Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பமாயை என்ற பொய் கர்ப்பம்

கர்ப்பமாயை என்ற பொய் கர்ப்பம்

24

அது ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளோட காலம். நியூயார்க் நகரோட ஒரு பகுதியில இருக்குற மருத்துவமனைல இருந்து டாக்டர் ரேட்பாவுக்கு ஒரு கர்ப்பிணி பெண் பிரசவ வலில துடிக்குறதா அழைப்பு வருது. அவர் அங்க போனப்போ அந்த பெண் இப்பவோ அப்பவோன்னு பிரசவிக்குற நிலைல இருக்குறா. அவள அவசர அவசரமா வீல் செயர்ல உக்கார வச்சு எமர்ஜென்சி ரூமுக்கு கொண்டுப் போக சொல்றார் டாக்டர். அப்படி கொண்டுப் போற நேரத்துல அவ பனிக்குடம் உடைஞ்சு நீர் வழிய ஆரம்பிக்குது.

அடுத்த நாள் அந்த பெண்ணோட நிலை என்னன்னு தெரிஞ்சுக்குறதுக்காக மருத்துவமனைக்கு தொடர்பு கொண்ட டாக்டருக்கு பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது. ஆமா, அந்த பெண் முந்தின நாள் ராத்திரியே டிஸ்சார்ஜ் ஆகிட்டதாவும், அவ கர்ப்பம் எல்லாம் இல்ல, மூத்திர பை நிறைஞ்சு வழிஞ்ச மூத்திரம் தான் அந்த நீர்னும் அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பெண்களோட கர்ப்பக்கால மாற்றங்கள பத்தி சக தோழி என்கிட்ட விவரிச்சுட்டு இருந்தப்ப, மேல தெரிஞ்சுகிட்ட செய்தி ஆச்சர்யமா இருந்துச்சு.

“இதெப்படி சாத்தியம்? உப்பலான வயிரோட, ஒரு கர்ப்பிணிக்கு வர்ற பிரசவ வலியோட வந்த பெண் கர்ப்பமே இல்லையா? ஒரு டாக்டரால கூட அத கண்டுபிடிக்க முடியலயா?” இந்த கேள்விகள் என் மனசுக்குள்ள எழுந்த உடனே இதபத்தின விசயங்கள பத்தி இன்னும் விரிவா தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன்.

மிகப்பெரிய ஆச்சர்யத்தோட இத பத்தி என் சக தோழிகிட்ட கேட்டப்ப அவ சொன்ன விஷயம் இன்னும் அதிர்ச்சியா இருந்துச்சு. அவளும் கூட இந்த மாதிரியான சிக்கல்ல ஒரு தடவ மாட்டினதா சொன்னா. கணக்கு தவறாம வழக்கமா வர்ற மாதவிடாய் வரலனும், வாந்தியும் தலைச்சுத்தும் வந்து ரொம்ப அவஸ்தைப்பட்டதாவும், மாமியார் வீட்ல எல்லாரும் சந்தோசப்பட்டதாவும், ஆனா ரெண்டே மாசத்துல மருத்துவமனை போய் பரிசோதிச்சு பாத்தப்ப அது பொய் கர்ப்பம் அல்லது கர்ப்பமாயைனு தெரிய வந்துச்சுன்னும் சொன்னா.

அதென்ன கர்ப்பமாயை?

எஜமான் படத்துல மீனா வயித்துல துணி வச்சு கர்ப்பம்னு ஊரை ஏமாத்துவாரே, அந்த கதை கூட ஒரு உண்மை சம்பவத்த அடிப்படையா எடுத்ததுன்னு என் பாட்டி சொல்ல கேள்விப்பட்டுருக்கேன். அப்போ அதான் கர்ப்பமாயையா? கண்டிப்பா இல்ல.

இந்த பொய் கர்ப்பங்குறது அரிதா பெண்களுக்கு வரக் கூடிய மனநிலை, உளவியல் சார்ந்த பிரச்சனைன்னு ஆரம்பத்துல டாக்டர்கள் சொல்லிட்டு இருந்தாங்க. இந்த பிரச்சனையால பாதிக்கப்படுற பெண் தான் கர்ப்பமா இருக்குறதா நினைச்சுப்பா. கிட்டத்தட்ட தன்னை ஒரு கர்ப்பிணி மாதிரியே பாவிச்சுப்பான்னு சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா இதே மாதிரியான கர்ப்பமாயை மற்ற விலங்குகளுக்கும் ஏற்படுறத கவனிச்சுட்டு தான் அது ஹார்மோன் சம்மந்தப்பட்ட பிரச்சனையாகவும் இருக்கலாம்ன்னு இப்ப ஒரு முடிவுக்கு வந்துருக்காங்க.

கர்ப்பமாயை வந்த பெண்களுக்கு அப்படி என்ன தான் உடம்புல மாற்றங்கள் வரும்?

முதல்ல மாதவிடாய் சுழற்சி நிக்கும்.

அடுத்து குமட்டலும் தலைசுத்தலும் வரும்.

இந்த மாதிரியான அறிகுறிகள் பத்தோ பதினஞ்சோ நாட்கள்ல சரியா போய்டும். ஆனா சிலபேருக்கு இது கர்ப்ப காலமான ஒன்பது மாசம் வரைக்குமோ இல்ல அதுக்கு மேலயோ தொடர்ந்துகிட்டே இருக்கும்.

அந்தமாதிரி நீண்ட கர்ப்பமாயை இருக்குறவங்களுக்கு நாளடைவுல மார்பகங்கள் பெருசாகும்.

சிலபேருக்கு சீம்பால் கூட சுரக்க ஆரம்பிக்கும்.

ஏதாவது விசேசமான உணவ சாப்பிடணும்னு மனசுக்குள்ள தோணும்.

பொதுவா கர்ப்பிணிகளுக்கு வர்ற மாதிரி கால் தசைப்பிடிப்பு, முதுகு வலி எல்லாம் வரும்.

வயிறு உப்பத் தொடங்கும்.

உடல் பருமன் அதிகரிக்கும்.

வயித்துக்குள்ள குழந்தை உதைக்குற உணர்வு வரும்.

பிரசவ வலி வரும்.

இப்படி ஒரு கர்ப்பிணிக்கு வர்ற அத்தன அறிகுறிகளும் இவங்களுக்கும் வரும். என்ன, ஒரே ஒரு வித்தியாசம் என்னன்னா, கர்ப்பிணிகளுக்கு குழந்தை பிறக்கும், இவங்களுக்கு பிறக்காது.

இதெல்லாம் எப்படி நடக்குதுனா, ஒரு பெண் தன்னை கர்ப்பம் அடைஞ்சதா நினைச்சுகிட்டானா, சம்மந்தப்பட்ட பெண்ணோட பிட்யூட்டரி சுரப்பி அதிக அளவுல ஹார்மோன சுரக்க ஆரம்பிக்கும். இப்படியான மன அழுத்தமும் பதட்டமும் சேர்ந்து ஹார்மோன் சுரப்ப இன்னும் அதிகரிச்சு ஒரு மாய சூழ்நிலைல உடலை தள்ளி விட்டுரும்.

இந்த மாதிரியான அறிகுறிகள கர்ப்பம் இல்லன்னு எப்படி கண்டுப்பிடிக்குறது?

இந்த காலத்துல இந்த மாதிரியான கர்ப்பமாயைய கண்டுபிடிக்குறது எல்லாம் ஒரு பெரிய விசயமே இல்ல. ஆரம்பத்துலயே கர்ப்பமா இல்லையான்னு ஒரு கார்ட் டெஸ்ட் போட்டுப் பாத்துட்டா தெரிஞ்சிடும். ஆனாலும் கர்ப்பக்காலத்துல செய்ற இந்த ஆரம்பகட்ட பரிசோதனையில கர்ப்பம்ன்னு கூட சிலநேரம் தப்பான அடையாளம் காட்டும்.

அட, அதெல்லாம் பரவால, சில பேருக்கு அல்ட்ரா சவுண்ட் எடுத்துப் பாத்தா கூட குழந்தையோட அதிர்வுகள் தெரியுற மாதிரி இருக்குமாம்.

சரி, இதெல்லாம் எதனால வருது?

ஒரு பெண் மிகப்பெரிய மன அழுத்தத்துல இருந்தாலோ, இல்ல தான் கர்ப்

பம் ஆகியே தீரணும்னு ஆவலோட இருந்தாலோ சில நேரம் இந்த கர்ப்பமாயை உருவாகுதுன்னு சொல்றாங்க.

என்னைக் கேட்டா இதுக்கெல்லாம் காரணம் இந்த சமூகம்னு தான் சொல்லுவேன். கல்யாணம் ஆகிட்டாலே அடுத்து விசேசம் எதுவும் உண்டான்னு தானே அவங்கள எங்கப் பாத்தாலும் கேக்குறோம்.

எங்க நாம கர்ப்பமாகாம போய்ட்டா எல்லாரும் தப்பா பேசுவாங்களோங்குற எண்ணமே ஒரு பெண்ணை மிகப்பெரிய மன அழுத்தத்துல தள்ளிடுது. இதனாலயே தான் கர்ப்பமா இருக்குற மாதிரியே அவ உணர ஆரம்பிக்குறா. அவ உடம்புல இருக்குற ஹார்மோன்களும் இதனால மாற்றத்துக்கு உள்ளாகுது. ஒரு கர்ப்ப சூழ்நிலைய இந்த காரணங்கள் உருவாக்கி குடுத்துடுது. அதுவும் இந்த மாதிரியான அறிகுறிகள் கடைசி கட்ட முப்பதுகள்லயும், நாற்பதுகளின் ஆரம்பத்துல இருக்குற பெண்கள் கிட்டயும் சகஜமா இருக்கு.

கருச்சிதைவு ஏற்பட்ட பெண்கள், குழந்தைகள இழந்த பெண்களுக்கும் சிலநேரம் இந்த கர்ப்பமாயை ஏற்படுது. சின்ன வயசுல பாலியல் ரீதியான தொல்லைகளுக்கு ஆளானவங்களுக்கும் இந்த பிரச்சனை ஏற்படுது.

தான் கர்ப்பமா இருக்குறதா ஒரு பெண் நினைக்குற நிகழ்வுனால அவ அடுத்தடுத்து கர்ப்பம் தறிக்குற வாய்ப்ப இழக்குறா. சில பேருக்கு இதனால அடிக்கடி கருச்சிதைவும், உயிருக்கே ஆபத்தும் கூட நேர்ந்துருக்கு. இந்த மாதிரியான பெண்களுக்கு அவங்க கர்ப்பம் இல்லன்னு நம்ப வைக்குறது அவ்வளவு சுலபமில்ல.

அப்படினா இந்த மாதிரியான பொய் கர்ப்பசூழல் மனநிலை மாற்றத்தாலயும் உளவியல் காரணத்தாலயும் மட்டும் தான் வருதா?

கண்டிப்பா இல்ல. சூல்ப்பைல புற்றுநோய் இருந்தா கூட இந்த பொய் கர்ப்ப அறிகுறிகள் தெரியும். இதனால நாற்பதுகளின் ஆரம்ப வயசுல இருக்குற பெண்கள் புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருக்கான்னு சோதனை பண்ணிக்குறது நல்லது.

இந்த கர்ப்பமாயைல சிக்கிக்குற பெண்கள மீட்டெடுக்குற வழி தான் என்ன?

பெரும்பாலும் முதல்ல அதுக்கான காரணத்த அறிய முற்படணும். புற்றுநோய் காரணமா இந்த அறிகுறி இருந்தா, அதுக்கான மருத்துவ சிகிச்சைகள எடுத்துக்க ஆரம்பிக்கணும். அதுவே மனோரீதியான பாதிப்பா இருந்தா, அவள சார்ந்தவங்களும், சுத்தி இருக்குறவங்களும் அவளுக்கு உளவியல் ரீதியா தங்களோட முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் குடுக்கணும். ஒரேயடியா நீ கர்ப்பம் இல்லன்னு சொல்றதுக்கு பதிலா அவளுக்கு நடத்தப்பட்ட அத்தனை சோதனைகளையும் படிப்படியா விளக்கி அவளே புரிஞ்சுக்குற மாதிரி பண்ணனும்.

ஆனா இந்த மாதிரியான அறிகுறிகள் ரொம்பவே அபூர்வமா தான் பெண்களுக்கு தோன்றும். அதனால மறக்காம, பயப்படாம எல்லா கர்ப்பக்கால சோதனைகளையும் எடுத்துக்கிடுறது நல்லது. இதுல இருந்தே சில வியாதிகள் மனசோடவும் சம்மந்தப்பட்டுருக்குன்னு நிரூபணம் ஆகுது.

முதல்ல பெண்கள் குழந்தை பெறுவதுக்கு மட்டுமே படைக்கப்பட்டவங்கன்னு வலியுறுத்துற போக்கு மாறணும். கர்பத்த தாண்டி ஒரு பெண் சாதிக்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்குங்குறத சமூகம் புரிஞ்சுக்குற நிலை வரணும். இனி ஒரு பெண்ணும் மன அழுத்தத்துனால இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்படுறத மாத்தணும். அந்த காலம் ரொம்ப தூரத்துல இல்லன்னு மட்டும் என்னோட உள் மனசு சொல்லிகிட்டே இருக்கு.