கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் பற்கள் சொத்தையானால் அதற்கு காரணமான பாக்டீரியா, வயிற்றில் வளரும் குழந்தைக்களையும் பாதிக்கும் என்று சமீபத்திய ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது. எனவே கர்ப்ப காலத்தில் உணவு விசயத்தில் கவனமுடன் இருக்க வேண்டும் என்று மகப்பேறு மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களினால் தற்காலிகமாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. கர்ப்பிணிகள் மசக்கையினால் சிலர் அதிக இனிப்பு எடுத்துக் கொள்வார்கள். அதன் மூலம் பற்கள் சொத்தையாகலாம். ஒரு சில கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பல் தொந்தரவுகளுக்கு ஹார்மோன் மாற்றங்களும் முக்கிய காரணம். ஈறுகள் வீங்குவதும், பல் தேய்க்கும் போது ரத்தக்கசிவும் ஏற்படும். கர்ப்ப காலத்துல உமிழ்நீர் சுரப்பும் அதிகமா இருக்கும். உடல் முழுக்க ரத்த ஓட்டம் அதிகமா இருக்கிறதால, ஈறுகள் மிருதுவாகறது, கூச்சம், வீக்கம்கூட ஏற்படலாம்
ஈறு தொடர்பான பிரச்சினை
சில கர்ப்பிணிகளுக்கு ஈறுகளில் பெரிய கட்டிகள் வரலாம். கர்ப்ப காலத்துல உண்டாகிற பல் மற்றும் ஈறு தொடர்பான பிரச்னைகளை அலட்சியப்படுத்தக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பற்களின் பாதிப்பினால் குறைப்பிரசவம் நடக்கவும், எடை குறைவான குழந்தை பிறக்கவும் கூட இது காரணமாகலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்,
பற்களை பராமரியுங்கள்
கர்ப்பிணிகள் தினம் 2 வேளை பல் துலக்குவது அவசியம். மேலும் தரமான பேஸ்ட் மற்றும் பிரஷ் உபயோகிக்க வேண்டும். ஏனெனில் பல் சொத்தைக்குக் காரணமான பாக்டீரியா, அம்மாவிடமிருந்து, குழந்தைக்கு சென்று பாதிப்புகளை ஏற்படுகிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி முடிவு ஒன்று எச்சரிக்கின்றது. எனவே கர்ப்ப காலத்தில் என்ன சாப்பிடுகிர்கள் என்பதில் கவனம் தேவை என்கின்றனர் மருத்துவர்கள்.
உங்களது குழந்தையின் பல் வளர்ச்சிக்கு, நீங்கள் சாப்பிடுகிற சத்தான ஆகாரங்களே பிரதானம். எனவே கால்சியம் நிறைந்த பால், சீஸ்,
தயிர் போன்றவற்றைத் தவறாமல் சேர்த்துக் கொள்ளவும்.
பல் பரிசோதனை
கர்பிணிகள் முதல் 3 மற்றும் கடைசி 3 மாதங்களைத் தவிர்த்து, இடைப்பட்ட 3 மாதங்களில் பல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம். பற்களுக்கான எக்ஸ் ரே எடுப்பதைத் தவிர்க்கவும். பல் தொடர்பாக ஏதேனும் அவசர சிகிச்சை என்றால் உங்களையும் உங்கள் சிசுவையும் பாதிக்காத படி, பிரத்யேக பாதுகாப்பு முறையுடன், பல் மருத்துவர் எக்ஸ் ரே எடுக்கப் பரிந்துரைப்பார். அதேபோல் பிரசவத்துக்குப் பிறகும் முறையான பல் பரிசோதனையும், பராமரிப்பும் அவசியம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.