“கல்யாணமாகி ஐந்து மாதமாச்சு. என் மகனும், மருமகளும் சிரிச்சி பேசினதை நான் ஒருநாள் கூட பார்க்கலை. எப்பவும் சண்டைக்கோழி மாதிரி சிலிர்த்துக்கிட்டு நிற்கிறாங்க! ‘ஏன்டா.. அந்த பெண்ணுக்கிட்டே எப்பவும் மோதிக்கிட்டே இருக்கிறேன்னு?’ கேட்டால் ‘உன் வேலையை பாருன்னு’ எடுத்தெறிந்து பேசுறான்.
எனக்கு இவனை பத்தி கவலை இல்லை. பாவம் அந்த பெண். என்னை நம்பி இவனுக்கு வாழ்க்கைப்பட்டாள். அவளை நினைச்சிதான் கவலையாக இருக்கிறது’’ என்று மகனை அருகில் வைத்துக்கொண்டு கோபத்தைக் கொட்டிய தாயார், அதே வேகத்தில் வெளியே இருந்த மருமகளை உள்ளே அனுப்பிவிட்டு, அவர் வெளியே உட்கார்ந்து கொண்டார். அந்த பெண்ணிடம் நிறையவே கிராமிய மணம் வீசியது, உடல் சற்று பருத்து காணப்பட்டது. வயது 22 தான்! ‘கணவருக்கு உன் மீது ஏன் கோபம் வருகிறது?’ என்று நான் கேட்டதும், கணவர் எப்படி எல்லாம் தன்னை குறை சொல்கிறாரோ அதை ஒவ்வொன்றாக சொன்னாள்.
அதாவது உடையில் ஆரம்பித்து பல்வேறு விஷயங்களில் அவர், மனைவியிடம் நிறைய மாற்றங்களை எதிர்பார்க்கிறார். அதை பல்வேறு சம்பவங்கள் மூலம் அவள் விளக்கினாள். அவள் சொல்லி முடித்ததும், கணவர் பேசத் தொடங்கினார்.. “நான் இவளிடம் நல்லா உடுத்த சொல்றேன். புதுசா கம்ப்யூட்டர் கல்வியில் சேர்ந்து படிக்க சொல் கிறேன். எல்லோரிடமும் சிரித்து பேசி சகஜமாக பழகு என்கிறேன். ஆனால் இவள் நான் சொல்ற எதையுமே கேட்பதில்லை…’’ என்று அவர் குறைபட்டதும், அவள் முகத்தில் ஒரு இறுக்கம் ஏற்பட்டது.
“அவர் சுயமாக சொன்னால் நான் கேட்டிருப்பேன். ஆனால் ஒரு பெண்ணை விதவிதமாக வீடியோ எடுத்து வைச்சிருக்கார். அவள் நைட்டியில் நடந்து வருகிறாள், அதைப் போல் நீயும் நைட்டி அணிந்துகொள் என்கிறார். அவள் சுடிதார் போட்டிருக்கிறது மாதிரி நானும் போட்டுக் கணுமாம். அவள் ஹேண்ட் பேக்கை தொங்கபோட்டுக்கொண்டு எங்கோ நடந்துபோகிறாள். அதைப்போல் நானும் தொங்க போட்டுக்கொண்டு போகணுமாம். அவளை மாதிரி மேக்–அப் போட்டுக்கணுமாம். அவா யாரு? அவளை மாதிரி நான் ஏன் மாறணும்?’’ என்று சூடாக கேட்டாலும் நிதானமாகவே இருந்தாள்.
கணவர் எதிர்பார்க்கும் மேலும் சில விஷயங்களை அவள் மறைப்பதும் தெரிந்தது. ‘இன்னொரு பெண்ணின் வீடியோவை காட்டி அவளைப்போல் நடக்க சொல்கிறார்’ என்று அவள் சொன்னதும், கணவர் முகத்தில் லேசான அதிர்ச்சி தெரிந்தது. அதிர்ச்சி அகலாமல் ‘அந்த வீடியோ பெண் யார்?’ என்று விளக்கம் கொடுத்தார். “வீடியோவில் காட்டிய பெண்ணை நான் காதலித்தேன். ஆனால் அவள் என்னை ஏமாற்றிவிட்டு இன்னொருவனை திருமணம் செய்துகொண்டாள்.
அவளைவிட நாகரிகமான பெண்ணை, அழகான பெண்ணை, படித்த பெண்ணை நான் கல்யாணம் செய்திருக்கிறேன் என்று அவளிடம் நிரூபிக்க நான் ஆசைப்பட்டேன். அதற்காக இவளை பலவிதங்களில் தயாராக்க முயற்சித்தேன். ஆனால் நான் சொல்றதை இவள் கேட்கவில்லை. அதனால்தான் வீடியோவை காட்டினேன். வீடியோவில் இருக்கிற பெண்ணை பார்த்ததும் இவள் என்னை தப்பாக புரிந்துகொண்டாள். அதனால்தான் எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது’’ என்று அவர் முடிப்பதற்குள், மனைவி குறுக்கிட்டாள். “நான் ஒண்ணும் உங்களை தப்பா புரிஞ்சுக்கலை.
உங்க அம்மாதான் ‘கண்ட பெண்களை படம் பிடிச்சி காட்டி ‘அப்படி பண்ணு இப்படி பண்ணுன்னு… சொல்வான். அதுக்கெல்லாம் இடம் கொடுக்காதே! தட்டிக் கேளுன்னு’ சொன்னாங்க! நான் அதனாலதான் அந்த மாதிரி எல்லாம் பண்ண முடியாதுன்னு அடம் பிடிச்சேன்!’’ என்றவள், கணவரின் முகத்தை வாஞ்சையோடு பார்த்துக்கொண்டு.. “நீங்க உங்களுக்கு காதல் தோல்வி ஏற்பட்டுச்சுன்னு எங்கிட்டே சொல்லவே இல்லையே! அந்த பெண்ணால உங்களுக்கு மனக் காயம் ஏற்பட்டிருக்கிறது தெரிஞ்சிருந்தா, உங்க சந்தோஷத்துக்காக நீங்க சொல்றதை எல்லாம் நான் அப்போதே கேட்டிருப்பேனே..’’ என்று நெகிழ்ச்சியாக சொன்னாள்.
அதைக் கேட்டதும் கணவர் இன்ப அதிர்ச்சி அடைந்ததை உணர முடிந்தது. ‘உங்களுக்கு எவ்வளவு அன்பான மனைவி கிடைத் திருக்கிறாள். இவளை புரிந்துகொண்டால் நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக வாழலாம்’ என்றேன். இருவர் முகத்திலும் பிரகாசம் தென்பட்டது. அவரது அம்மாவையும் அழைத்து மூவருக்கும் ‘பேம்லி கவுன்சலிங்’ வழங்கினேன். அவர்களுக்குள் இருந்த சந்தேகங்களும், பிரச்சினைகளும் அகன்றன. இப்போது பெரும்பாலான ஆண்கள் காதல் தோல்வியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்கள் இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு, அவளோடு காதலி நினைவிலே வாழ்க்கை நடத்த முயற்சிக்கிறார்கள். காதலியை போல் மனைவியை மாற்ற முயற்சித்தாலும், அவளையே நினைத்துக்கொண்டு வாழ முயற்சித்தாலும், மண வாழ்க்கை தோல்வி அடைந்துவிடும். ஆண்கள் காதலில் தோல்வி அடைந்து, இன்னொரு பெண்ணை திருமணம் செய்ததும் மனதில் இருந்தும், போட்டோ வீடியோ போன்றவைகளில் இருந்தும் காதலியின் பதிவுகள் அனைத்தையும் அழித்துவிட்டு தெளிவான மனதோடு புதிய வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கவேண்டும். –விஜயலட்சுமி பந்தையன்.