது தெரியாது” என்றார்.
பழைய நடிகை சரோஜாதேவிக்கு என்.டி.ஆர். தேசிய விருதை கிரண்குமார் ரெட்டி வழங்கினார். நிகழ்ச்சியில் சரோஜாதேவி பேசும்போது, ”என்.டி.ஆருடன் இணைந்து படங்களில் நடித்துள்ளேன். அவர் பெயரால் விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார். பழைய நடிகை சாரதாவுக்கும் என்.டி.ஆர். விருது வழங்கப்பட்டது.
நடிகைகள் ஜெயசுதா, நித்யாமேனன், ஜெனிலியா, பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், தயாரிப்பாளர் ஏ.வி.எம். பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் நந்தி விருதுகள் பெற்றனர்.
பிஎன் ரெட்டி விருது இயக்குநர் ராகவேந்திர ராவ், நரசிங் ராவ் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
நாகிரெட்டி மற்றும் சக்ரபாணி தேசிய திரைப்பட விருதுக்கு மீடியா ஜாம்பவான் ராமோஜி ராவுக்கு வழங்கப்பட்டது.
மகதீராவுக்கு பாப்புலர் பட விருதும், ‘சொந்த ஊரு’ படத்துக்கு கோல்டன் நந்தி விருதும், வேதம் (தமிழில் வந்த ‘வானம்’) படத்துக்கு சிறந்த படத்துக்கான கோல்டன் நந்தி விருதும் வழங்கப்பட்டன.