Home குழந்தை நலம் குறைபாடு உள்ள குழந்தைகளின் மூளை வளர்ச்சி

குறைபாடு உள்ள குழந்தைகளின் மூளை வளர்ச்சி

36

infantமண்ணில் பிறக்கும் குழந்தைகள் அனைவருமே ஒரே மாதிரியான உடல் நலத்துடன் இருப்பதில்லை. ஒரு சிலர் அசாதரணமாகத் தோற்றமளிப்பர். நாம் எதிர்பார்க்கும் நேரங்களில் அவர்கள் பேசவோ, அமரவோ மாட்டர். இந்த பாதிப்பை, “மூளை செயல்திறன் குறைபாடு’ என்று அழைக்கின்றனர்.
மனிதர்களின் தலைமைச்செயலகம் என்று அழைக்கப்படும் மூளையானது சரியான வளர்ச்சியுடன் இல்லை என்றால் பலவித பாதிப்புகள் ஏற்படுகின்றன. மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் கால்கள் விரைப்பாக, ஒன்றுக்கொன்று பிணைந்து இருக்கும். தலை சாய்ந்து, வாயிலிருந்து உமிழ்நீர் வழிந்தபடி இருக்கும்.
கால் தசை பலவீனமாகி, சரியாக நடக்க முடியாமல், செயல் ஒருங்கிணைப்பு இல்லாமல், பேச்சு, விழுங்குவது, மூச்சு விடுவது ஆகியவற்றில் குறைபாட்டுடன் இருப்பர். இந்த குழந்தைகள், ஒத்த வயது குழந்தைகளை விட தாமதமான செயல்பாடுகளைக் கொண்டிருப்பர்.
தாயின் வயிற்றில் கருவின் மூளை மற்றும் உறுப்புகள் சரியாக வளர்ச்சி அடையாமல் போகும்போது, இந்தக் குறைபாடுகள் தோன்றத் துவங்கி விடுகின்றன.
மூளை வளர்ச்சி குறைவதற்கு, முன்பெல்லாம் மகப்பேறு மருத்துவர்கள் மீது பழி போடப்பட்டது. இப்போது மருத்துவ முன்னேற்றம் ஏற்பட்ட பிறகு கூட, மூளை வளர்ச்சி குறைந்தவர்கள் பிறப்பு எண்ணிக்கை குறையவில்லை. மூளை வளர்ச்சி குறைந்து காணப்படும் குழந்தைகளில் 10 சதவீதத்திற்கும் குறைவானோர், பிறப்பிலேயே மூச்சுத் திணறலால் பாதிப்பு கொண்டவர்களாக இருப்பதாக, மருத்துவக் குறிப்பேடுகள் தெரிவிக்கின்றன.
ஆயிரத்தில் இருவர்
பிறக்கும்போது சாதாரண நிலையில் உள்ள குழந்தை, பின் மூளையில் ரத்தக்கசிவோ, தொற்றோ, மூளையின் மேற்புறத்தில் தொற்றோ ஏற்பட்டால், மூளை செயல்திறன் குறைபாடு உருவாகும்.
தாய்க்கும், சேய்க்கும் ரத்தப் பிரிவு ஒத்துப் போகாமல் போகும்போது, குழந்தைக்கு மஞ்சள் காமாலை உருவாகும் போது அதை கண்டறியாமல், சிகிச்சை அளிக்காமல் விட்டு விட்டால், மூளை பாதிப்பு, மூளை வளர்ச்சி குறைபாடு ஏற்பட்டு விடும்.
ஆயிரத்தில் இரண்டு குழந்தைகள் இந்த பாதிப்பு கொண்டவர்களாக உள்ளனர். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு, இதயம், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடும் சீராக இருக்காது என்பதால், இவர்களை கவனமாகக் கையாள வேண்டும். பார்வைக் குறைபாடு, காதுகேளா நிலையும் இவர்களிடையே காணப்படும்.
அம்மை, பொன்னுக்கு வீங்கி ஆகியவற்றால் கர்ப்பிணிகள் பாதிக்கப்படும் போது, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் மூளை வளர்ச்சி குன்றியவர்களாக இருக்க வாய்ப்பு உண்டு. இந்தத் தொற்று ஏற்பட்டு விட்டால், குணப்படுத்த முடியாது. எனினும், வருமுன் காக்கலாம்.
மத்திய நரம்புத் தொகுதி பாதிப்பு
மூளை செயல் குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது மூளை நரம்பியல் நிபுணர்கள் சில ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர்.
இக் குறைபாட்டினால் பிரதான தாக்குதலுக்கு உள்ளாவது, மத்திய நரம்பு மண்டலம் தான். மூளை கொடுக்கும் உத்தரவுகளை, தசைகள் செயல்படுத்தாது. தசைகள் தானாகவே விரைப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அல்லது இயக்கமே இல்லாமல் கிடக்கும்.
இந்த பாதிப்பு அதிகரிக்கும் தன்மை கொண்டதல்ல. குழந்தை வளரும் போது, நோயும் வளரும் என்ற நிலை ஏற்படாது. தசை செயல் திறன் இழப்பு போன்ற, வளரும் தன்மை கொண்ட நோய்களிலிருந்து, இதை எளிதில் வித்தியாசம் காணலாம்.
மூளை செயல்திறன் குறைபாடு, பல வகைகளில் ஏற்படுகிறது. பெரும்பாலும் காணப்படுவது, தசை இறுக்க நோய். தசைகள் இறுக்கமாக, விரைப்பாகக் காணப்படும். இதனால் கால், கைகளை வளைப்பது கடினம். உடலின் ஒரு பக்கத்தில் மட்டும் பாதிப்பு ஏற்படலாம்; கால்கள் மட்டுமோ, கைகள் மட்டுமோ அல்லது கால், கை மட்டுமோ பாதிக்கப்படலாம். குழந்தைக்குத் துணி மாற்றும் போது, தாய் இதை கண்டுபிடிக்கலாம்.
விறைத்த காலை மடக்க முடியாமல் போவது தான் இதன் அறிகுறி. தவழும் போது, காலுக்கு விசை கொடுக்காமல், அதை இழுத்து இழுத்து தவழ்வதும் ஒரு அறிகுறி. நடக்க துவங்கும் போது, கால் பின்னிக் கொண்டு, சீரான நடை இல்லாமல் போகும்.
இதில் இன்னொரு வகை, தசைகளின் வளர்ச்சி குறையும். இதனால், குழந்தையின் தலை, ஆடிக் கொண்டே இருக்கும். தலை சீராக நிற்க வேண்டிய மாதத்தில் நிற்காது.
தலை சாய்ந்த நிலையிலேயே இருக்கும். இதனால், குழந்தைக்கு பால் கொடுப்பதில் சிரமம் ஏற்படும். நாக்கு வெளியில் துறுத்திக் கொண்டிருக்கும். வாயிலிருந்து உமிழ்நீர் வடிந்தபடி இருக்கும். பேச்சும் சீராக இருக்காது; சொல்லின் வடிவம் மாறும்.
மூன்றாவது வகையில், உடலின் இயக்கம் நடுக்கத்துடன் காணப்படும். எனவே, எந்த வகை பாதிப்பு என்பதை, நுணுக்கமாகக் கவனித்துக் கண்டறிய வேண்டும். 3 வயது நிரம்பியதும், குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்து இதைக் கண்டறியலாம். எந்தெந்த உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை என்பதைத் தேடிக் கண்டறிய வேண்டும். பார்வைத் திறன், செவித்திறனையும் ஆராய வேண்டும். மயக்கம் ஏற்பட்டால், இ.இ.ஜி., (எலக்ட்ரோ என்செபலோகிராம்) எடுத்து பார்க்க வேண்டும். இதில் ஏதும் தெரியவில்லை எனில், சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுத்து பார்க்க வேண்டும் என்கின்றனர் மூளை நரம்பியல் வல்லுநர்கள்
அறிவில் சிறந்தவர்கள்
மூளை செயல்திறன் குறைபாடு கொண்டவர்கள், தாமதச் செயல்பாடு, காதுகேளாமை, பார்வைக் குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்படுவதால், அவர்கள் திறமையை மேம்படுத்த, பல்திறன் மேம்பாட்டு அணுகுமுறை தேவை என்கின்றனர் மருத்துவர்கள்
உடல் வளர்ச்சி, ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்புத் திறன் ஆகியவற்றை பராமரிக்கவும், மூச்சு திணறல், நுரையீரல் பிரச்னை, வலிப்பு ஆகியவற்றின் கடுமையைக் குறைப்பதற்காகவும், நிரந்தரமாக குழந்தை நல மருத்துவரை பணி அமர்த்திக் கொள்ள வேண்டும்.
மூளை செயல்திறன் குறைபாடு கொண்ட பெரும்பாலான குழந்தைகள், அறிவுத் திறனில் சிறந்தவர்களாகவே உள்ளனர். கல்வியில் முழுமையாக ஈடுபட்டு, சிறப்புப் பணி தகுதிகள் பெற்று, கை நிறைய சம்பாதிக்கும் திறனுடன் திகழலாம்.
அவர்களுக்கு முக்கிய தேவை, மற்றவர்களின் உதவி, பெற்றோரின் ஊக்குவிப்பும்தான் என்பது மருத்துவர்களின் அறிவுரை.