கர்ப்பப்பையின் கீழ்ப் பகுதியானது, பிறப்பு உறுப்பில் இணையும் இடத்தில் வாய் போன்ற அமைப்பில் ‘ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’ என்ற கிருமியால் புற்றுநோய் ஏற்படுகிறது. பொதுவாக வைரஸ் கிருமி தாக்குதலின்போது பெண்ணின் நோய் எதிர்ப்பு சக்தியே, இதை எதிர்த்து வெற்றிகொள்கிறது.
சில பெண்களுக்கு இந்தக் கிருமி சில காலத்துக்கு உடலுக்குள்ளேயே அமைதியாகக் காத்திருந்து நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள காலத்தில் தாக்குதல் நடத்துகிறது. இந்த நிலையில், இயல்பான செல்களில் மாற்றம் ஏற்படுகிறது. மாற்றம் அடைந்த இந்த செல்கள் அதிவேகத்தில் பெருக்கம் அடைகிறது. இவை இறப்பதும் இல்லை.
இந்த வைரஸ் கிருமி, பாலியல் உறவின் மூலமே பரவுகிறது. என்னதான் வைரஸ் கிருமி மூலம் புற்றுநோய் ஏற்படுகிறது என்றாலும், இளம் வயதிலேயே உடல் உறவு (15 வயது அல்லது அதற்கு கீழ்), பலருடன் உறவு, சிகரெட் பிடித்தல், சுகாதாரமற்ற நாப்கின் பயன்படுத்துதல் உள்ளிட்ட சில காரணிகள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான வாய்ப்புகளை அதிகரித்துவிடுகிறது. ஹெச்.ஐ.வி. பாதிப்பு உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.
இந்த நேரத்தில் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களால் ஹியூமன் பாப்பிலோமா வைரஸை எதிர்த்துப் போராட முடிவது இல்லை. ஒருவருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால், அதன் அறிகுறிகள் ஏதும் வெளியே தெரியாது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் முற்றிய நிலையை அடைய 10 ஆண்டுகள் ஆகும். இதனால்தான் குறிப்பிட்ட கால இடைவெளியில் டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம் என்று வலியுறுத்துகிறோம்.
பிரச்சனை முற்றும் நிலையில், தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது அதிக வலி அல்லது ரத்தப்போக்கு ஏற்படலாம், வழக்கத்துக்கு மாறாக வெள்ளைப்படுதல், மாதவிலக்கின்போது ரத்தம் கட்டியாக வெளிப்படுதல் அல்லது மிகக் குறைந்த அளவில் உதிரப்போக்கு போன்றவை இதன் அறிகுறிகள். மெனோபாசுக்குப்பிறகு உதிரப்போக்கு இருந்தால் நிச்சயம் டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை:
புகைபிடித்தலையும் திருமணமாகும் வரை உடல் உறவையும் தவிர்க்க வேண்டும். 9 முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். தாம்பத்திய வாழ்வைத் தொடங்குவதற்கு முன்னதாகவே இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நல்லது. முதல் ஊசிக்குப் பிறகு எட்டு வாரங்கள் கழித்து இரண்டாவது டோஸ், ஆறு மாதங்கள் கழித்து மூன்றாவது டோஸ் என எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு பெற்றோரும் சிறுவர்களும், இளம் ஆண்களும்கூட இதைப் போட்டுக்கொள்ளலாம். இதனால் பெண்ணுக்கு இன்னும் அதிகப் பாதுகாப்பு கிடைக்கும். என்னதான் தடுப்பூசி போட்டாலும், இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உயிரிழப்புக்களை முற்றிலுமாகத் தடுக்க முடியும்’ என்றார். 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இரண்டு ஆண்டு இடைவெளியில் தொடர்ந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.