வழக்கமான காதல் கதை தான். ஆனால் உங்களை சிந்திக்க வைக்கும், கேள்வி கேட்கும், அதை விட நிறைய காதல் பகிர்ந்திடும் ஒரு கதை தான் இது. கதைக்குள் செல்வதற்கு முன்னால் எந்த முன் அபிப்பிராயங்கள் இன்றி கதைக்குள் பயணிக்க துவங்குங்கள்.
ஜும்பா அழகி : நடனத்தில் இருந்த ஆர்வத்தை சற்றே ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தலாம் என்று ஜும்பா விசாரிக்க சென்ற நேரத்தில், வகுப்பு நடக்கும் அறையை திறந்து காண்பித்தார் அந்த பெண்மணி. இருபாலர் மற்றும் பெண்கள் மட்டும் என இரண்டு அறைகள் இருந்தன. சிறிது நேரம் என்னை பார்க்கச் சொல்லிவிட்டு அவர் வெளியேறிவிட்டார். நான் அவர்களை கவனித்த நேரத்தில் என்னை கவனித்தவரை கவனிக்க மறந்துவிட்டேன். நாளை காலை ஆறு மணி வகுப்புக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன். ஷூவை மாட்டிக் கொண்டு மாடியிலிருந்து கீழே இறங்கும் போது ஒருத்தி வந்தாள். ஹாய்…. பலமாக மூச்சு வாங்க ……… பெயரைச் சொன்னாள். கை குலுக்கி விட்டு தோல்களை உலுக்கிக் கொண்டு சிரித்துவிட்டு உள்ளேயே சென்றுவிட்டாள்.
சிரிப்பும் அழுகையும் : தினமும் காலை ஆறு மணிக்கு வகுப்பிற்கு செல்வதை வழக்கமாக்கி கொண்டேன். வகுப்பு முடிந்து வெளியே வரும் வழியில் மீண்டும் அவள் பார்க்கிங் ஏரியாவில் நின்று யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள். முதல் நாள் தேடி வந்து பேசிய தோழியாயிற்றே இப்போது நாம் பேசலாம் என்று அருகில் சென்றேன். அருகில் சென்றதுமே அவளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. சிரிக்கிறாள்…. அழுகிறாள் வாயை மூடி அந்தப்பக்கம் திரும்பிக் கொண்டாள் வரக்கூடாத நேரத்தில் வந்துவிட்டோமோ என்று நினைத்துக் கொண்டு சாரி… என்று சொல்லிவிட்டு வெளியேறினேன்.
உனக்காகத் தான் : முந்தைய நாள் நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, இனிமேல் நான் வரும் நேரத்திற்கே ஜூம்பா வகுப்பிற்கு வரப்போவதாக சொன்னாள் காரணம் கேட்டேன்….” ஜஸ்ட் ஃபார் யூ!” என்று சிரித்தாள். கிண்டலடிக்கிறாள் என்று அப்பட்டமாக விளங்கியது. ஆனால் நம்புவது போல் சந்தேகமாய்” நிஜமாவா?” என்று கேட்டேன்.. தலையை குனிந்து கொண்டு ஆமாம் ஆமாம் என்று தலையசைத்துவிட்டு ஓர் உதவி வேணும் என்றாள் “என் ரூமுக்கு ட்ராப் செய்ய முடியுமா ?” அடுத்த 15வது நிமிடத்தில் அவள் ரூம் வாசலில் இருந்தோம்.
பப்பாளி : தினமும் காலை என் வீட்டிலிருந்து கிளம்பி அவளை அழைத்துக் கொண்டு ஜும்பா வகுப்பிற்கு செல்வது… வகுப்பு முடிந்து அவளை அவள் ரூமில் விட்டுவிட்டு திரும்புவது என்று வழக்கமாக இருந்தது. தினமும் ஹெல்த் டிரிங், ஃப்ரூட்ஸ் என்று ஏதாவது கொண்டு வந்து கொண்டேயிருப்பாள். பப்பாளிப்பழம் பிடிக்கும் என்று என்றோ ஒரு நாள் சொன்னதால் வாரத்தில் நான்கு நாட்கள் பப்பாளி கட்டாயம் இடம்பெற்றுவிடும்.
ஐ லவ் யூ : காலையில் வந்து அழைத்துச் செல்ல தாமதமாகிவிட்டதால் சண்டையிட்டிருந்தோம். இரண்டு நாட்கள் வரை இருவரும் பேசிக் கொள்ளவில்லை. வகுப்பு முடிந்து உட்கார்ந்திருக்கும் போது பாட்டிலை நீட்டுவாள். வாங்கி குடித்து விட்டு அவளை பார்க்காமல் மீண்டும் அவளிடமே கொடுப்பேன். மூன்றாம் நாள் வகுப்பு முடிந்து அவளை இறக்கி விட்டு வண்டியை திருப்பினேன். உள்ளே செல்லாமல் என் அருகில் வந்தாள்.சரி சண்டை சமாதானமாகப்போகிறது என்று நினைத்து சாரி தான ஒகே ஒகே மன்னிச்சுட்டேன் என்றேன். இல்லை என்பது போல தலையாட்டிவிட்டு இரண்டு பக்கமும் எட்டிப்பார்த்தால் யாரைத் தேடுகிறாள் என்று நானும் எட்டிப்பார்க்க கன்னத்தில் அழுத்த ஒரு முத்தத்தை பதித்துவிட்டு ” லவ் யூ பாண்டா!” என்று சொல்லிக் கொண்டே ஓடிவிட்டாள்… கள்ளி!
சிரிப்பழகி : மறு நாள் பதில் கேட்டாள். கொஞ்ச நாட்கள் விளையாடலாம் என்று பதிலேதும் சொல்லாமல் அலைக்கழித்தேன். எதற்கும் மசியவில்லை, நான் வருகிறேன் என்றால் ஓடிச்சென்று ஒளிந்து கொண்டு எட்டிப்பார்ப்பாள். வண்டியில் உட்காரும் போதும் நடுவில் ஒருவர் படுக்கும் அளவுக்கு இடைவேளியிருக்கும். எங்கோ யாருடனோ பேசிக்கொண்டிருக்கையில் அவள் கண்கள் என்னையே தான் கவனித்துக் கொண்டிருக்கும். சிரிப்பாள் வெட்கச்சிரிப்பைக் காணவே அடிக்கடி அருகில் சென்று வம்பிழுப்பேன். வம்பிழுக்க கூட வேண்டாம் அருகில் சென்றாலே குனிந்து விடும் அவளை குனிந்து பார்த்து “அப்றோம்…. அவ்ளோ தானா”! என்றாலே போதும்…. முகமே சிவக்க சிரிப்பாளே…. யப்பா.
பிறந்தநாள் : நாங்கள் நண்பர்கள் குழுவாக மூணாறு சென்றிருந்தோம். அன்று அவளின் பிறந்த நாள் வேறு வந்துவிட்டதால் , ஹோட்டலில் இரவு பன்னிரெண்டு மணிக்கு அவளுக்கு கேக் வெட்டி பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் அன்றைய தினம் வெகு சீக்கிரமே தூங்கிவிட்டேன். அவளின் பிறந்தநாள் என்று தெரிந்தே தான் தூங்கியிருந்தேன். அழுதிருக்கிறாள். நானாக எழுந்து வருவேன் என்று காத்திருந்திருக்கிறாள். மறுநாள் அவளது கண்களும் செய்கைகளுமே எனக்கு உணர்த்திவிட்டது.
இறுக்கம் : சரி ஹேப்பி பேபியை அழ வைக்க வேண்டாம் என்று வாக் போலாம் என்று அவளை மட்டும் அழைத்துக் கொண்டு மலைச்சாலையில் நடந்து சென்றோம். கண்ணை மறைக்கும் பனியும் தூரலுமாய் சூழலே சொர்கமாய் இருந்தது. அவளுக்கு ரொம்பவே குளிர்வதை உணர்ந்தேன். நடுங்கிக்கொண்டிருந்த அவளின் தோல் மேல் கைபோட்டு இருக்கமாக பிடித்துக்கொண்டேன். தோலில் சாய்ந்து கொண்டாள். இருவருமே நடந்து கொண்டிருந்தோம்… மேடமுக்கு , நைட் சரியா தூக்கமில்ல போல பதிலேதும் வரவில்லை. புல் தரையில் இருவரும் உட்கார்ந்தோம். என் கைகளை இருக்கப்பிடித்தவள் விடவேயில்லை. சுற்றிலும் மலை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை நிறம் மட்டும் தான் தெரிந்தது. வெள்ளைப்பனி இப்போது வேகமாக நகர்வதை பார்க்க முடிந்தது. “செம்ம க்ளைமேட்ல”… என்றேன். இப்போதும் பதிலேதும் சொல்லவில்லை இன்னும் இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.
திருமணம் : செல்லத்தை எப்படியாவது சாமாதனம் செய்ய வேண்டுமே என்ன செய்ய என்று தவிக்கையில் தான் ஒரு ஐடியா வந்தது. குட்டிமா எனக்கு கல்யாணம் ஆகப்போகுது டீ என்றேன். அதிர்ச்சியுடன் ஒரு விலகல் . “அப்டியா சேரி… ஒரு மாசம் முன்னாடியே சொல்லிடு அப்பதான் லீவ் போட்டுட்டு வர முடியும். கடைசி நேரத்துல சொன்னா என்னால எல்லாம் வரமுடியாது” என்று கோபத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டாள். கோபத்துல கூட அழகா தெரியுறது அவ தப்பா இல்ல நம்ம தப்பா என்று விளங்காது வரும் சிரிப்பை அடக்கிக் கொண்டு ” அதான் இப்பவே சொல்றேன் வா… கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று சொல்ல…. அவளிடமிருந்து பதிலேதும் வரவில்லை.” சிறிது நேரம் கழித்து என்ன சொன்ன?… என்ன சொன்ன?” என்று கேட்டு உணர்ந்தாள். சிரிப்பும் அழுகையுமாய் நம்ப முடியாமல் தவித்து கன்னத்தில் ஏன் தாமதம் என்று கோபித்துக் கொண்டாள். இப்பவே இங்கேயே உன்னைய கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொல்லி என் மோதிரத்தை கழற்றி அவளுக்கு மாட்டிவிட்டேன்.. “லவ் யூ டீ பொண்டாட்டீ !” என்று கத்த நீண்ட நேரம் எதிரொலித்தது.
வீடு : அவள் ரூமை காலி செய்துவிட்டு என் வீட்டிற்கே வந்து விட்டாள். எப்பிடி கூப்பிட என்று ஒரு நாள் இரவில் படுத்திருக்கும் போது கேட்டாள்…. மாமான்னு கூப்டு” என்றேன்.. அர்த்தம் கேட்டாள்? மாமான்னா நான் தான் என்று சொல்ல “லவ்யூ மாமா” என்று சொல்லி கட்டிக் கொண்டாள்.ஜீன்சையும் டவ்சரையும் விரும்பும் நான் ஆதிக்கம் செலுத்தும் கதாப்பாத்திரத்தையும், வெட்கம் சிந்தும் அவள் அன்பை விரும்பும் கதாபாத்திரத்தையும் ஏற்றுக் கொண்டோம். அன்பும் காதலுமாய் சந்தோசத்துடன் வாழ்கிறோம்.
அவளும் நானும் : எங்களின் பெயர் பெண் பால் பெயர்கள். எதோ ஓர் கடவுளை வேண்டிக் கொண்டு வைத்த பெயர்கள் அல்ல, பெயரை பதிவு செய்யும் போது ஸ்பெல்லிங் தவறுதலாக மாறி, அது பெண் பால் பெயர்களாக மாறிடவுமில்லை. சமூகத்தில் பெண்களாகவே அடையாளப்படுத்தப்பட்டோம் இப்போதும் பெண்களாகத்தான் இருக்கிறோம். இவற்றோடு தீராக் காதலுடன் அன்பு செய்கிறோம். உங்களின் எந்த கேலிகளும் கிண்டல்களும்,அவமானங்களும் எதுவுமே எங்களை நோகடிக்காது. இயற்கை சாட்சியாக எங்களுக்கு திருமணம் நடந்தும் விட்டது. அவளுக்கு நானிருக்கிறேன். எனக்கு அவளிருக்கிறாள். டைப் செய்து விட்டு கதையை காண்பித்தேன். மடியில் உட்கார்ந்து கொண்டு லேப்டாப்பில் இருப்பதை பொறுமையாய் வாசித்தாள். முழுவதையும் மனதிற்குள் படித்தவள் கடைசி வரியை சத்தமாக படித்துவிட்டு சூப்பர் மாமா நிறைய முத்தா என்று கழுத்தை அணைத்து முத்த மழை பொழிந்தாள். நிறைவான வாழ்க்கை.