‘டீன்ஏஜ்’ பெண்களை வளர்க்கும் தாய்மார்கள், மகள் காதல்வசப்பட்டுவிடக்கூடாதே என்ற கவலையோடுதான் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறார்கள். மகள் காதல்வசப்பட்டிருந்தால் எப்படியாவது அதை கண்டுபிடித்துவிடவேண்டும் என்ற முயற்சியிலும் ஈடுபடுகிறார்கள். மகள் காதலில் விழுந்திருந்தால் அதை கண்டு பிடிக்கவேண்டியது தாயின் பொறுப்புதான். ஆனால் கண்டுபிடித்ததும் கதிகலங்கி அதிரடி நடவடிக்கை எதிலும் ஈடுபட்டுவிடக்கூடாது.
காதல் வசப்பட்டிருக்கும் மகளிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் தெரியுமா?
* காதலித்துக்கொண்டிருக்கும் மகளை வீட்டிற்குள்ளே பூட்டிவைப்பது, செல்போனை பறித்துவைத்துக்கொள்வது போன்றவை சரியில்லைதான். ஆனால் மகள் காதலிப்பதாக சந்தேகம் வந்துவிட்டாலே அவளை கண்காணிக்கவேண்டும். அவள் எப்போதும் தன்னோடு வைத்திருக்கும் பேக்கை ரகசியமாக சோதனையிடலாம். ஒருவேளை மகள் அதுபற்றி கேட்டால், அதற்கு சரியான, பொதுவான காரணம் ஒன்றை சொல்லி தப்பித்துவிடவேண்டும். அவளது செல்போன் பேச்சுக்களிலும் கவனம் செலுத்தவேண்டும். அவள் காதல் என்ற பெயரில் ஆபத்துக்களில் சிக்குவதை இந்த நடவடிக்கைகள் மூலம் அறிந்து தடுக்கலாம்.
* சந்தேகத்தை வெளிக்காட்டாத அளவுக்கு தாய், மகளிடம் பேசிக்கொண்டிருக்கவேண்டும். அவள் மீது பெற்றோராகிய தாங்களுக்கு எவ்வளவு அக்கறை இருக்கிறது என்பதை அவளது மனதில் பதியும்விதத்தில் அவ்வப்போது உணர்த்திக்கொண்டேயிருக்க வேண்டும். தங்களை போன்று அவளை பாதுகாக்கக்கூடிய துணைவரை தங்களால் தேடிக் கண்டுபிடித்து தரமுடியும் என்பதையும் வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் சுட்டிக்காட்டவேண்டும்.
* மகள் காதலிப்பதை உறுதி செய்துவிட்டால், அவளுக்கு நெருக்கமான உறவினரை ஏற்பாடு செய்து, அது பற்றி அவளிடம் பேசவைக்கலாம். ஆனால் மகள் காதலிப்பதை உறவினர்களில் பலருக்கு தெரிவித்து பிரச்சினையாக்கினால் அவள் மனஅழுத்தத்திற்கு உள்ளாகிவிடுவாள்.
* தந்தை அடித்து மிரட்டுவது, தாயார் மகளது காலை பிடித்துக்கொண்டு காதலை கைவிடும்படி கதறுவது போன்றவை எதிர்பார்த்த நல்ல பலனைத்தராது.
* மகளது காதல் உங்களுக்கு பிடிக்காவிட்டால், ஏன் பிடிக்கவில்லை என்பதையும்- அவளது எதிர்காலத்திற்கு அது சிறப்பானதல்ல என்பதையும் தெளிவாக எடுத்துக் கூறுங்கள். உடனே காதலை கைவிட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்காமல் அவள் யோசித்து முடிவெடுக்க நேரம் கொடுங்கள்.
* ஆண் நண்பர்களோடு பேசவும், பழகவும் உங்கள் மகளுக்கு வாய்ப்புகொடுங்கள். ஆனால் அந்த நட்பிற்கு எல்லை வகுத்துக்கொள்ளும்படி கூறுங்கள். எல்லை என்பது அவள் கடக்காமல் இருப்பதற்காக அல்ல, மற்றவர்கள் கடந்து வராமல் இருக்க என்பதை உணர்த்துங்கள். காதலர் கொடுக்கும் எந்த வாக்குறுதியையும் நம்பி, எல்லைமீறிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கச் சொல்லுங்கள்.
* அப்பா, அம்மா, உடன் பிறந்தவர்கள் அடங்கிய நெருங்கிய உறவு வட்டம் ஒன்றை உருவாக்கும்படி மகளிடம் கூறுங்கள். ‘இந்த வட்டத்திற்குள் புதிதாக யாரையாவது நீ சேர்ப்பதாக இருந்தால், எங்களிடமும் அதை பற்றி பேசவேண்டும்’ என்று முதலிலே கூறிவிடுங்கள்.
* சிரிப்பு, பேச்சு, சில வித செயல்கள் மூலமே ஒருவர் உங்கள் மகளின் நெருங்கிய உறவு வட்டத்திற்குள் வரமுடியும். அதனால் நண்பர்களை தூரத்திலேயே வைத்திருக்கச் சொல்லுங்கள்.
* ஆண் நண்பர்களிடம் பழக எல்லை நிர்ணயித்தால், முதலில் உங்கள் மகளை குழப்பும் விதத்தில் ‘மற்றவர்களை மதிக்கத் தெரியாதவள், கர்வம் பிடித்தவள்’ என்பதுபோல் பேசுவார்கள். அதை நினைத்து வருந்தவேண்டாம் என்று உங்கள் மகளிடம் கூறுங்கள். தனக்கு பிடிக்காத விஷயங்களை செய்யும்படி யாராவது கூறினால் ‘முடியாது’ என்று தைரியமாக கூறும்படி வலியுறுத்துங்கள். முடியாது என்பதை தைரியத்தோடு, தன்னம்பிக்கையோடு கூறவேண்டும் என்பதையும் உணர்த்துங்கள்.