Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பத்தின் மூன்றாவது மூன்றுமாத காலம்

கர்ப்பத்தின் மூன்றாவது மூன்றுமாத காலம்

94

கர்ப்பத்தின் மூன்றாவது மூன்றுமாத காலம் என்பது 29வது வாரம் தொடங்கி, 40வது வாரம் வரை அல்லது குழந்தை பிறக்கும் வரை உள்ள காலமாகும்.

பிரசவம் சில வாரங்களுக்கு முன்பாகவே நடக்க வாய்ப்புள்ளது. கர்ப்பத்தின் இந்தக் கட்டம் தாய்க்கு மிகவும் சவாலானதாக இருக்கலாம்.

மூன்றாவது மூன்றுமாத காலம் – ஒவ்வொரு வாரமாக

29வது வாரம்: குழந்தையின் எடை அதிகரிக்கும், இச்சமயத்தில் தாய்க்கு சிரை புடைப்பு பிரச்சனைகள் ஏற்படலாம்.
30வது வாரம்: இந்நிலையில் குழந்தையின் எடை சுமார் 1350 கிராம் இருக்கலாம்.கண்பார்வை மேம்படுகிறது. தாய்க்கு நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.
31வது வாரம்: குழந்தை வேகமாக வளருகிறது, இச்சமயத்தில் அசைவுகள் நன்கு தெரியும், இது தாயின் தூக்கம் கலையும் அளவுக்கும் இருக்கலாம்.
32வது வாரம்: குழந்தை தொடர்ந்து எடை கூடுகிறது.நகங்களும் முடியும் உருவாகின்றன. குழந்தையின் தோல் மென்மையாகவும் மிருதுவாகவும் மாறுகிறது. இந்தச் சமயத்தில், அவ்வப்போது கருப்பை லேசாக சுருங்கி விரிவதை (ப்ராக்ஸ்டன் ஹிக்ஸ்) தாய் உணர முடியும்.
33வது வாரம்: இந்நிலையில் குழந்தையின் எடை 1800 கிராம் வரை இருக்கும்.குழந்தையின் எலும்பு மண்டலம் கடினமடையத் தொடங்குகிறது. எனினும், குழந்தை பிறக்க எளிதாக இருப்பதற்காக தலை ஓட்டின் எலும்புகள் ஒன்றாகச் சேராமல் உள்ளன.இந்நிலையில் உட்காருவதும் தூங்குவதும் தாய்க்கு சவாலாக இருக்கலாம்.
34வது வாரம்: குழந்தையின் தோலுக்கு அடிப்புறத்தில் கொழுப்பு கூடுகிறது.குறைப் பிரசவமாகும்பட்சத்தில், 34-35 வாரங்களில் பிறக்கும் குழந்தைகள் நல்லபடியாகவே இருக்கும், பிற்காலத்தில் அவர்களுக்கு உடல்நலத்தில் பிரச்சனை எதுவும் ஏற்படாது.
35வது வாரம்: இந்த நேரத்தில் குழந்தையின் சிறுநீரகம் உருவாகியிருக்கும். குழந்தையின் மூளை வேகமாக வளரும், இந்நிலையில் தலையின் எடை கூடும். இப்போதிலிருந்து ஒவ்வொரு வாரமும் தாய் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.
36வது வாரம்: இப்போது குழந்தையின் எடை 2700 கிராம் இருக்கும், குழந்தையின் நீளம் 18 அங்குலம் இருக்கும். இச்சமயத்தில், குழந்தை மெழுகுப் படலத்தையும், பனிக்குடத் திரவத்திலிருந்து அதனைப் பாதுகாக்கும் பிற திரவங்களையும் குடிக்கத் தொடங்கும். இதன் காரணமாகவே, குழந்தை பிறந்த பிறகு சில முறை மலங்கழிக்கும்போது மலம் கருப்பாக இருக்கிறது.
37வது வாரம்: இது பிரசவத் தேதி நெருங்கும் சமயமாகும். ஆனால் 39 வாரம் முடிவடையாதவரை, குழந்தை கர்ப்பத்தில் இருக்கும் காலத்தை முழுமையாக நிறைவு செய்ததாகக் கருதப்படாது. பிராக்ஸ்டன் ஹிக்ஸ் சுருக்கங்கள் அதிகரிக்கக் கூடும்.
38வது வாரம்: இப்போது குழந்தை 2700 கிராம் எடையும் 19 அங்குல நீளமும் கொண்டிருக்கும்.இந்நிலையில் எல்லா உடல் உறுப்புகளும் வளர்ச்சியடைந்திருக்கும். இச்சமயத்தில் தாய்க்கு சீம்பால் சுரக்கத் தொடங்குகிறது. கணுக்காலிலும் பாதத்திலும் சிறிது வீக்கம் இருக்கலாம்.
39வது வாரம்: இப்போது குழந்தை கர்ப்பத்தில் இருக்க வேண்டிய தனது முழு காலத்தையும் நிறைவு செய்துவிட்டிருக்கும், இப்போது குழந்தையின் எடை 3150 கிராம் இருக்கும், குழந்தையின் நீலம் 20 அங்குலம் இருக்கும்.தாய்க்கு பிரசவ வலியின் அறிகுறிகள் ஏற்படலாம்.
40வது வாரம்: இது பிரசவத் தேதி நெருங்கும் சமயம்.குழந்தை பிறப்பதற்காக, தலை கீழாகத் திரும்பலாம். கர்ப்பகாலம் முழுவதும் கருவில் இருக்கும் குழந்தைகளில் பெரும்பாலான குழந்தைகள், 2.7 முதல் 4 கிலோ வரை எடை கொண்டிருக்கும், நீளம் 19 முதல் 21 அங்குலம் வரை இருக்கும்.
பெரும்பாலும், 41வது வாரம் வரை கர்ப்பம் தொடரும், அரிதாக சிலருக்கு 42வது வாரம் வரையும் நீடிக்கலாம். பிரசவ வலி தானாக ஏற்படாவிட்டால், மருத்துவர் பிரசவ வலியைத் தூண்டலாம்.
கர்ப்பத்தின் மூன்றாவது மூன்றுமாத காலத்தின்போது தோன்றும் அறிகுறிகள்

மூன்றாவது மூன்றுமாத காலத்தின்போது, பெண்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம், அடிக்கடி கழிப்பறைக்குச் செல்ல வேண்டி இருக்கலாம். கவனிக்கத்தக்க பின்வரும் மாற்றங்களும் ஏற்படலாம்.

நெஞ்செரிச்சல்
மூச்சு வாங்குதல்
கணுக்கால், முகம் மற்றும் விரல்களில் வீக்கம்
மூலம்
குழந்தைக்கு பாலூட்டுவதற்கு தயார்படுத்துவதற்காக மார்பகங்களில் இருந்து சீம்பால் கசியும்
தொப்புள் வெளியே துருத்திக் கொண்டு தென்படலாம்
தூங்க முடியாமல் சிரமப்படுதல்
அடிவயிற்றில் குழந்தையின் அசைவை உணர முடியும்
பிராக்ஸ்டன் ஹிக்ஸ் சுருக்கங்கள்: பிரசவத்திற்காக கருப்பை சுருங்கத் தொடங்கும் வரை, அவ்வப்போது கருப்பை சுருங்கி விரியும்.
கர்ப்பத்தின் மூன்றாவது மூன்றுமாத காலத்தில் செய்ய வேண்டிய பரிசோதனைகள்

வழக்கமாகச் செய்யும் பரிசோதனைகள்:

ஸ்ட்ரெப் B சோதனை: பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாய்ப் பகுதிகளைத் துடைத்து எடுத்து, க்ரூப் B ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டீரியா உள்ளதா எனக் கண்டறிவதற்காக சோதிக்கப்படும். இந்த பாக்டீரியாக்கள், பிறந்த குழந்தைக்கு கடுமையான நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடியவை. சோதனையில், க்ரூப் B ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டீரியா இருப்பதாகத் தெரியவந்தால், குழந்தையைப் பாதுகாப்பதற்காக ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.
குழந்தையின் நிலை: குழந்தை தலை முதலில் வெளிவரும் நிலையில் உள்ளதா என்பதை மருத்துவர் சோதித்து அறிவார். குழந்தை கால் முதலில் வெளிவரும் நிலையில் இருந்தால், குழந்தையின் நிலையைச் சரியாக்க மருத்துவர் முயற்சிக்கலாம், மிகவும் திரும்பியிருந்தால் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்க வேண்டி இருக்கலாம்.
கருப்பை வாய்ப் பகுதியில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிதல்: கருப்பை வாய்ப் பகுதியில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிவதற்காக கீழ் இடுப்புப் பகுதிப் பரிசோதனை செய்யப்படலாம்.
பிரசவ வலிக்கான அறிகுறிகள்

பின்வருபவை போன்ற பிரசவ வலியின் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவி பெறவும்:

குழந்தை கீழ் இடுப்புப் பகுதிக்கு இறங்குதல்
பிறப்புறுப்பில் இருந்து, இளஞ்சிவப்பு மற்றும் பிரவுன் நிறத்தில் இரத்தம் போன்ற சளித்
திரவம் (மியூக்கஸ்) வெளியேறுதல்
சவ்வுகள் கிழிந்து, நீர் கசிதல்
எச்சரிக்கை

பின்வரும் பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும்:

இரத்தப்போக்கு
அடிவயிற்றில் கடுமையான வலி
அதிக காய்ச்சல்
குறைப்பிரசவத்திற்கான அறிகுறிகள், அடையாளங்கள் தென்படுதல்