தாத்தா, பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்த காலம் இன்றைக்கு இல்லை. அவர்களின் இடத்தை கார்டூன் சேனல்களும், யு டுயுப்பில் ரைம்ஸ் கதைகளும், நிரப்பி வருகின்றன. வெயிலுக்கு வெளியில் சென்று விளையாடாமல் தொலைக்காட்சியும், கணினியுமே கதி என்று கிடக்கிறார்கள் குழந்தைகள். கதை சொல்லி வளர்த்தால் குழந்தைகளின் கற்பனை சக்தியும், கிரியேட்டிவிட்டியும் வளரும் என்று கூறுகின்றனர் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்களேன்.
நேரம் செலவிடலாம்
இரவு நேரத்தில் படுத்துக்கொண்டே கதை கேட்பது குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்று எனவே அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு ஆர்வம் ஏற்படுத்தக்கூடிய கதைகளை சொல்லி அவர்களை மகிழ்விக்கலாம். இதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தையோடு அதிக நேரம் செலவிட முடிகிறது.
தாத்தா, பாட்டி போன்றவர்கள் மூலம் கதை கேட்கும் போது, அவர்களும் குழந்தைகளுக்கும் அன்னியோன்யம் ஏற்படுகிறது. குழந்தைகளுடன் என்ன பேசுவது என்று தெரியாமல் முழிக்கும் போது, கதைகள் உதவுகிறது. நல்ல கதைகளை கூறுங்கள். அரிச்சந்திரன், சிரவணன் கதைகள்தான் மகாத்மா காந்தியை உருவாக்கியது.
வாழ்க்கைக் பாடம் புரியும்
கதையின் மூலம் அவர்களுக்கு, வாழ்க்கைப் பாடங்களான உதவி புரிதல், வேலை செய்தல், நேர்மையாக இருத்தல், உண்மை பேசுதல், ஏமாற்றங்கள் / தோல்வி ஏற்பட்டால் துவளாமல் இருத்தல், போராடி ஜெயிப்பது போன்றவற்றை சொல்ல முடிகிறது.
பழங்காலத்து கதைகள் மூலம் பாரம்பரியம், ஒழுக்கம் ஆகியவற்றை கற்றுக் கொடுக்கலாம். கதை கேட்பதன் மூலம் குழந்தைகளுக்கு அடுத்தவர் பேசுவதை கேட்கும் பழக்கம் ஏற்படுகிறது. கதை சொல்வதன் மூலம் கேள்வி கேட்பது போன்ற ஆக்கபூர்வமான உரையாடல்களுக்கு வழிவகுக்கும்.
கற்பனை சக்தியை தூண்டும் கதைகள் சொல்லும் போது, அவற்றை கேட்டு வளரும் குழந்தைகள் எதிர்காலத்தில் ஆக்கபூர்வமான முறையில் பிரச்சினைகளை கையாள்பவர்களாக இருக்கிறார்கள் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
டிவி, கணினி போன்ற மீடியா தாக்கம் அதிகம் உள்ள இன்றைய கால கட்டத்தில், பெற்றோர்கள், குழந்தைகள் இடையேயான உரையாடல் என்பது குறைந்து வருகிறது. கதை சொல்வதன் மூலம், பெற்றோர் தன் குழந்தைப் பருவத்தை பற்றி பகிர்ந்து கொள்ள முடியும்.
குழந்தைக்கு படுக்கை நேர கதைகள் சொல்வதனால், அவர்கள் இனிமையான கனவுகள் கொண்டு தூங்குவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்கள் இதனால் இரவு ஆழ்ந்த உறக்கமும், பாதுகாப்பு உணர்வும் பெறுவதாகவும் தெரிவிக்கிறார்கள்.
நம்பிக்கை வளரும்
கதை சொல்லும் போது வெறுமனே உணர்வின்றி சொல்லாமல், தகுந்த குரல் மாற்றங்கள், முக பாவங்களோடு சொன்னால், குழந்தைகள் இன்னும் ஆர்வமாக கேட்பார்கள். உங்களுக்கும் குழந்தைக்குமான நெருக்கம் அதிகரித்து, நீங்கள் அவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளீர்கள் என்று குழந்தைக்கு உங்கள் மேல் நம்பிக்கையும் வளரும்.
கற்பனை வளரும்
குழந்தைகளை அவர்களே கற்பனை செய்து கதை சொல்லத் தூண்டுவதன் மூலம், கற்பனை சக்தி வளருவது மட்டுமின்றி, அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அதன் மூலம் வெளிக் கொண்டுவர வழி வகுக்கும். அவர்களே கதை சொல்லும் போது, மற்றவர் முன் பேசுவதற்கான திறன் கூடும். தன்னம்பிக்கை வளரும். உங்கள் குழந்தையின் மனதில் என்ன இருக்கிறது என்பதை வெளிகாட்டும். கிரியேட்டிவிட்டி, கற்பனை திறன் வளரும்.