பட்டுப் புடவையை பார்த்து பார்த்து வாங்கினாலும், நகை டிசைன்களை தேடிப்பிடித்து தேர்ந்தெடுத்தாலும் மணப்பெண்களுக்கு போதாது. அவைகளைப் போன்று அழகான டிசைன்களில் மருதாணியும் போட்டுக்கொண்டால்தான் அவர்களது ஆசை முழுமையடைகிறது. உள்ளங்கையில் மட்டும் மருதாணி போட்டுக்கொண்ட காலம் மலையேறிவிட்டது.
நகம் முதல் கை மூட்டின் மேல் பாகம் வரை போட்டுக்கொள்ள விரும்புகிறார்கள். கால்களில் மெகந்தி பாதத்தில் தொடங்கி மூட்டு வரை படர்ந்து பளிச்சிடுகிறது. மருதாணியோடு புகுந்த வீட்டிற்கு வரும் மணமகள் ஐஸ்வர்யத்தையும் சேர்த்து கொண்டு வருகிறாள் என்ற நம்பிக்கை இன்றும் இருந்துகொண்டிருக்கிறது.
‘ஐஸ்வர்யம் தருவது ஒருபுறம் இருக்கட்டும். அவை தங்கள் அழகை மெருகூட்டவேண்டும்’ என்ற எண்ணம் இளம் பெண்களிடம் இருந்துகொண்டிருக்கிறது. அதனால் அவர்கள் திருமணத்திற்கு தயாராகும்போதே தங்கள் அழகுக்கு எந்த மருதாணி டிசைன் பொருத்தமாக இருக்கும் என்றும் தேடத் தொடங்கிவிடுகிறார்கள்.
* மெகந்தி போட்டுக்கொள்வது பியூட்டி பார்லரில் என்றாலும், வீட்டில் என்றாலும் மறக்கக்கூடாத விஷயங்கள் சில இருக்கின்றன. மெகந்தி முக்கால் பாகம் உலர்ந்து வரும்போது எலுமிச்சை சாறில் சிறிதளவு சர்க்கரையை கலந்து, அதில் பஞ்சை முக்கி மெகந்தி போட்டிருக்கும் இடங்களில் தொட்டு வைக்கவேண்டும். இவ்வாறு செய்தால் பெண்கள் விரும்பியதுபோன்ற கடும் சிவப்பு கலந்த பிரவுன் நிறம் தோன்றும்.
* மெகந்தி போட்டுக்கொண்ட 5 முதல் 8 மணி நேரம் வரை அதை நீக்காமல் வைத்திருங்கள். அதற்குள் தண்ணீர் ஊற்றி கழுவி விடக்கூடாது. காய்ந்த பின்பு பெயர்த்து எடுக்கவேண்டும். அன்று முழுவதும் கையில் சோப்பும், நீரும் படாமல் பார்த்துக்கொண்டால் மெகந்தி பரிபூரண அழகுடன் பளிச் சிடும்.
* மெகந்தி போட்ட கையோடு தூங்க வேண்டிய நிலை ஏற்பட்டால் பிளாஸ்டிக் கையுறை அணிந்துகொள்ளலாம். இதன் மூலம் துணிகளில் படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
* பளிச்சென்று இருக்கும் மெகந்தி சில நாட்களில் மங்கத் தொடங்கும். அப்போது அதனை நீக்கவேண்டும் என்று விரும்பினால், ‘காஸ்மெட்டிக் பாடி பிளீச்’ பயன்படுத்தி நன்றாக தேய்த்து கழுவிவிடவேண்டும். அப்போது முழுமையாக நீங்கிவிடும்.