Home குழந்தை நலம் குழந்தைகள் உணவு சாப்பிட மறுத்தால்

குழந்தைகள் உணவு சாப்பிட மறுத்தால்

24

குழந்தைகள் உணவை விழுங்காமல் நாக்கால் வெளியே தள்ளிவிடும். இந்த செய்கையினால் சோர்ந்து போகாமல் அப்போதைக்கு நிறுத்தி விட்டு, ஒரு வாரம் கழித்து மீண்டும் முயற்சிக்கலாம். குழந்தைகள் இயல்பிலேயே வாயில் படும் பொருட்களை வெளியில் தள்ள முயற்சி செய்யும். நாளடைவில் அந்த பழக்கம் மாறிய பின்னர் உணவை முழுங்கத் தொடங்கும்.

சில குழந்தைகளுக்கு முதன்முறை ஸ்பூனால் கொடுக்கும்பொழுது பிடிக்காமல் போகலாம். உணவை சாப்பிட மறுத்தால், நமது ஆள்காட்டி விரலை நன்கு சுத்தமாக கழுகி அதில் உணவை சிறிய அளவில் தடவி குழந்தைக்கு கொடுக்கலாம். உணவு சுவை பழகிய பின்னர் ஸ்பூன் கொண்டு கொடுக்கலாம்.
ஸ்பூன்கள் கொண்டு உணவு கொடுக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். சிறுகுழந்தைகள் படுவேகமாக கையால் தட்டிவிடும். அப்போது குழந்தையின் வாயில், முகத்தில் பட்டுவிட வாய்ப்புள்ளது. அதனால் கூர்மையான, வெட்டும்படி உள்ள சில்வர் ஸ்பூன்களை உபயோகித்தல் கூடாது. குழந்தைகளுக்கென்றே உள்ள பிரத்தியோக குட்டி ப்ளாஸ்டிக் ஸ்பூன்களை பயன்படுத்துவது பாதுகாப்பானது.

சில குழந்தைகள் கூழாகவே சாப்பிட விரும்புவார்கள். சிறிய கட்டிகள் தென்பட்டால் அல்லது சிறிது கட்டியாக இருந்தாலும் சாப்பிட மறுப்பார்கள். மெல்ல அரைத்து ஊட்டுவதை நிறுத்த வேண்டும் என்றாலும், கெட்டியான உணவை விடாப்பிடியாக ஊட்ட முயன்றால் குழந்தைக்கு சாப்பிடுவதில் ஆர்வம் இல்லாமல் போய்விடும். அது சாப்பிட மறுத்து, அதனால் அதற்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும் அபாயம் உள்ளது. எனவே எதையும் கட்டாயப்படுத்தாமல், அதன் போக்கிலேயே சென்று கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டும். இப்போது அரைத்த உணவையே கொடுத்து மூன்று நாட்களுக்கொருமுறை ஒவ்வொரு ஸ்பூன் கெட்டியாக மசித்ததையும் கொடுத்து பழக்க வேண்டும்.

Baby healthy foodநன்றாக சாப்பிடும் சில குழந்தைகள் திடீரென சாப்பிடாமல் இருப்பது அல்லது விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒன்றை திடீரென சாப்பிட மறுப்பது என்பது குழந்தையின் சுபாவம். குழந்தை மறுத்து தலையை திருப்பவோ, துப்பவோ, அழுகவோ செய்தால் நிறுத்தி விட்டு சிறிது நேரத்திற்கு பிறகு கொடுத்து பார்க்க வேண்டும். உணவில் ஆர்வமில்லாத குழந்தைகளை நாம் சாப்பிடும்பொழுது பக்கத்தில் அமர வைத்து சாப்பிட்டால், அதை பார்த்து அவர்களுக்கும் சாப்பிடும் ஆர்வம் வரும்.

குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க தொடங்கும் வரை தண்ணீரே தேவையில்லை என்றாலும், முன்பே தண்ணீர் அடிக்கடி கொடுக்காமல் விட்டால் பின்னாளில் தண்ணீர் குடிக்கவே மாட்டார்கள். எனவே நன்கு காய்ச்சி ஆற வைத்த நீரை அவ்வபோது கொடுத்து பழக்க வேண்டும்.