கோடைக் காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது சருமம்தான். தோலில் அரிப்பு, முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படும். இதற்கு பயந்துகொண்டே பாதிபேர் வெளியே செல்லாமல் வீட்டிற்குள் முடங்கி கிடப்பார்கள். கோடை காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க நம் வீட்டிலேயே பல மருந்துகள் உள்ளன. அவற்றை பயன்படுத்தி சருமத்தை பாதுகாக்கலாம்.
வேப்பிலை மகத்துவம்
கோடையில் வேப்ப மரங்கள் பசுமையாக காட்சியளிக்கும். கோடை காலத்தில் ஏற்படும் நோய்களை போக்கவே இயற்கை அளித்த வரப்பிரசாதம் வேம்பு. எனவே வீட்டிற்கு முன்பு உள்ள வேப்ப மரத்தில் இருந்து இலைகளை பறித்து அவற்றை குளிக்கும் நீரில் போட்டு ஊறவைத்து குளிக்கலாம். இதனால் சருமத்தில் அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாது.
மாமர இலைகள்
குளிக்கும் நீரில் மாமர இலைகளைப் போட்டு கொதிக்க விடவும். அந்த நீரில் குளிக்கவும். இதுபோன்று மா இலைகளைப் போட்டுக் குளித்து வந்தால் உடலில் ஏற்படும் பல்வேறு சரும நோய்களைத் தடுக்கலாம். கோடைகால சரும பாதிப்பு இருந்தாலும் விரைவில் மறைந்துவிடும்.
ஆப்பிள், ஆரஞ்சு தோல்
ஆப்பிளின் தோலை சிலர் சீவித் தூக்கி எறிந்து விடுவார்கள். அதையும் மிக்சியில் போட்டு அரைத்து முகத்திற்குப் போடலாம். கோடை காலத்தில் டல்லான முகம் பளிச் என்று ஆகும். ஆரஞ்சு பழத் தோலினை காயவைத்து பொடி செய்து அதை முகத்திற்கு பேக் போடலாம் சருமம் அழகாகும்.
பூண்டு எண்ணெய்
சரும பாதிப்புகளைப் போக்குவதில் பூண்டிற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. பருக்களுக்கும் பூண்டு நல்ல மருந்தாக அமைகிறது. காதில் ஏற்படும் தொற்றுக் கிருமி பாதிப்புகளுக்கு பூண்டு எண்ணெய் சிறந்த மருந்தாக அமையும்.
தோல் அரிப்புகளை போக்க
கோடைக் காலத்தில் வியர்வையினால் உடலின் இடுக்குப் பகுதிகளில் அரிப்பு ஏற்படுவது இயற்கை. கோடை காலத்தில் அதிக ரசாயனத் தன்மை கொண்ட சோப்பு, ஷாம்புக்களைப் பயன்படுத்த வேண்டாம். தோல் அரிப்பைத் தடுக்கும் சாதாரண மருந்துகள் விற்பனையில் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தலாம். அவ்வப்போது உடலின் இடுக்குப் பகுதிகளை தண்ணீரால் சுத்தம் செய்து துடைத்து விடுவதும் நல்லது. பொதுவாக அக்குள் போன்ற இடங்களில் இருக்கும் ரோமங்களை நீக்குவது மிக முக்கியம். அடுத்தபடியாக பருத்தியினால் ஆன உள்ளாடைகளை அணியுங்கள். அது வியர்வையை நன்றாக உரிஞ்சும் வேர்க்குரு ஏற்படாமல் தடுக்கும்.