Home குழந்தை நலம் குழந்தைகளை தாக்கும் சர்க்கரை நோய்

குழந்தைகளை தாக்கும் சர்க்கரை நோய்

35

Captureஉலகளவில் ஏராளமான மக்களை வாட்டி வரும் சர்க்கரை நோய்க்கு இயற்கையோடு இணைந்த எளிய தீர்வுகளை மருத்துவர்கள் கூறுகின்றனர். பள்ளிக் குழந்தைகளையும் சர்க்கரை நோய் தாக்குகிறது என்பது தான் இப்போதைய அபாயம். நாம் உண்ணும் உணவின் ஒரு பகுதியை குளுக்கோஸ் எனும் சர்க்கரையாக செரிமான மண்டலம் மாற்றுகிறது.

இந்த குளுக்கோஸ் ரத்தத்தில் கலந்து உயிரணுக்களுக்கு சக்தி அளிக்கிறது. குளுக்கோஸை உயிரணு ஏற்றுக் கொள்ள அதனுடன் கணையம் சுரக்கும் இன்சுலின் என்னும் ஹார்மோன் அவசியம்.

உடலில் உள்ள குளுக்கோஸைக் கையாளும் அளவுக்கு கணையம் இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இந்த செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுவதைத் தான் சர்க்கரை நோய் என்கிறோம்.

தற்போது சர்க்கரை நோய் பள்ளிக் குழந்தைகளையும் தாக்குவது தெரியவந்துள்ளது. தொடர்ந்து மனஅழுத்தம், அதிக எடை, உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இந்த வகை சர்க்கரை நோயுள்ள பலருக்கு எந்த அறிகுறியும் தோன்றாது.

ஒரு சிலருக்கு அதிகளவு தாகம், மங்கலான பார்வை, தோல் ஆகியவற்றில் தொற்று நோய் தாக்குதல், காயம் ஆறுவதில் தாமதம், எரிச்சல், கைகால்கள் மரத்துப் போதல், தொடு உணர்ச்சியின்மை போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.

இது போன்ற அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதிக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் சர்க்கரை நோயை கண்டு கொள்ளாமல் விடுவதால் வயிற்றில் வளரும் குழந்தை பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடுகிறது. வழக்கமாக கர்ப்ப காலத்தில் சர்க்கரையின் அளவில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்தப் பிரச்சனை பிரசவத்துக்குப் பின்னர் சரியாகி விடும். கர்ப்பகாலத்தில் பெண்களின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கண்காணிக்க வேண்டும். சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் விடும் பட்சத்தில், குழந்தைகளுக்கு மனநல குறைபாடு ஏற்படலாம். இதயம், மூளை உள்ளிட்ட உறுப்புகளும் பாதிக்கப்படலாம். மூளை வளர்ச்சி பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.

உடல் உழைப்புக்கு தகுந்த சமச்சீர் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று வேளை சரியான நேரத்துக்கு உணவு சாப்பிடுவது அவசியம். நேரம் தவறி சாப்பிடுவதும் தவறு.

நார்ச்சத்து உள்ள உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வது அவசியம். கொழுப்பு உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கவும். உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க மருந்து, உணவுக் கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சியும் அவசியம். உடற்பயிற்சியானது இதயத்தையும் ரத்தக் குழாய்களையும் சீராக இயங்க வைத்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்.

சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இது போன்ற பழக்கங்களை நடைமுறைப்படுத்திக் கொள்வதன் மூலம் நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும். சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் அறிவுரைப்படி மட்டுமே உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் மருந்துகளை பின்பற்ற வேண்டும். இல்லையெனில் எதிர் விளைவுகள் ஏற்படலாம்.