பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பட்ரன்வாலியைச் சேர்ந்த முகாதாஸ் என்ற இளம்பெண் அதே பகுதியைச் தவுபீக் என்பவரை காதலித்துள்ளார். இவர்களின் காதலுக்கு முகாதாசின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு காதலர்கள் இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டனர். இதனால், தங்கள் குடும்பத்தின் கவுரவம் போய்விட்டதாக கருதிய முகாதாசின் குடும்பத்தினர் கடும் ஆத்திரத்தில் இருந்தனர்.
இந்நிலையில், 8 மாத கர்ப்பமாக இருந்த முகாதாசை (வயது 22) மன்னித்து ஏற்றுக்கொள்வதாக அவரது தாய் அம்னா சமீபத்தில் கூறியுள்ளார். நேற்று மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றபோது அங்கு சென்ற அம்னா, மகள் முகாதாசை ஆசை வார்த்தைகள் கூறி தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால், அங்கு சென்றதும் முகாதாசை குடும்பத்தினர் அனைவரும் கடுமையாக சித்ரவதை செய்துள்ளனர். அப்போதும் ஆத்திரம் தணியாத அவர்கள், அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.
இதுபற்றி நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், முகாதாசை நம்ப வைத்து வீட்டுக்கு அழைத்துச் சென்று அவரது தாய் அம்னா, தந்தை அர்ஷத் மற்றும் தம்பி ஆதில் ஆகியோர் கடுமையாக சித்ரவதை செய்ததும், பின்னர் அவரது தாய் கத்தியால் முகாதாசின் கழுத்தை அறுத்தமும் தெரியவந்திருப்பதாக போலீஸ் சூப்பிரெண்டு நதீம் கோகர் தெரிவித்தார்.
முகாதாசின் தாய், தந்தை உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் அர்ஷத் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நெஞ்சை பதற வைக்கும் கவுரவக் கொலை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் சமீபகாலமாக கவுரவக் கொலைகள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் லாகூரில் ஓடிப்போய் திருமணம் செய்த 18 வயது பெண்ணை அவரது குடும்பத்தினர் உயிரோடு எரித்து கொன்றனர். இதேபோல் ஒரு தம்பதி மற்றும் ஒரு கிறிஸ்தவ பெண் ஆகியோரும் அவர்களின் குடும்பத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 1100 பெண்கள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.