பெண்களின் வாழ்வில் கர்ப்பகாலம் ஓர் அழகிய பருவம்! அதே சமயம், பல்வேறு அசௌகரியங்களையும் அவர்கள் இந்தக் காலத்தில் சந்திக்க வேண்டியிருக்கும். கர்ப்பத்தின்போது அவர்களுக்கு முதுகு, தலை, வயிறு போன்ற பகுதிகளில் வலி இருக்கலாம். சாதாரண நாட்களில் இதுபோன்ற வலிகள் வந்தால் வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் போதும், வலியை சமாளிக்க முடியும். ஆனால் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் இப்படி நீங்களே ஏதேனும் ஒரு வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. அது நல்லதல்ல.
கர்ப்பத்தின்போது ஏற்படும் பல்வேறு வலிகளைப் பற்றிப் புரிந்துகொள்ளவும் அவற்றிலிருந்து நிவாரணம் பெறுவது எப்படி என்று அறிந்துகொள்ளவும் தொடர்ந்து வாசியுங்கள்.
1. தலைவலி (Headaches)
முதல் மூன்று மாத காலத்திலிருந்தே கர்ப்பிணிப் பெண்களுக்கு தலைவலியும் ஒற்றைத்தலைவலியும் வரத் தொடங்கிவிடும். உடலில் ஹார்மோன் மாற்றங்கள், குறிப்பாக இரத்தத்தின் அளவு மாறுவதும் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களுமே இதற்குக் காரணம். மன அழுத்தம், தூக்கமின்மை ஆகியவற்றாலும் தலைவலி வரலாம். பொதுவாக முதல் மூன்று மாதம் மற்றும் கடைசி மூன்று மாதங்களின்போது இந்தப் பிரச்சனைகள் வரக்கூடும்.
சிகிச்சை: நன்றாக நீண்ட நேரம் ஓய்வெடுத்தாலே தலைவலி குறைந்துவிடும். கண்கள், மூக்கைச் சுற்றிலும் வெதுவெதுப்பான ஒற்றடம் கொடுக்கலாம் அல்லது கழுத்தின் அடிப்பகுதியில் குளிர் ஒற்றடம் கொடுக்கலாம். மின் விளக்குகளை அணைத்துவிட்டு இருட்டான அறையில் ஆழ்ந்து சுவாசிக்கும் பயிற்சிகளைச் செய்வதும் தலைவலியைக் குறைக்க உதவும்.
2. நெஞ்செரிச்சல் (Heartburn)
கருப்பை வளர வளர, வயிற்றில் தசைப்பிடிப்புகள் ஏற்படும் அமிலக் கரைசல்கள் உணவுக்குழாய் வழியே மேலெழும்பி வரும். இதனாலும் ஹார்மோன் மாற்றங்களாலும் மேஞ்சுப் பகுதியில், குறிப்பாக அதிகமாக சாப்பிட்ட பிறகு மிகுந்த எரிச்சல் ஏற்படும்.
சிகிச்சை: சாப்பிட்டவுடன் படுக்கக்கூடாது – குறைந்தது ஒரு மணிநேரம் கழித்தே படுக்க வேண்டும். மூன்று வேளை அதிகமாக சாப்பிடுவதை விட்டுவிட்டு அடிக்கடி (ஆறேழு முறையாக) சிறுகச் சிறுகச் சாப்பிடுவதே நெஞ்செரிச்சலைத் தடுக்க சிறந்த வழியாகும். மசாலா, காரம், எண்ணெய் நிறைந்த உணவுகளைக் குறைப்பதும் நல்லது.
3. காலில் தசைப்பிடிப்பு வலிகள் (Leg Cramps)
கர்ப்பகாலத்தில் காலில் தசைப்பிடிப்பு வலிகள் ஏற்படுவதற்கான காரணம் துல்லியமாக எது என்று இன்னும் தெரியவில்லை, ஆனாலும் களைப்பு, கால்சியம் குறைபாடு போன்ற பல்வேறு விஷயங்கள் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சிகிச்சை: திரவ ஆகாரங்கள் நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும், சரிவிகித உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். படுக்கச் செல்லும் முன்பு சில ஸ்ட்ரெட்ச்சிங் பயிற்சிகளைச் செய்வது நல்லது, ஏனெனில் இந்த சமயத்தில் தான் காலின் தசைப்பிடிப்பு வலி மிகவும் அதிகரிக்கும். சிறிது தொலைவு நடைபயிற்சி செய்யலாம், உட்கார்ந்து ஓய்வெடுக்கும்போது கால்களை தரையில் பதித்து வைக்காமல் சற்று உயரத்தில் இருக்கும்படி வைத்துக்கொள்ளவும்.
4. அடிமுதுகு வலி (Lower Back Pain)
கர்ப்பத்தின்போது எப்போது வேண்டுமானாலும் முதுகுவலி வரக்கூடும், மூன்றாவது மூன்று மாதங்களில் குழந்தை வேகமாக வளரும்போது முதுகுவலி வருவது அதிகம்.
சிகிச்சை: நீண்ட நேரம் ஓய்வெடுக்க வேண்டும், கூடுமானவரை கால்களை சற்று உயர்த்திய நிலையிலேயே வைத்திருக்க வேண்டும். வளைந்து குனிந்து எதையும் தூக்க வேண்டாம், அப்படி எதையேனும் எடுக்க வேண்டுமெனில் குந்தி (ஸ்க்வாட்) எடுக்கலாம். தேவைப்பட்டால் சப்போர்ட் பெல்ட் அணிந்துகொள்ளலாம்.
5. கார்ப்பல் டன்னல் சின்ட்ரோம் (Carpel Tunnel Syndrome)
கணினியில் வேலை செய்பவர்களுக்கு மட்டும் தான் கார்ப்பல் டன்னல் சின்ட்ரோம் பிரச்சனை வரும் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு! கர்ப்பத்தின்போதும் கைகளிலும் மணிக்கட்டிலும் மரத்துப்போன உணர்வு ஏற்படலாம். பெரும்பாலும் இப்படி இரவு நேரங்களில் நடக்கும், அதுபோன்ற சமயங்களில் கைகளை மடிக்க முடியாது, கைகளை தலைக்கு வைத்து உறங்க முடியாது. கர்ப்ப காலத்தின்போது உடலில் திரவங்களின் அளவு அதிகரிப்பதால், குறுகலான பகுதிகளில் அழுத்தம் அதிகரிக்கிறது இதனால் நரம்புகள் நசுக்கப்பட்டு வலியும் அசௌகரியமும் ஏற்படுகிறது.
சிகிச்சை: இந்த வலிகளை ஏற்படுத்தும் விஷயங்கள் எவை என்று (உதாரணமாக கையை தலைக்கு வைத்துத் தூங்குவது) துல்லியமாக உங்களால் கண்டறிய முடிந்தால், அந்த செயல்களைத் தவிர்க்க வேண்டும். வேலை செய்யும்போது, உடலின் தோரணை சரியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும், தேவைக்கு ஏற்ப நாற்காலியின் உயரத்தை சரிசெய்துகொள்ளவும். ஹேன்ட் பிரெஸ் பயன்படுத்துவதும் பலன் கொடுக்கும்.
சில வலிகள் சிறிது நேரம் இருந்துவிட்டு தானாகவே போய்விடும், சில வலிகள் கர்ப்பகாலம் முழுதும் இருக்கும். ஆனால், இவை அனைத்திற்குமே தற்காலிகமான எளிய தீர்வுகள் உள்ளன. வலிகளைப் பற்றி பெரிதாக கவலைப்படாமல், உங்களையும் குழந்தையையும் கூடுமானவரை சௌகரியமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம்.