என்னுடைய பிரச்னை எனக்கே விசித்திரமாகத் தெரிகிறது. 6 வருடங்களாக நான் ஒருவரைக் காதலித்தேன். இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவர் வீடுகளிலும்கடுமையான எதிர்ப்பு. இந்த 6 வருடங்களில் எங்கள் இருவருக்கும் சின்னதாகக் கூட சண்டை வந்ததில்லை. ஒருவர் மீது ஒருவர் அவ்வளவு அன்பு வைத்திருந்தோம். இரு வீட்டாரதுசம்மதத்துடன்தான் கல்யாணம் முடிப்பது என்பதில் உறுதியாக இருந்தோம். அப்படி அது நடக்கவில்லை என்றாலும், இருவருமே கல்யாணமே செய்து கொள்ளாமல் காலம் முழுக்க இருந்துவிடுவது என்று முடிவெடுத்திருந்தோம்.எங்களுடைய உறுதி புரிந்து, இரு வீட்டாரும் மனம் இரங்கினார்கள். பெரியவர்கள் பேசி, கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் முடித்து வைத்தார்கள். முதல் 2 மாதங்கள் எனக்கு நடந்தகல்யாணம் கனவா, நனவா என்று கூடத் தெரியவில்லை. உலகமே என் காலடியில் இருப்பது போலவும், சாதிக்க முடியாத எதையோ சாதித்து விட்டது போலவும் சந்தோஷத்தில் மிதந்தேன்.கடந்த ஒரு மாத காலமாக எனக்கு வேறு மாதிரி எண்ணங்கள் தொந்தரவு செய்கின்றன.அதாவது நான் என் பெற்றோருக்கு துரோகம் செய்து விட்ட மாதிரி உணர்கிறேன். இத்தனைக்கும் என் கணவரும் சரி, புகுந்த வீட்டாரும் சரி என்னிடம் அன்பாகவே நடந்து கொள்கிறார்கள்.ஆனாலும் அவர்களது வீட்டுப் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை என எல்லாமே நான் வளர்ந்த விதத்துக்கு நேரெதிராக இருக்கிறது. சாப்பாட்டிலிருந்து, சகலமும் எனக்குப் புதுசு.அவசரப்பட்டு தப்பு செய்து விட்டோமோ என உறுத்தலாகவே இருக்கிறது. எவ்வளவுதான் மனத்தை மாற்றிக் கொள்ள நினைத்தாலும், மறுபடி, மறுபடி அதே எண்ணங்கள் வருவதைத்தவிர்க்க முடியவில்லை. மன அழுத்தத்தில் இருக்கிறேன். அன்பான கணவர், அனுசரணையான புகுந்த வீடு அமைந்தும், என்னுடைய குற்ற உணர்வால், அந்த உறவுகளைக் கெடுத்துக் கொண்டு விடுவேனோ எனப் பயமாக இருக்கிறது. நான் என்னதான் செய்வது?& பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.
பதில்
சாதி வேற்றுமையைக் காரணம் காட்டி முதலில் உங்கள் இரு வீட்டாரும் இந்தத் திருமணத்தை எதிர்த்திருக்கிறார்கள். பிறகு மனம் மாறி ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். எனவே உங்கள்பிரச்னைக்கு பிறந்த வீட்டாரோ, புகுந்த வீட்டாரோ காரணமில்லை. அதே மாதிரி உங்கள் கணவரும் அன்பைப் பொழிவதாகச் சொல்கிறீர்கள். எனவே குழப்பத்துக்கு அவரும் காரணமில்லை.முற்றிலும் மாறுபட்ட கலாசார சூழல் கொண்ட குடும்பத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறீர்கள். அவர்களது பழக்க வழக்கங்கள், குடும்ப சூழல் போன்றவற்றால் உண்டான அதிர்ச்சியும்,ஏமாற்றமுமே எல்லாவற்றுக்கும் காரணம். செய்தது சரியா, தவறா என்கிற சந்தேகத்தில், பெற்றோருக்கு துரோகம் செய்துவிட்டதாக உங்களுக்கு நீங்களே ஒரு காரணத்தைஉருவாக்கிக் கொண்டுவிட்டீர்கள்.காதலுக்குக் கண்ணில்லை என்று சும்மாவா சொன்னார்கள்? காதலிக்கிற போது சமூகமோ, குடும்பமோ, உறவுகளோ கண்ணுக்குத் தெரியாது. காதலிக்கிற போது அர்த்தமற்றதாகத் தெரிகிறஅத்தனை விஷயங்களும், கல்யாணத்துக்குப் பிறகு விஸ்வரூபம் எடுத்து நிற்கும். கலாசாரத்தில், பழக்க, வழக்கங்களில் வரக்கூடிய பிரச்னைகளைப் பற்றி நீங்கள் முன்கூட்டியே யோசிக்கத்தவறி விட்டீர்கள். இதையெல்லாம் உணர்ந்துதான் பெரியவர்கள் ஆரம்பத்தில் உங்கள் காதலை எதிர்த்திருப்பார்கள். ஆனால் அதைப் புரிந்து கொள்ளாமல், அவர்கள் அப்படிச் செய்ததுதான்இப்போதைய எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம் என நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.அனாவசியக் குழப்பங்களைத் தூக்கிப் போட்டுவிட்டு, பொறுமையாக, தெளிவாக யோசியுங்கள். சில விஷயங்களை வாழ்க்கையில் மாற்ற முடியாது. முடிந்தால் உங்களை மாற்றிக் கொள்ளமுயற்சி செய்யுங்கள். இந்த வாழ்க்கை நீங்களாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டது. இதுதான் நிரந்தரம். பிரச்னைகளை எப்படிக் கையாண்டால் உங்கள் குழப்பம் சரியாகும் என யோசியுங்கள்.உங்கள் கணவர் மிக நல்லவர் என்கிறீர்கள். அவரிடம் மனம் விட்டுப் பேசுங்கள். கண்டிப்பாக அவர் உங்கள் பிரச்னையைத் தீர்த்து வைப்பார் எனத் தெரிகிறது. உங்கள் பெற்றோர், புகுந்தவீட்டு மக்கள் எல்லாரிடமும் நீங்கள் அவர்களை எந்தளவுக்கு நேசிக்கிறீர்கள் எனக் காட்டுங்கள்.புதிதாகக் கல்யாணமாகியிருப்பதால், நீங்கள் உங்கள் அம்மா, அப்பாவை மிஸ் பண்ணுகிறீர்கள் என்பதும் தெரிகிறது. வேறு வேறு சாதியில் திருமணம் முடித்தவர்கள் என்றில்லை, சிலசமயங்களில் ஒரே சாதியில் மணம் முடித்தவர்களுக்குக் கூட இப்படிப்பட்ட கலாசார அதிர்வுகள் வருவதுண்டு. உங்களுடைய இந்த மன அழுத்தங்கள் அடுத்த 6 மாதங்களுக்குள் சரியாகிவிடும் என்பது உறுதி. ஒருவேளை 6 மாதங்களுக்குப் பிறகும் இதே மாதிரி உணர்ந்தால், நீங்கள் மனநல ஆலோசகரை சந்தித்து, ஆலோசனை பெறுவது சிறந்தது.