சருமத்தின் அழுக்கு மற்றும் எண்ணெய் பிசுபிசுப்பால், நம்மில் பல பேர் நிறைய மன வருத்தத்திற்கு உள்ளாகியிருப்போம்..! அத்தகைய சரும அழகைப் பேணி காக்க இயற்கை வழிமுறைகளை பின்பற்றலாம். பப்பாளி முகத்தில் படியும் அழுக்கையும், எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையையும் நீக்கும். வீட்டில் உள்ள பொருட்களுடன் பப்பாளியை சேர்த்து சருமத்தை பளபளப்பாக மிளிர வைக்கலாம்.
பப்பாளி பழம் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பதோடு சரும பொலிவையும் மெருகூட்டும். முகத்தில் படியும் அழுக்கையும், எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையையும் நீக்கும். சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி மென்மையையும், பொலிவையும் பெற்று தரும். வீட்டில் உள்ள பொருட்களுடன் பப்பாளியை சேர்த்து சருமத்தை பளபளப்பாக மிளிர வைக்கலாம்.
பப்பாளி பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் பால் கலந்து பசைபோல் குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை முகம், கழுத்து பகுதியில் பூசி, சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் சருமம் மிளிரும்.
பப்பாளி பழமும், எலுமிச்சை பழமும் சருமத்தை பளிச்சென்று வைக்க உதவும். நறுக்கிய பப்பாளி துண்டுகளுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு பிழிந்து நன்றாக பிசைய வேண்டும். அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து நன்றாக கழுவ வேண்டும். பப்பாளி பழத்தில் உள்ள நொதிகள் சரும வளர்ச்சிக்கும், எலுமிச்சை பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலம் முகத்தில் உள்ள நுண் துளைகளில் படியும் அழுக்குகளை நீக்கி பளிச் தோற்றத்திற்கும் வித்திடும்.
பப்பாளி பழத்தை மஞ்சள் தூளுடன் கலந்தும் பயன்படுத்தலாம். சில பெண்களுக்கு முகத்தில் முடி முளைத்துக்கொண்டிருக்கும். பப்பாளி பழத்தை கூழாக்கி அதனுடன் மஞ்சள் கலந்து முகத்தில் தடவிவர வேண்டும். அந்த கலவை நன்றாக உலர்ந்த பின்னர் முகத்தை கழுவி வந்தால் நாளடைவில் முடிகள் முளைப்பது தடைபடும்.
பப்பாளி பழத்தை அழகிற்கு மட்டும் பயன்படுத்தாமல் தொடர்ந்து சாப்பிட்டும் வர வேண்டும். அது இளமையை பாதுகாக்க உதவும்.