Home ஆரோக்கியம் கவட்டைப் படை என்னும் சங்கடப்படுத்தும் பிரச்சனைக்குத் தீர்வு

கவட்டைப் படை என்னும் சங்கடப்படுத்தும் பிரச்சனைக்குத் தீர்வு

34

கவட்டைப் படை என்பது இனப்பெருக்க உறுப்புகளின் தோல், தொடை இடுக்குகள் மற்றும் பிட்டப்பகுதிகளைப் பாதிக்கும் பூஞ்சான் நோய்த்தொற்றாகும். இது உள்ளவர்களுக்கு உடலில் வெப்பமான, ஈரப்பதம் உள்ள பகுதிகளில் அரிப்பு, தோல் சிவத்தல், வளைய வடிவத்தில் ராஷஸ் போன்றவை ஏற்படும்.

பொதுவாக விளையாட்டு வீரர்களைப் போல, அதிகம் வியர்க்கும் நபர்களுக்கு இது ஏற்படுவதால் ஆங்கிலத்தில் இதை ஜாக் இட்ச் என்கிறோம். அதிக எடை கொண்டவர்களுக்கும் இது ஏற்படலாம்.

இது சங்கடமாகவும் பெரும்பாலும் தொந்தரவாகவும் இருக்கும், ஆனாலும் இது அவ்வளவு பெரிய பிரச்சனை இல்லை. உங்கள் இனப்பெருக்க உறுப்புகள் பகுதியை சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்துக்கொண்டு, மேற்பூச்சாகப் பயன்படுத்தும் ஆன்டிஃபங்கல் மருந்துகளைப் பயன்படுத்தினாலே இதை குணப்படுத்திவிடலாம். .

அறிகுறிகள் (Symptoms)

முதலில் தோலில் சிவப்புப் பகுதிகள் தோன்றும், இவை தொடை இடுக்கில் உருவாகி, பிறகு அரை நிலா வடிவில் பரவி மேல் தொடைக்குச் செல்லும். இந்த தோல் ராஷின் எல்லையில் மேலெழும்பிய சிறிய கொப்புளங்கள் ஒரு கோடு போன்று இருக்கும், இந்த ராஷசால் அரிப்பு ஏற்படும். தோல் பொங்கும், தோல் உரியலாம்.

எப்போது மருத்துவரைப் பார்க்க வேண்டும் (When to See a Doctor)

உங்கள் தோலில் ராஷஸ் ஏற்பட்டு, இரண்டு வாரங்களில் அது சரியாகாவிட்டால் அல்லது கடையில் கிடைக்கும் மருந்துகள் கொண்டு சிகிச்சை எடுத்துக்கொண்டும் சில வாரங்களில் அது மீண்டும் வந்தால் உங்கள் மருத்துவரைப் பார்க்கவும். மருத்துவர் வழங்கும் மருந்துகள் தேவைப்படலாம்.

காரணங்கள் (Causes)

கவட்டைப் படை ஏற்படக் காரணம் ஒரு வகை பூஞ்சானாகும். அது ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவக்கூடியது. அழுக்கான டவல் அல்லது துணிகளை பலர் பகிர்ந்து பயன்படுத்துவதாலும் பரவும். பாதப் படையை ஏற்படுத்தும் அதே வகை பூஞ்சானே கவட்டைப் படைக்கும் பெரும்பாலும் காரணமாகிறது. இது பாதங்களிலிருந்து தொடை இடுக்குக்குப் பரவுவது சகஜம், ஏனெனில் பூஞ்சான் உங்கள் கைகள் அல்லது டவல் மூலம் எளிதாகப் பரவும்.

ஆபத்து காரணிகள் (Risk Factors)

கவட்டைப் படையை ஏற்படுத்தும் கிருமிகள் ஈரமான, மூடிய சூழல்களில் நன்கு வளரும். வெப்பமான, ஈரமான சூழல் அதிக வியர்வையை ஏற்படுத்தும். இதனால் பூஞ்சானைக் கொள்ளும் எண்ணெய்ப் பொருள்கள் தோலில் இருந்து அகற்றப்படுகின்றன. இதனால் தோலில் பூஞ்சான்கள் எளிதில் நுழைய முடிகிறது.

இது வர அதிக வாய்ப்பு யாருக்கு உள்ளது? 

ஆண்களுக்கு. பெண்களுக்கும் வருவதுண்டு. ஆனால் ஆண்களுக்கு அதிக வாய்ப்புள்ளது.
இறுக்கமான உள்ளாடை அணிபவர்களுக்கு அல்லது விளையாட்டு வீரர்களுக்கான கவசம் (கார்டு) அணிபவர்களுக்கு – அது ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் கழுவப்படாமல் இருந்தால்
அதிக உடல் எடை கொண்டவர்களுக்கு
அதிகம் வியர்ப்பவர்களுக்கு
பலவீனமான நோய் எதிர்ப்பு மண்டலம் உள்ளவர்களுக்கு
அட்டாப்பிக் டேர்மட்டிட்டிஸ், நாள்பட்ட, பரம்பரையாக வரும் (அரிப்பு மற்றும் தோல் அழற்சியுடன் கூடிய) தோல் வியாதிகள் மற்றும் பிற தோல் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு
பரிசோதனைகள் மற்றும் நோய் கண்டறிதல் (Tests and Diagnosis)

பெரும்பாலும் ராஷசைப் பார்த்தே உங்கள் மருத்துவர் உங்களுக்கு கவட்டைப் படை இருப்பதைக் கண்டறிந்துவிடுவார். பார்ப்பதன் மூலம் தெளிவாகத் தெரியாவிட்டால், தோலில் பாதிக்கப்பட்ட பகுதியில் லேசாக சிராய்த்து சிறு பகுதிகளை மாதிரிகளாக எடுத்து மைக்ரோஸ்கோப்பில் வைத்துப் பார்த்து கண்டறியலாம். வேறு பிரச்சனைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த, தோல் செல்களின் மாதிரிகளை உங்கள் மருத்துவர் ஆய்வகத்திற்கு அனுப்பலாம். இந்த சோதனையை கல்ச்சர் என்கிறோம்.

சிகிச்சை மற்றும் மருந்துகள் (Treatments and Drugs)

கவட்டைப் படை லேசாக இருந்தால், முதலில் கடையில் கிடைக்கும் ஆன்டிஃபங்கல் ஆயின்மென்ட், லோஷன், பவுடர் அல்லது ஸ்ப்ரே பயன்படுத்துமாறு உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம். பொதுவாக இந்த சிகிச்சைகளால் ராஷஸ் சீக்கிரமே சரியாகிவிடும். ஆனால் குறைந்தபட்சம் பத்து நாட்களுக்காவது தினமும் இரண்டு முறை தொடர்ந்து மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

உங்களுக்கு பாதப் படைப் பிரச்சனையும் இருந்தால், கவட்டைப் படைக்கு சிகிச்சை எடுத்துக்க்கொள்ளும்போதே அதற்கும் சிகிச்சை எடுத்துக்கொள்ளவும். இதனால் இந்தப் பிரச்சனை மீண்டும் வருவதற்கான வாய்ப்பு குறையும். கவட்டைப் படை கடுமையாக இருந்தால் அல்லது கடையில் வாங்கிய மருந்துக்கும் கட்டுப்படவில்லை என்றால், மருத்துவர் பரிந்துரைக்கும் கிரீம் அல்லது ஆயின்மென்ட் அல்லது ஆன்டிஃபங்கல் மாத்திரைகள் தேவைப்படலாம்.

தடுத்தல் (Prevention)

பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் மூலம், கவட்டைப் படை ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கலாம்:

உலர்வாக வைத்திருக்கவும்: தொடை இடுக்குப் பகுதியை உலர்வாக வைத்திருக்கவும். குளித்த பிறகு அல்லது உடற்பயிற்சி செய்த பிறகு, இனப்பெருக்க உறுப்பையும் தொடையின் உட்பகுதியையும் சுத்தமான டவலால் துடைத்து உலர்வாக வைத்துக்கொள்ளவும். அதிக ஈரப்பதம் ஏற்படுவதைத் தடுக்க, தொடை இடுக்குப் பகுதியில் பவுடர் போட்டுக்கொள்ளவும்.
சுத்தமான ஆடைகளை அணியவும்: உள்ளாடைகளை குறைந்தது நாளுக்கு ஒரு முறையாவது மாற்றவும், அதிகம் வியர்ப்பவராக இருந்தால் அதற்கேற்ப அதிக முறை மாற்றுவது நல்லது. உடற்பயிற்சியின்போது அணிந்துகொண்ட ஆடைகளை ஒவ்வொருமுறையும் துவைக்கவும்.
உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும்: வெப்பமான, ஈரப்பதமுள்ள காலநிலையில் நீண்ட நேரம் தடிமனான ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டாம்.
கச்சிதமான ஆடைகளை அணியவும்: உங்கள் ஆடைகள் கச்சிதமாகப் பொருந்தும்படி பார்த்துக்கொள்ளவும். குறிப்பாக, உள்ளாடைகள், விளையாட்டு வீரர்களுக்கான கவசங்கள் (கார்டு), விளையாட்டு சீருடைகள் போன்றவை. இறுக்கமாகப் பொருந்தும் (டைட் ஃபிட்டிங்) ஆடைகளைத் தவிர்க்கவும். அவை உங்கள் உடலில் உராய்வை ஏற்படுத்தி தோலில் எரிச்சலை ஏற்படுத்தலாம். அதற்குப் பதிலாக, பாக்ஸர் ஷார்ட்ஸ் அணியலாம்.
தனிப்பட்ட பொருள்களை பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம்: மற்றவர்கள் உங்கள் ஆடை, டவல் அல்லது பிற தனிப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தவிட வேண்டாம். இது போன்ற பொருள்களை மற்றவர்களிடமிருந்தும் இரவல் வாங்க வேண்டாம்.
பாதப் படைக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளவும்: பாதப் படை நோய்த்தொற்று தொடை இடுக்குப் பகுதிகளுக்கும் பரவாமல் தடுக்க அதனைக் கட்டுப்படுத்தவும்.