இப்போதைய தலை முறையினரால் தோல்விகளை தாங்கிக்கொள்ள முடிவதில்லை. காதலிலும் இது தொடர்கிறது.
இங்கே தோல்வியைப்பற்றி பார்க்காபோவதில்லை. மாறாக தங்கள் காதலை பெற ஆண்கள் எப்படி வன்முறையை கையில் எடுக்கிறார்கள் என்று பார்போம்.
ஒருதலையாய் ஒரு பெண்ணை காதலிக்க துவங்கும் ஆண்கள் நல்ல பிள்ளைகளாகவே ஆரம்பத்தில் இருக்கிறார்கள். தங்கள் காதலை அந்த பெண்ணிடம் வெளிப்படுத்திய பின்பு, அவள் ஏற்றுக்கொள்ளவில்லை எனில் அதைத்தோல்வியாகக் கருதுகிறார்கள். பின்னர் அவர்களின் நடவடிக்கை, வேறு விதமாய் செல்கிறது.
தங்களை வருத்திக்கொள்வது, ரத்தத்தில் கடிதம் எழுதுவது இப்படி. இதனால் சிறு துன்பம் தான் ஏற்படுகிறது.
ஆனால் இதை விட கொடியது, காதலை மறுத்த பெண்ணிடம், காதலிக்கச்சொல்லி மிரட்டுவது, மிரட்டியேனும் காதலைப்பெற முயற்சி செய்வது.
ஆசிட் ஊற்றி விடுவேன் என்றும், உன் அழகைக்குலைத்து விடுவேன் என்றும், எனக்கு இல்லாத நீ யாருக்குமே கிடைக்க கூடாது என்றும் பயமுறுத்துகிறார்கள்.
இன்னும் சிலர், ஒரு படி மேலே போய், தாங்கள் சொல்வதை செய்து பழிவாங்குகிறார்கள். அவளை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். கொலை செய்கிறார்கள். அப்படி செய்வதால் அந்த பெண்ணின் உயிர் பறிபோய்விடும் அல்லது அவளின் வாழ்க்கை. உண்மைக்காதலன் இப்படி செய்வானா?
ஒன்றை இந்த இளைஞர் சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும். மிரட்டி வரவழைப்பதற்கு பெயர் காதல் இல்லை. அது உங்கள் இயலாமையின் வெளிப்பாடு. நீங்கள் ஆண் வர்க்கத்திற்கே ஒரு அவப்பெயர், ஆண்மை அற்றவர்கள். புழுவை விட கேவலமானவர்கள். ஒரு பெண்ணிடம் இருந்து எப்படி காதலைப் பெறுவது என்பது பற்றி ஒரு சிறு அறிவு கூட இல்லாத அறிவிலிகள்.
அவளின் காதலைப் பெறவே பொறுமையாகக் காத்திருக்கத் தயாராக இல்லாத நீங்கள், வேறு எதற்க்காக காத்திருப்பீர்கள்? எதற்கும் இல்லை.
ஒரு பெண்ணின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாத நீங்கள் எப்படி ஒரு சிறந்த காதலனாய் இருக்க முடியும்? அவள் உங்களுடன் மகிழ்ச்சியாய் இருப்பாளா?
நிச்சயமாக இல்லை. ஒரு பெண்ணின் காதலைப்பெற லாயக்கு இல்லாதவர்கள் நீங்கள். இல்லை இல்லை, காதலிக்கவே லாயக்கு இல்லாதவர்கள்.
ஆண்மை உள்ளவன் அவளின் உணர்வுகளைப் புரிந்துகொள்வான். அவளின் மனதைக்கவர அவளுக்கு பிடித்தது போல நடந்துகொள்ள முயற்சி செய்வான். அவளுக்காக யுகம் யுகமாய் காத்திருப்பான். அவளைக் கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை நோக்கி ஈர்க்க முயற்சி செய்வான். எந்த துன்பமும் அவளை அணுகாதபடி அவளை அரண் போல நின்று காத்துக்கொள்வான்.
அப்படிப்பட்ட ஒருவனை அவள் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டாள். தன் உயிரின் ஆழத்தில் இருந்து, தனது காதலை அவனுக்காக அள்ளிக் கொடுப்பாள்.
நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அவளுக்குத் துன்பம் ஏற்படுகிறது என்றால், முதலில் அது உங்களைப்போன்ற அஃறினைகளால் மட்டுமே ஏற்படும்.
நீங்கள் சிறந்த ஆண் மகனாக, சிறந்த காதலனாக, சிறந்த மனிதனாக இருக்கப்போகிறீர்களா? இல்லை மனிதத்தன்மையற்ற, உணர்வுகளை புரிந்து கொள்ள இயலாத, வெறும் ஆண் உருவத்தில் அலையும் மிருகமாக இருக்கப்போகிறீர்களா?
முடிவும் மாற்றமும் உங்கள் கையில் தான் இருக்கிறது