கர்ப்பிணியின் அடிவயிற்றுத் தசைகளையும் தசைநார்களையும் தளர்த்துவதில் யோகாசனப் பயிற்சிகளுக்கு முக்கிய இடமுண்டு. தகுதி வாய்ந்த பயிற்சியாளர் ஒருவர் உதவியுடன் சுகப்பிரசவத்துக்கு உதவும் யோகப் பயிற்சிகளை முறையாக மேற்கொள்ளலாம்.
பிராணாயாமம் உடலின் அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்ஸிஜனை வழங்கக்கூடியது. கருப்பைத் தசைகளுக்கு ஆக்ஸிஜன் குறையாமலிருக்க இது அதிகம் உதவும்.
வழக்கத்தில் நடைப்பயிற்சி, யோகப்பயிற்சி, பிற தசை வலுவூட்டப் பயிற்சிகள், தசை நெகிழ்வூட்டப் பயிற்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு உடற்பயிற்சித் திட்டத்தை மகப்பேறு மருத்துவர், உடற்பயிற்சியாளர், யோகப் பயிற்சியாளர் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து மேற்கொள்வது சரியாகவும் முறையாகவும் இருக்கும்; கர்ப்பிணிக்கும் குழந்தைக்கும் எவ்வித ஆபத்தும் வராமல் பாதுகாக்கும். அயல்நாடுகளில் கர்ப்பிணிகளுக்கு நீச்சல் பயிற்சிகளையும் கற்றுத்தருகின்றனர்.
தவிர்க்க வேண்டிய பயிற்சிகள் குதித்து ஓடும் பயிற்சிகள், துள்ளும் படியான உடற்பயிற்சிகள், கால் மூட்டுகளைப் பாதிக்கும் பயிற்சிகள் ஆகியவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். அதிகமாக வியர்த்துக்கொட்டும் பயிற்சிகளும் ஆகாது. தீவிரமான தரை விளையாட்டுகளிலும் ஆழ்கடல் விளையாட்டுகளிலும் ஈடுபடக்கூடாது.
கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், பிறப்புறுப்பில் ரத்தக் கசிவு உள்ளவர்கள், பனிக்குட நீர்க்கசிவு உள்ளவர்கள், பிரசவ நாளுக்கு முன்பே கருப்பை சுருங்கிவிடும் கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனை பெற்றே உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.