கர்ப்ப காலத்தில் பேரிச்சம் பழம் சாப்பிடுவது தாய்க்கு மட்டுமின்றி, கருவில் வளரும் குழந்தைக்கும் நல்லது. இதற்கு பேரிச்சம் பழத்தில் நிறைந்துள்ள ஏராளமான சத்துக்கள் தான் காரணம். மேலும் இதில் கொழுப்புக்கள் மிகவும் குறைவு. இப்போது பேச்சரிம் பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிடுவதால் அதிகளவு நன்மைகள் கிடைக்கும்.
பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம் உள்ளது. இது கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவும். மேலும் கர்ப்ப காலத்தில் உடலில் நீர்ச்சத்தை சீரான அளவில் வைத்துக் கொள்ளவும் செய்யும். அதுமட்டுமின்றி, பேரிச்சம் பழம் இதயம், செரிமான மண்டலம் மற்றும் தசைகளின் சீரான செயல்பாட்டிற்கும் உதவும்.
பேரிச்சம் பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமான பிரச்சனைகள் வராமல் தடுக்கும். கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கும். மேலும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, உடலை நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும். குறிப்பாக இதில் உள்ள நார்ச்சத்து உடல் எடையை சீராக பராமரிக்க உதவும்.
பேரிச்சம் பழத்தில் ஃபோலேட் வளமாக உள்ளது. ஃபோலேட் புதிய செல்களின் உருவாக்கத்திற்கு உதவும் மற்றும் இரத்த சோகையைத் தடுக்கும். இச்சத்து குழந்தைகளுக்கு பிறப்பு குறைபாடுகள் மற்றும் மூளை பாதிப்பு ஏற்படுவதையும் தடுக்கும்.
பேரிச்சம் பழத்தில் உள்ள வைட்டமின் கே இரத்த உறைவதில் முக்கிய பங்கை வகிக்கிறது. மேலும் கர்ப்ப காலத்தில் வைட்டமின் கே மிகவும் அவசியமான ஒன்று. ஏனெனில் இது தான் குழந்தைகளின் எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து, குழந்தைக்கு நல்ல ஆரோக்கியமான வளர்ச்சியை வழங்கும்.
பேரிச்சம் பழத்தில் புரோட்டீன் வளமான அளவில் உள்ளது. இது கருவில் வளரும் குழந்தைக்கு போதிய அளவில் புரோட்டீனை வழங்கி, குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.