Home குழந்தை நலம் குழந்தைக்கு ‘குடிக்கக் கொடுப்பது என்ன?

குழந்தைக்கு ‘குடிக்கக் கொடுப்பது என்ன?

32

’இவனுக்கு சாப்பாடு ஒண்டும் உட் செல்லாது… சோடா வேணும் எண்டு அடம் பிடித்துக் குடிப்பான்’ என்று அம்மா சொன்னதைக் கேட்டுப் பெருமையுடன் சிரித்த அந்தப் பிள்ளையின் வாய் முழுக்கச் சொத்தைப் பற்கள்.

இனிப்புச் சோடாக்கள், இனிப்புட்டப்பட்ட பழச்சாறுகள் போன்றவை எந்தக் குழந்தைக்குத்தான் பிடிக்காது. ‘சாப்பாடு போகுதில்லை, இதையாவது குடிக்கட்டும்’ என்றோ, ‘பாவம் சின்னஞ் சிறிசு ஆசைப்படுகிறதைக் கொடுக்கத்தானே வேணும்’ என்றோ கட்டுப்பாடில்லமல் இவற்றைத் தாராளமாகக் கொடுத்தால் ஆரோக்கியம் தான் கெடும்.

அதீத எடை வைப்பதற்கும், பற்கள் சொத்தை ஆவதற்கும் இத்தகைய இனிப்புப் பானங்கள்தான் முக்கிய காரணம் என்பது சொல்லியா தெரிய வேண்டும்.

இன்னுமொரு தாயின் பிரச்சனை முற்றிலும் எதிர்மாறானது. அவளின் குழந்தை குடிப்பது மிகவும் ஆரோக்கியமான பானம்! இவனுக்கும் சாப்பாடு உட் செல்லாதுதான். நிறையப் பால் குடிப்பான். இரண்டரை வயதாகியும் இன்னமும் போத்தலில்தான்.

‘இனி போத்தலில் பால் கொடுக்க வேண்டாம். கோப்பையில் குடிக்கக் வையுங்கள். தினமும் இரண்டு கப் பால் கொடுங்கள்’ என ஆலோசனை வழங்கப்பட்டது. காரணம் போத்தலில் குடிப்பது இலகுவானது. விரைவாக வயிறு நிறைந்துவிடும். எனவே சாப்பிடத் தோன்றாது.

பால் போஷாக்குள்ள பானம்தான். அதிலுள்ள புரதம், கல்சியம், விற்றமின் A&D ஆகிவை குழந்தையின் உடல் வளர்ச்சி, பொதுவான ஆரோக்கியம், திடமான பற்கள், உறுதியான எலும்பு ஆகியவற்றிற்கு உதவும். ஆயினும் ஆறு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு திட உணவும் அவசியம் என்பதை மறந்து விடக் கூடாது. பாலைத் தவிர யோஹட், சீஸ் ஆகியவற்றிலும் பாலிலுள்ள போஷாக்குகள் இருக்கின்றன.

குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்? மூன்று வேளை உணவிற்கும் பின்னர் பால் கொடுப்பதில் தவறில்லை. இடையில் கொதித்து ஆறிய நீரைக் குடிப்பதற்கு குழந்தையைப் பழக்கப்படுதுங்கள். பழச் சாறுகளும் நல்லது. போத்தலில் அடைக்கப்பட்ட இனிப்பூட்டிய பழச்சாறுகள் அல்ல. உடன் பிழிந்து கரைத்துக் கொடுங்கள். படிப்படியாக பழத்தைச் சாறாக்காமல் முழுமையாக உண்பதற்கும் பழக்கப்படுத்துங்கள்.