குளிர்காலமும், மழைக்காலமும் இதமானவை தான் மனதுக்கு, ஆனால் மார்கழிக் குளிரை கண்டு அனைவருமே நடுங்குகின்றனர். கோடை காலத்தில் கடும் வெயிலை சமாளிக்கும் நாம் குளிகாலத்தில் முடங்கித்தான் போகிறோம். இக்காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள் என்ன? இதற்கு காரணம் என்ன? அவற்றை எவ்வாறு தடுக்கலாம் என்று பார்ப்போம்.
குளிர் காலத்தில் அதிகாலைப் பனியால் சிலருக்கு சளி, தும்மல், இருமல், தலைவலி, போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இக்காலத்தில் அதிகப்படியான சருமப் பிரச்சினைகளும், தோல் சுருங்கி பொலிவிழக்கும், உதடு வெடிப்பு, முடி கொட்டுதல், பொடுகு தொல்லை, கண் மற்றும் பாத எரிச்சல், மலச்சிக்கல், தொற்று நோய்கள் போன்ற பிரச்சினைகள் வரும்.
எல்லா பிரச்சினைக்கும் முக்கிய காரணம் நம் உடலில் உள்ள நீர் சத்து மற்றும் ஆக்சிஜன் குறைபாடு தான். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு எளிதில் ஒவ்வாமை பிரச்சினை ஏற்படும். காலை வேளையில் நன்றாக மூச்சை இழுத்து காற்றை உங்கள் நுரை ஈரலில் தம் கட்டி ஒரு நிமிடம் கழித்து மூச்சை விடவும் தொடர்ந்து இவ்வாறான மூச்சி பயிற்சி செய்துவந்தால் சளி, இருமல், ஆஸ்துமாவை கட்டுப்படுத்தலாம். வேர்வை வெளியேறும் வகையில் உடல் பயிற்சி செய்வது மிகவும் நல்லது. குளிர் காலத்தில் அவ்வளவாகத் தாகம் எடுக்காது. ஆனாலும், போதிய அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும், தொண்டை வறண்டு போகாமல் பாத்துக்கொள்ள வேண்டும். வெந்நீர் அருந்துவது மிகவும் சிறந்தது. குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுப் பொருட்களை அப்படியே சாப்பிடுவதைத் தவிர்த்து தட்பவெட்பத்துக்கு அவை வந்ததும் சாப்பிட வேண்டும்.
உதடு வெடிப்பை தவிர்க்க நெய் அல்லது எண்ணெய்யை உதட்டில் பூசுங்கள். வறண்ட சர்மம் உள்ளவர்கள் வறட்சியை தடுக்க ஆலிவாயில் அல்லது தேங்காய் எண்ணெய் பூசி குளித்து வர சர்மம் சீராகும். வைட்டமின் ‘ஏ’ மற்றும் ‘சி’ சத்துக்கள் அதிகம் நிறைந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமம் பளபளக்கும். தூங்கும் முன் பாதத்தில் தேங்காய் எண்ணெய் பூசினால் வெடிப்பு குறையும், காலுறைகளையும் இரவு முழுவதும் அணிந்தால் கால் வெடிப்பு குறையும். வாரத்தில் நான்கு முறையாவது எண்ணெய் வைத்து தலை குளிங்கள். முடிந்தவரை வெந்நீர் குளியலை தவிருங்கள் இல்லையென்றால் மிதமான வெந்நீரில் குளியுங்கள் முடி பிரச்சினை குறையும்.
குளிர்காலத்தில் பிரச்சினைகளை தவிர்க்க, உணவில் கவனம் செலுத்த வேண்டும். காய்கறிகள், ஒமேகா 3 நிறைந்த மீன்கள், சிறுதானியங்கள், பாதாம், வேர்கடலை, தேன், போன்றவற்றை கூடுதலாக உணவில் சேர்த்துக்கொள்வதால் உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்கள் செயல் திறன் பெற்று, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. இஞ்சி, பனங்கற்கண்டு, சுக்கு, மிளகு போன்றவை ஜலதோஷத்திற்கும், காய்ச்சலுக்கும் சிகிச்சை அளிக்கக்கூடியது, ஜீரண சக்தியை தூண்டும் அவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகள் சாப்பிடுங்கள் உடலை சூடாக வைத்து கொள்ளலாம். மீன், முட்டை, இறைச்சி ஆகியவற்றையும் சாப்பிடுங்கள் குளிரை தாக்குபிடிக்கலாம்.
நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்பதில் கவனகாக இருந்தால் குளிரோ மழையோ எதுவா இருந்தாலும் தாங்கிக்கொள்ளலாம்.