பெண்கள் அனைவரும் தாங்கள் காதலித்தவரையே திருமணம் செய்து கொள்வதில்லை. ஒரு சில குடும்ப சூழ்நிலைகளால் காதலித்தவரை மணக்க முடியாமல் போகிறது. அப்படி இருக்கும் போது, அவர்கள் வீட்டில் பார்த்து மணம் முடிக்கும் கணவருக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
ஆனால் கல்யாணத்திற்குப் பின்னர் தங்களது கணவரிடம் தங்களின் கடந்த, கசந்த காலத்தை கூறலாமா, வேண்டாமா என தங்களுக்குள் பெரிய அளவில் மனப்போராட்டமே நடத்துவார்கள்.
சொன்னால் பிரச்சனை வருமா? நாம் சொல்லாமல் வேறு யாராவது சொல்லி தெரிந்துவிட்டால், வாழ்க்கை கேள்வி குறியாகிவிடுமே! என்று ஒரு தெளிவான முடிவு தெரியாமல் குற்ற உணர்வுடன் வாழ்க்கையை தொடர வேண்டியிருக்கும். அவர்களுக்கு சரியான ஆலோசனை கூற அருகில் யாரும் இல்லாததால், குற்ற உணர்வோடு மனப்போராட்டத்தோடு வாழ்வார்கள்.
ஆண்கள் தங்கள் கடந்த காதல் வாழ்க்கையை ஈஸியாக சொல்லிவிடுவார்கள். அதைப் பெண்கள் பெரிய விஷயமாக கொண்டால் வாழ்க்கை தான் கேள்விக் குறியாகிவிடும். அதையே பெண்கள் கூறினால், அதனை ஆண்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆண்களுக்கு அத்தகைய மனப்பக்குவம் இல்லை. ஏனென்றால் அதற்கு நமது சமூகம் தான் காரணம்.
ஒரு ஆண் எத்தனை திருமணம் செய்தாலும் அவர்களின் மதிப்பு குறைவதில்லை. ஆனால் பெண்கள் அப்படியில்லை. காதல் செய்துவிட்டால் அவளை சமூகம் தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கும்.
ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி, தங்களது கடந்த காலத்தை ஒளிவுமறைவின்றி பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதே ஆரோக்கியமானது. இதை இரண்டு பேருமே பரந்த மனதுடன் ஏற்றுக் கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டியது அவசியம். அதுதான் இருவருக்கும் எதிரில் காத்துள்ள நீண்ட நெடிய வாழ்க்கைப் பயணத்தை இனிமையாக்க உதவும்.
மேலும் தங்களது திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கை குறித்து வேறு யாராவது ‘நலம் விரும்பிகள்’ மாறி மாறிப் போட்டுக் கொடுத்து வாழ்க்கையைக் கெடுக்க வாய்ப்பில்லாமலும் தடுக்க முடியும். கணவனானாலும் சரி, மனைவியானாலும் சரி தங்களது கடந்த காலத்தை பகிர்ந்து கொள்ளும் போது அதை பக்குவமாக அதே சமயம் நேர்மையாக தெரிவித்துக் கொள்வது நல்லது.
கணவனும் சரி, மனைவியும் சரி, கடந்த காலத்தை பரந்த மனதுடன் உற்று நோக்கி அவர்களுடைய நேர்மையான மனதை அஸ்திவாரமாக கொண்டு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். ஏனென்றால் கடந்த காலத்தை விட நிகழ்காலம் முக்கியமானது. அதை விட எதிர்காலம் ரொம்ப முக்கியமானது.