குழந்தைகள் முன்னிலையில், நான் என் கணவரோடு மிக நெருக்கமாக, சகஜமாகப் பழகுகிறேன். இது எனக்கு தவறாகத் தோன்றவில்லை. ஆனால், என் கணவர், குழந்தைகளின் முன்பு இப்படி நடந்து கொள்ளாதே என்கிறார். நான் என்ன செய்ய?
கணவன் – மனைவி உறவைப் பற்றிய முதல் அறிமுகத்தை குழந்தைகள் பெறுவதே அவர்களது தாய் – தந்தையின் உறவாடலைப் பார்த்துத்தான். தாயும் தந்தையும் அன்பாகப் பழகுவதையும், விளையாட்டாகத் தொட்டுப் பேசிச் சிரித்து, சந்தோஷமாக இருப்பதையும் குழந்தைகள் பார்ப்பது நல்லதுதான். சண்டை, சச்சரவு என்று பலப்பல விரிசல்களுக்கிடையே ஆண் – பெண் உறவின் மேல் உள்ள நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்ள இது உதவும்.
கூடவே கணவன் – மனைவி என்றால் இத்தனை சலுகைகள் எடுத்துக்கொள்ளலாம், பிறரிடம் கூடாது என்ற சமூகக் கட்டுப்பாடுகளைக் கற்றுக் கொள்ளவும் உதவும். இதற்காக ரொம்ப ஓவராக ஈஷிக்கொள்ளும் “வயதுக்கு மீறிய காட்சிகளை“ குழந்தைகள் பார்க்க நேரிட்டால் அது தேவையற்ற பதற்றத்தையும், குழப்பங்களையும் ஏற்படுத்தி அந்த சின்னமனசை பாதித்துவிடக்கூடும் என்பதால் பெற்றவர்கள் கொஞ்சம் விவஸ்தையோடு நடந்துகொள்வது நல்லது.
மாதவிலக்கு சமயத்தில் எல்லாம் எனக்கு ரொம்ப டென்ஷனாகிறது. தேவையே இல்லாமல் கத்துகிறேன், அழுகிறேன், குழந்தைகளை அடித்து விடுகிறேன். இதைத் தடுக்க என்ன செய்யலாம்?
நுாற்றில் பத்துப் பதினைந்து பெண்களுக்கு இது மாதிரி மாதவிலக்கு நேரத்தில் மன இறுக்கம் அதிகமாகி விடுகிறது. இதை மாதவிடாய் நிறுத்தம் என்போம். இது ஒருவித ரசாயனக் குறைபாட்டுப் பிரச்னை. இதற்கு மிக எளிய மருந்துகள் பல உள்ளன. இதை உட்கொண்டால் மாதவிலக்கு நாள்களும் மற்ற நாள்களைப்போல ரிலாக்ஸ்டாக ஆகிவிடும். சைக்கியாட்ரிஸ்ட்டை உடனே போய் பாருங்கள்.