சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாப்பது, மிருதுவான முறையில் சுத்தம் செய்வது போன்ற நல்ல சருமப் பராமரிப்புப் பழக்கங்கள் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் பல வருடங்கள் பொலிவுடனும் வைத்திருக்க உதவும்.
சருமத்தைப் பராமரிப்பதற்கென பல விஷயங்களைச் செய்ய நேரம் இல்லையா? (Good skin care)
அடிப்படையான சில விஷயங்களைச் செய்வதன் மூலமே உங்கள் சருமத்தைப் பாதுகாக்கலாம். சருமத்தை நன்கு பராமரிக்கும் பழக்கமும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் இயற்கையான முதுமை என்பதைத் தள்ளிப்போடும், அத்துடன் பல்வேறு சருமப் பிரச்சனைகளையும் தடுக்கும். இந்த ஐந்து குறிப்புகளைப் பின்பற்றத் தொடங்குங்கள்.
1. சூரிய ஒளியில் இருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள் (Protect yourself from the sun)
சூரிய ஒளியில் இருந்து உங்களைக் காத்துக்கொள்வது உங்கள் சருமத்தைப் பாதுகாப்பதில் முக்கியமான ஒரு வழியாகும். வாழ்நாள் முழுதும் சூரிய ஒளி சருமத்தில் படும்படி இருந்தால் தொழில் சுருக்கங்கள் ஏற்படலாம், முதுமைப் புள்ளிகள் தோன்றலாம், பிற சருமப் பிரச்சனைகள் தோன்றலாம். அதுமட்டுமின்றி தோல் புற்றுநோயின் வாய்ப்பும் அதிகரிக்கலாம். கூடுமான வரை முழுமையான சூரிய ஒளி தடுப்புக்கு:
சன்ஸ்கிரீன் பயன்படுத்தவும்: பிராட்-ஸ்பெக்ட்ரம் சன்ஸ்க்ரீன் பயன்படுத்தவும். SPF மதிப்பு குறைந்தபட்சம் 15 இருக்க வேண்டும். சன்ஸ்க்ரீனை தாராளமாகப் பயன்படுத்தவும், இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை மீண்டும் பூசவும். நீங்கள் நீந்தினால் அல்லது அதிகம் வியர்த்தால் இன்னும் அடிக்கடி பூசலாம்.
நிழலில் இருங்கள்: காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையில் வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும். இந்த நேரத்தில் சூரியனின் கதிர்கள் மிகுந்த வலிமையுடன் இருக்கும்.
பாதுகாப்பு ஆடை அணியவும்: இறுக்கமாக நெய்யப்பட்ட முழுக்கை சட்டைகள், நீளமான பேன்ட் மற்றும் அகலமான தொப்பிகள் கொண்டு உங்கள் சருமத்தை மறைக்கவும். துணி துவைப்பதற்குப் பயன்படுத்தும் கூடுதல் சிறப்புப் பொருள்களையும் (லாண்டரி அடிட்டிவ்) பயன்படுத்தலாம். அவை உங்கள் ஆடைகளுக்கு கூடுதலான புற ஊதாக் கதிர் பாதுகாப்பு அடுக்கை வழங்கும். இவை சில முறை துவைக்கும் வரை நீடிக்கும். அல்லது புற ஊதாக் கதிர்களைத் தடுப்பதற்கென பிரத்யேகமான முறையில் வடிவமைக்கப்படும் சூரிய ஒளி தடுப்பு ஆடைகளை அணியவும்.
2. புகைபிடிக்கக் கூடாது (Don’t smoke)
புகைப்பழக்கத்தால் உங்கள் சருமம் முதுமையான தோற்றம் பெரும், தொழில் சுருக்கங்களும் ஏற்படும். புகைப்பழக்கத்தால் தோலின் வெளிப்புறத்திற்கு அருகில் அமைந்துள்ள உங்கள் மெலிதான இரத்த நாளங்கள் மேலும் சுருங்கும். இதனால் இரத்த ஓட்டம் குறையும். இதனால் சருமம் ஆரோக்கியமாக இருக்கத் தேவையான ஆக்சிஜனும் பிற முக்கிய ஊட்டச்சத்துகளும் கிடைக்காமல் போகும். அதுமட்டுமின்றி, புகைப்பழக்கம் தோலுக்கு வலிமை அளிக்கும் ஃபைபர்களான கால்லஜென் மற்றும் எலாஸ்டின் ஆகியவற்றையும் சேதப்படுத்துகிறது. புகை பிடிக்கும் போது தொடர்ச்சியாக குறிப்பிட்ட சில முக பாவங்களை நாம் காட்டுவதால் தோலில் சுருக்கங்கள் ஏற்படலாம். உதாரணத்திற்கு, புகையை உள்ளிழுக்கும்போது உதட்டைக் குவிப்பது, புகையை வெளிவிடும்போது கண்ணில் படாமல் இருக்க, கண்ணைச் சுருக்குவது போன்றவை. நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால், சருமத்தைப் பாதுகாக்க சிறந்த வழி புகைப்பழக்கத்தை விட்டொழிப்பது தான். புகைப்பழக்கத்தை விடுவதற்கான குறிப்புகள் அல்லது சிகிச்சை குறித்து உங்கள் மருத்துவரிடம் உதவி கேட்கவும்.
3. உங்கள் சருமத்தை மென்மையாகக் கையாளவும் (Treat your skin gently)
தினமும் சருமத்தை சுத்தம் செய்வது (க்ளென்சிங்) அல்லது ஷேவிங் செய்வது சருமத்தைப் பாதிக்கலாம். இதைத் தடுக்க:
குளியல் நேரத்தைக் குறைக்கவும். வெந்நீரும், நீண்ட நேரம் குளிப்பதும், ஷவரில் குளிப்பதும் உங்கள் தோலில் இருந்து எண்ணெய்ப் பசையை நீக்கிவிடும். குளிக்கும் நேரத்தைக் குறைக்கவும், சூடான நீருக்கு பதில் வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்.
கடின சோப்புகளைத் தவிர்க்கவும். கடின சோப்புகளும் டிடர்ஜென்ட்டுகளும் தோலில் இருந்து எண்ணெய்ப் பசையை மொத்தமாக நீக்கிவிடக்கூடியவை. அவற்றுக்கு பதில், மிதமான க்ளென்சர்களைப் பயன்படுத்தவும்.
கவனமாக ஷேவ் செய்யவும். தோலுக்கு வழவழப்பை அளிக்கவும் தோலைப் பாதுகாக்கவும் ஷேவிங் செய்வதற்கு முன்பு ஷேவிங் கிரீம், லோஷன் அல்லது ஜெல் பயன்படுத்தவும். நெருக்கமாக ஷேவ் செய்யும்போது, சுத்தமான, கூர்மையான ரேசரைப் பயன்படுத்தவும். முடி வளரும் அதே திசையில் ஷேவ் செய்யவும், எதிர்த்திசையில் செய்ய வேண்டாம்.
லேசாகத் தட்டி தோலை உலர்த்தவும். ஷேவிங் செய்த பிறகு அல்லது குளித்த பிறகு, டவல் கொண்டு லேசாகத் தட்டுவதன் மூலம் சருமத்தில் உள்ள ஈரத்தை அகற்றி உலர்வாக்கவும்.
உலர்ந்த சருமத்திற்கு ஈரப்பதமூட்டவும். உங்கள் தோல் உலர்வான தோலாக இருந்தால், உங்கள் தோலின் வகைக்குப் பொருத்தமான மாய்ஸ்டுரைசரைப் பயன்படுத்தவும். தினமும் பயன்படுத்துவதென்றால், SPF உள்ள மாய்ஸ்டுரைசரைப் பயன்படுத்தவும்.
4. ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றவும் (Eat a healthy diet)
ஆரோக்கியமான உணவு உட்கொள்வதால் நீங்கள் நன்றாகக் காட்சியளிப்பீர்கள், நன்றாக உணர்வீர்கள். நிறைய பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மிதமான அளவு புரத உணவு வகைகளை உட்கொள்ளவும். உணவுக்கும் முகப்பருவுக்கும் உள்ள தொடர்பு நமக்கே தெரியும். ஆனால், வைட்டமின் C அதிகமாகவும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள், பதப்படுத்தல் அல்லது சுத்திகரிப்பு செய்த கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும் உள்ள உணவுகள் சருமம் இளமையாகத் தோற்றமளிக்க உதவும் என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
5. மன அழுத்தத்தைச் சமாளிக்கவும் (Manage stress)
கட்டுப்படுத்தாத மன அழுத்தம் உங்கள் சருமத்தை எளிதில் பாதிப்படையக்கூடியதாக மாற்றி, முகப்பருக்கள் ஏற்படவும் பிற சருமப் பிரச்சனைகள் தோன்றவும் வழிவகுக்கலாம். சருமத்தை ஆரோக்கியமாகப் பார்த்துக்கொள்ளவும் மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், உங்கள் மன அழுத்தத்தை நிர்வகிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும். எல்லாவற்றையும் சரியான வரம்பில் வைக்கவும், செய்ய வேண்டிய வேலைகளின் எண்ணிக்கையை நியாயமான அளவிற்குக் குறைக்கவும். உங்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்ய நேரம் ஒதுக்கவும். இவற்றைச் செய்வது கண்கூடான பலன்களைத் தரும்.