சமூகத்தின் மிகச் சிறிய அலகு குடும்பம். ஒரு ஆணும்,பெண்ணும் பாரம்பரிய ரீதியாக திருமணத்தின் மூலம் ஏற்படுத்தும் இரத்த உறவு முறை யின் அடையாளம் குடும்பம். பரம்பரை பரம்பரையாகத் தொடரும்
பந்தம் தான் திருமணம்.
இதனால் தான் இது “ஆயிரங் காலத்துப் பயிர்” என்று பெருமை பேசப்படுகின்றது. இத்தகைய குடும்பங்கள் நிலைகுலையும் போது அந்த குடும்பத்திலுள்ள உறவுகளும் சற்று ஆட்டம் காணத் தொடங்குகின்றன.
அதிலும் சந்தேகம் என்பது கொடிய விஷம். அது கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று ஒழித்துவிடும். அதிலும் குடும்பத்தில் அது குடி கொண் டால் அங்கு நாசமே விளையும்.
கணவன் மனைவி மீதும் மனைவி – கணவன் மீதும், சந்தேகம் கொண்டால் அந்தக் குடும்பம் என்னவாகும் என்பதற்கு எடுத்துக் காட்டாக இந்த சம்பவம் அமைகின்றது.
அதேவேளை, தாய் ஸ்தானத்தில் இருப்பவளுக்கு மிகப் பெரிய பொறுப்புள்ளது. காம ஆசைகளுக்கு அப்பால் குடும்பம், பிள்ளைகள், கணவன் என்று பின்னப்பட்ட வலையை அவள் ஒருபோதும் அறுத்தெறியக் கூடாது. அந்த வகையில் இங்கு நடந்தது என்ன என்று பார்ப்போம்.
அன்று சூரியன் மறைய ஆரம்பித்தது, இருள் சூழ்ந்த நிலையில் தியனி வழமைக்கு மாறாக சற்று தாமதித்தே வீட்டுக்கு வந்தாள். அவள் வரும் போதே 6 மணிக்கு பிந்தியே இருக்கும். வீட்டில் அவளது தம்பியும் தங்கையுமே இருந்தார்கள்.
வழமையாக அந்த நேரத்தில் தங்கள் காணிக்கு வேலைக்குச் சென்று வந்திருக்கும் தாயும் தந்தையும் அன்று வீட்டில் இருக்கவில்லை. தன் தம்பியிடமும், தங்கையிடமும் விசாரிக்க தங்கை, “நாங்கள் வீட்டுக்கு வரும் போது வீட்டில் யாரும் இருக்க வில்லை அம்மா சமைத்து வைத்திருந்தார்.
நாங்கள் தான் போட்டு சாப்பிட்டோம்” எனக் கூறினாள். இந்த நிலையில் பிள்ளைகள் மூவருமே தங்கள் பெற்றோரின் வருகையை எதிர்பார்த்து வாசலிலேயே காத்து நின்றார்கள்.
இவ்வாறான சூழ்நிலையில் மூத்தவள் தியனிக்கு தலை சுற்றியது. காரணம். முதல் நாள் இரவு வீட்டில் நடந்த நிகழ்வுகளே ஆகும்.
முதல் நாள் இரவு நிம்மதியற்ற இரவாகவே அவர்களுக்கு கழிந்தது. நள்ளிரவு வரை தாயும் தந்தையும் சண்டையிட்ட வண்ணமே இருந்திருக்கின்றார்கள். எனவே இரவு அவர்கள் மூவருமே ஒழுங்காக நித்திரை கொள்ள வில்லை.
காலையில் எழுந்தவுடனேயே மூத்த மகளான தியனி “அம்மா நீ இன்னைக்கு தோட்டத்திற்கு மிளகு பறிக்கச் செல்ல வேண்டாம். நேற்று இரவு முழுக்க சண்டை பிடித்து நித்திரையும் கொள்ளவில்லை.
எனவே வேலைக்குச் செல்ல வேண்டாம்” எனக் கூறி விட்டு தன் தம்பியையும் தங்கையையும் தன்னுடனே அழைத்துக் கொண்டு வேலைக்குப் புறப்பட்டாள். அதையும் மீறி தாய் எங்கு சென்றாள் என்பதே அவளுக்கு பெரும் யோசனையாக இருந்தது.
நேரம் செல்லச் செல்ல பொறுமையிழந்தவளானாள் தியனி, எனவே அயல் வீட்டில் இருப்போரிடம் தன் தாய், தந்தை பற்றி விசாரிக்கச் சென்றாள். அவர்களும் “தெரியாது, காணிக்குப் போவதை தான் கண்டோம்” என்று கூற, தியனிக்கு பயம் மேலும் இரட்டிப்பானது.
அயலவர்களின் உதவியுடன் அவர்களின் காணிக்குச் சென்று பார்ப்போம் என்று புறப்பட்டார்கள்… செல்லும் போதே பிள்ளைகளின் மனதில் ஏதோ ஒருவித சலனம் நிறைந்திருந்தது. “ஐயோ, எனது பெற்றோருக்கு ஏதும் ஏற்பட்டிருக்கக் கூடாது” என்று ஆயிரம் பிரார்த்தனைகள் இறைவனை நோக்கியிருந்தன.
எனினும், அப் பிள்ளைகளின் உளமார்ந்த பிரார்த்தனை அந்த இறைவன் காதில் விழ வில்லைப் போலும். அவர்கள் கண்ட காட்சியால் ஒரு கணம் அந்தப் பிள்ளைகளின் இரத்தம் உறைந்து போனது. அங்கே தாயும் தந்தையும் தோட்டத்திலுள்ள அவர்களின் பழைய வீட்டில் உயிரற்ற நிலையில் கிடந்தார்கள்.
எந்தப் பிள்ளைகளும் தன் தாய் தந்தைகளை காணக் கூடாத காட்சி அது. தாய் இரத்த வெள்ளத்தில் கழுத்தில் ஆழமான வெட்டுக்காயத்துடன் கிடந்தாள். அருகில் தேயிலை செடிகளை வெட்டும் கூரிய கத்தியும் கிடந்தது. தந்தையோ ஒரு அறையில் கயிற்றில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
உடனடியாக அந்த இடத்தில் இருந்தவாறே பிள்ளைகளுடன் வந்த அயலவர் ஒருவர் பதறியடித்து பொலிஸாருக்கு அறிவித்தார். அதே நேரம் அகருல்ல பொலிஸார் அவ்விடத்தை வந்தார்கள் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸாருக்கு பல உண்மைகள் தெரிய வந்தன.
மல்லிகா சந்திராணி வயது (42), ஜயவர்தன வயது (47) ஆகிய இருவரும் சுமார் 20வருடங்களுக்கு முன் திருமண பந்தத்தில் இணைந்தவர்கள். இவர்களுக்கு தியனி (19), தமயந்தி (12), மகிந்த(07)ஆகிய மூன்று பிள்ளைகள்.
திருமணமாகி தமது வாழ்வினை தொடங்கியமை, கொஞ்சிக் குலாவி மழலை செல்வங்கள் மூவரின் மழலை மொழி கேட்டது எல்லாமே அவர்கள் உயிரற்ற நிலையில் ஜடமாய் கிடந்த அந்தப் பழைய வீட்டில் தான்.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் தான் இந்த பழைய வீட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீற்றர் தொலைவிலுள்ள ஒரு காணித்துண்டை வாங்கி தமது வசதிக்கு ஏற்றவாறு ஆசை ஆசையாய் ஒரு வீட்டைக்கட்டி. குடி போயிருந்தார்கள். எனவே, அவர்களுடைய பழைய வீட்டை பழைய தளபாடங்களை வைக்கும் களஞ்சிய அறையாக உபயோகித்து வந்திருக்கிறார்கள்.
ஆனால் பல கனவுகளுடன் கட்டிய வீட்டில் வெகு நாட்கள் சந்தோஷமாக இருக்க கிடைக்கவில்லை. கணவன் மனைவி இருவருக்குள்ளும் சண்டை சச்சரவுகளாகவே இருந்து வந்துள்ளன.
அதற்கு மல்லிகாவின் நடவடிக்கைகளும் ஒரு காரணமாக அமைந்திருக்கின்றது. மல்லிகாவின் நடத்தைகளில் சந்தேகம் எழுந்து ஜயவர்த்தன சற்றுப் பொறுமையிழந்தான். இது தொடர்பில் தேடிப்பார்க்கும் போது, மல்லிகாவுக்கும் சிந்தக்க என்பவனுக்குமிடையில் தொடர்பு இருந்தது தெரியவந்தது.
இதனால் வீட்டுக்குள் பிரச்சினை பூகம்பமாக வெடித்திருந்தது. தான் திருமணம் முடித்து தன்னோடு சுக துக்கங்களில் பங்கேற்று தன்னுடைய குழந்தைகளுக்கு தாயான தன் ஆசை மனைவி வேறொரு ஆடவனோடு பழகினாள் என்று தனக்குள் புழுங்கி மடிந்தான்.
உண்மையில், எந்தக் கணவனும் பொறுத்துக் கொள்ள முடியாத அதிர்ச்சி தான் அவனுக்கும் ஏற்பட்டது.
இதனால் குழம்பிப் போன அவன் கடந்த ஆறு மாதத்துக்கு முன் வீட்டில் இருக்க பிடிக்காமல் மனம் நொந்துபோன நிலையில் ஜயவர்தன தனது பழைய காணியில் இருக்கும் பாழடைந்த வீட்டில் போய் தங்கி இருந்துள்ளான்.
எனினும் அடிக்கடி அவன் மனைவி மல்லிகாவும், பிள்ளைகளும் வீட்டுக்கு வருமாறு தொல்லை கொடுத்ததினால் தான் கடந்த மாதம் பிள்ளைகளுக்காக சரி வீட்டுக்குப் போவோம் என்று நினைத்து வீட்டுக்கு வந்திருக்கின்றான்.
எனினும் மேலும் சண்டை தொடரவே செய்திருக்கின்றது. இதனால் பிள்ளைகள் மூவருக்கும் தம் பெற்றோரின் நடவடிக்கைகள் பெரும் அழுத்தத்தைக் கொடுத்தன. இது குறித்து பெற்றோர் சற்றும் சிந்திக்க வில்லை. குறைந்தது மல்லிகாவாவது சரி தனக்கு வயதுக்கு வந்த 19 வயது மகளும் இருக்கிறாள்,
இன்னும் ஒரு மகளுக்கு 12 வயது. அவளும் பருவமடையும் வயதில் இருக்கின்றாள் என்பதைக் கூட சிந்தித்திருக்கவில்லை. விதி அவர்கள் வாழ்க்கையில் விளையாடியது. அப்படி சிந்தித்திருந்தால் இன்று இந்த பிள்ளைகளுக்கு தாய், தந்தை என்ற இருவருமே இல்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலை வந்திருக்காது.
ஏற்பட்ட எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் மல்லிகாவின் கள்ளக் காதலினால் குடும்பத்தில் ஏற்பட்ட சந்தேகம் தான் என்பது பொலிஸ் விசாரணைகளின் மூலம் உறுதியாகி இருக்கின்றது.
ஜயவர்தன மனைவி மல்லிகாவை கத்தியால் கழுத்தில் தாக்கி கொலை செய்து விட்டு தானும் தனக்கு தானே கயிற்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
என்பது உறுதியாகியுள்ளது. ஜயவர்த்தனவின் உடலை அவனது இளைய சகோதரன் பொறுப்பேற்று எடுக்க, மல்லிகாவின் உடலை அவளது மூத்த சகோதரன் பொறுப்பேற்று எடுத்துள்ளான்.
இருந்த போதிலும் பிள்ளைகளின் வேண்டுகோளுக்கு இணங்க ஜயவர்தன, மல்லிகா ஆகிய இருவரது சடலங்களும் அவர்கள் ஒன்றாகக்கூடி வாழ்ந்து மகிழ்ந்த அவர்களின் பழைய வீடு இருந்த காணியிலேயே புதைக்கப்பட்டன.
பெற்றோரின் இந்த அவரச முடிவினால் இனி அந்தப் பிள்ளைகளுக்குத்தான் கஷ்டம் அதுவும் இளம் வயதிலேயே தியனி குடும்ப பொறுப்புகளை சுமக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டாள். அவர்கள் நிம்மதியாய் போய்ச் சேர்ந்து விட் டார்கள். இருப்பவர்களை பற்றி சிந்திக்க வில்லை.
அண்மைக்காலமாக இலங்கையில் தற் கொலை, கொலை என்பன பாரிய சமூக பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதுவும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொள்வது என்பது ஒரு தொடர் கதையாகவே போய் விட்டது.
வறுமை, ஒழுக்கமற்ற பொழுது போக்குகள், மனக்குழப்பங்கள் என்பன மானிட வாழ்க்கையைத் திடீரென முடிவுக்குக் கொண்டு வருகின்றன. ஆனால் போராட் டங்கள் நிறைந்தது தானே வாழ்க்கை. இறப்பதற்கு வழி தேடுபவர்கள் சற்று சிந்தித்தால் வாழவும் வழி கிடைக்கும்.