கோடையில் கூந்தலை பாதுகாப்பது சிரமமான காரியம்தான். வேர்வையால் தோன்றும் பிசுபிசுப்பு, வெப்பத்தினால் ஏற்படும் வறட்சி போன்றவற்றினால் கூந்தல் உடைந்து உதிரும். பளபளப்பு மங்கிவிடும். இதை தவிர்க்க கூந்தலுக்கு மாஸ்க் போடலாம் என்கின்றனர் அழகு நிபுணர்கள். இயற்கை பொருட்களினால் போடப்படும் மாஸ்க் கூந்தலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
வாழைப்பழம் பட்டர் புரூட் மாஸ்க்
கனிந்த வாழைப்பழத்தை நன்கு பிசைந்து அத்துடன் ஆவகேடோ எனப்படும் பட்டர் ப்ரூட் சேர்த்து மாஸ்க் போடலாம். வாழைப்பழம், பட்டர் ப்ரூட், முட்டையின் வெள்ளைக்கரு, தேன், மோர், ஆலிவ் ஆயில் போன்றவை சேர்த்து மிக்ஸ் செய்து மாஸ்க் போடலாம்.
வேர்களில் படுமாறு இந்த கலவையை பூசவேண்டும். அரை மணிநேரம் ஊறவைத்து மிதமான ஷாம்பு போட்டு அலசினால் கூந்தல் வறட்சி நீங்கும்.
யோகர்டு மாஸ்க்
ஒரு சிலருக்கு கூந்தல் வறண்டு போய் நுனி வெடித்து காணப்படும். அவர்களுக்கு கூந்தலின் ஈரத்தன்மையை மீட்டெடுக்கவும், பட்டுப்போல் பளபளப்பாக மாற்றவும் யோகர்டு உதவுகிறது.
ஒரு கிண்ணத்தில் கால் கப் யோகர்டு எடுத்து அதில் ஒரு முட்டையை உடைத்து வெள்ளைக் கருவை ஊற்றவும். இரண்டையும் நன்றாக அடித்து கலக்கவும். இவற்றை உலர்ந்த கூந்தலில் அனைத்து பாகத்திலும் படுமாறு அப்ளை செய்யவும்.
மாஸ்க் போட்டவுடன் தலையை சுற்றி கவர் செய்யவும். அரைமணி நேரம் ஊறவைத்த உடன் மிதமான ஷாம்பு போட்டு குளிர்ந்த நீரில் தலையை அலசவும். மாதத்திற்கு ஒருமுறை இவ்வாறு தலைக்கு மாஸ்க் போட்டால் கூந்தல் வறண்டு போவது நீங்கும்.
ஆவகேடோ எலுமிச்சை பேஸ்ட்
ஆவகேடோ சிறந்த அழகு சாதன பொருள். இந்த பழத்தின் சதைப் பகுதியை எடுத்து அத்துடன் எலுமிச்சை பழச் சாற்றை பிழிந்து விடவும். கடல் உப்பு ஒரு டீ ஸ்பூன், கற்றாழை ஜெல் ஒரு டீ ஸ்பூன் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலக்கவும். இதனை தலையில் அப்ளை செய்யவும். அரைமணிநேரம் நன்கு ஊறியபின்னர் இதனை குளிர்ந்த நீரில் தலையை அலசவேண்டும். கூந்தல் பட்டுப் போல மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறும்.