Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பிணிப் பெண்கள் முதுகுவலி வராமல் பார்த்துகொள்வது எப்படி?

கர்ப்பிணிப் பெண்கள் முதுகுவலி வராமல் பார்த்துகொள்வது எப்படி?

29

கர்ப்பிணிப் பெண்களுக்கு அடிக்கடி தலைவலி, இடுப்பு வலி போன்றவை வருவது சாதாரணம் தான். கர்ப்பம் தரித்த 5வது மாதத்திலிருந்து முதுகுவலியானது ஆரம்பமாக வாய்ப்பு அதிகம்.

வெகு சிலருக்கு கர்ப்பமான 8வது வாரத்திலிருந்து முதுகுவலி ஆரம்பிக்கலாம். இந்தியாவைப் பொறுத்தவரை 80 சதவீத கர்ப்பிணிகள் முதுகுவலியால் பாதிக்கப்படுகின்றனர்.

இதற்குக் காரணம் இருக்கிறது. கர்ப்பகாலத்தின்போது 25 முதல் 35 பவுண்ட் வரை கர்ப்பிணியின் உடல் எடை அதிகரிப்பதால் முதுகில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது.

வளர்ந்து வரும் கருவினால் கர்ப்பப்பை பெரிதாகி முதுகு அல்லது இடுப்பு ரத்தக்குழாய்கள் மற்றும் நரம்புகளை அழுத்துவதாலும் வலி ஏற்படலாம்.

மருத்துவ அறிவுரைப்படி, நடத்தல், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்றவை செய்வதால் முதுகு, வயிறு தசைகள் பலவீனமடையாமல் பாதுகாக்கப்படும். இதனால் வலியை குறைக்கலாம்.

பனிக்கட்டியால் முதுகுப்பகுதியில் தினமும் 10 முதல் 15 நிமிடம் ஒத்தடம் கொடுக்கலாம். இரண்டு அல்லது மூன்று நாள் பனிக்கட்டி சிகிச்சைக்கு பின்பு மீதமான சுடுநீரினால் முதுகுப் பகுதியில் ஒத்தடம் கொடுக்கலாம்.

சரியான நிலையில் படுப்பதும், உட்காருவதும் மிகவும் அவசியம். தூங்கும்போது ஒரு பக்கமாக சாய்ந்து, கால் மூட்டுகளுக்கு இடையே சிறிய தலையணையை வைத்து படுக்கலாம்.

ஹீல்ஸ் செருப்புக்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. மிருதுவான காலணிகளை பயன்படுத்தலாம். தொடர்ந்து நீண்ட நேரம் நிற்பதையும், உட்கார்ந்திருப்பதையும் தவிர்க்க வேண்டும்.

பொருட்களை தரையிலிருந்து குனிந்து எடுக்கும்போது முதுகெலும்பை முன்னோக்கி வளைக்காமல் கால் முட்டியை மடக்கி எடுக்க வேண்டும்.

மிக அரிதாக முதுகு எலும்புகளுக்கு இடையே உள்ள ஜவ்வு (Disc) விலகுவதால் ஒரு காலிலோ அல்லது இரண்டு கால்களிலோ கடுமையான நரம்பு வலி ஏற்படும்.

மேலும் கால்கள் மரத்துப்போகவோ அல்லது பலம் குறைதல் போன்ற அறிகுறிகள் தென்படலாம். மேற்காணும் அறிகுறிகள் தென்பட்டால் தகுந்தமருத்துவரின் ஆலோசனை மற்றும் சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.