Home வீடியோ கணவன் – மனைவி அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவை!

கணவன் – மனைவி அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவை!

249

குடும்ப உறவில் இருக்கும் சிக்கலே அதிலிருக்கும் பொறுப்புகள் தான். கணவன்,மனைவி என இருவேறு துருவங்களுக்கு இடையில் நடக்கும் பனிப்போர் ஒருபுறம் இவர்களின் காதல் சாட்சியாய் பிறந்த குழந்தை ஒரு புறம் என வாழ்க்கையே பெரும் போராட்டமாக மாறியிருக்கும்.

பெண் அல்லது ஆண் யாராக இருந்தாலும் காதல் வாழ்க்கை,வீடு,அலுவலகம்,குழந்தை என எல்லாவற்றையும் பேலன்ஸ் செய்வது என்பது சற்று சிரமமான விஷயம் தான்.ஏதேனும் ஒரு இடத்தில் மனதில் ஏற்படும் சின்ன சின்ன சங்கடங்களால் வாழ்க்கையையே வெறுக்கும் சூழல் கூட ஏற்பட்டிருக்கும்.

வெறுக்கும் அளவிற்கு வாழ்க்கை ஒன்றும் பெரிய சூன்யம் நிறைந்தது அல்ல. அதனை சரியாக யாரும் அணுகுவது கிடையாது. இன்னொரு விஷயம் அதனை சரியாக கையாளத் தெரியவில்லை என்று கூட சொல்லலாம். உங்கள் வாழ்க்கையை ரசிக்கவும், உங்களுக்கான கதாப்பாத்திரத்தை கச்சிதமாக செய்திடவும் சில யோசனைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

வெளிப்பாடு : நீங்கள் எப்படி உடை அணிகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். உங்களின் வெளித்தோற்றம் தான் பிறரிடம் உங்களைப்பற்றிய நல்ல அபிப்ராயத்தை கொண்டு வந்து கொடுக்கும்.

நான் தாயாகிவிட்டேன் இனி என்னை அலங்கரித்துக் கொண்டு என்ன செய்யப்போகிறேன் என்று நினைத்து ஏனோதானோ என்று இருப்பது தவறான ஒன்று. எப்போதும் உங்களை உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களைப் பற்றிய அபிப்ராயத்தை சொல்வது உடைகள் மட்டுமல்ல உங்களுடைய எண்ணங்களும் செயல்களும் கூட.

அன்பான வார்த்தைகள் எப்போதும் உங்களிடம் இருக்க வேண்டும். உங்களை நீங்கள் எப்படி வெளிப்படுத்துகிறீர்கள் என்பது முக்கியம். வெளியில் எல்லாரிடமும் நன்றாக பேசிவிட்டு,பழகிவிட்டு வீட்டில் மனைவியிடமும் குழந்தைகளிடமும் வில்லன் ரோல் எடுப்பது என்பது உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம்.

பகிர்தல் : குடும்பத்தில் மிகவும் அவசியமாக இருக்க வேண்டிய குணம் இது. இந்த வேலையெல்லாம் அவர்களுடைய பொறுப்பு அவர்கள் தான் செய்ய வேண்டும் நான் அதனை தொடக்கூட மாட்டேன் என்று விலகியிருக்கத் தேவையில்லை.

வீட்டில் இருக்கிற சின்ன சின்ன வேலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். வீட்டில் ஒருவர் மட்டுமே பொறுப்புடன் இருக்க வேண்டும் என்றில்லை. அதே போல பகிர்தல் என்றவுடன் வீட்டு வேலை மட்டும் என்று நினைத்துவிடாதீர்கள். வார்த்தைகளை பகிர்வது மிகவும் அவசியமான ஒன்று. உங்களுடைய எண்ணங்களையும், சந்தோசங்களையும், வருத்தங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள், இது உங்களின் எண்ணக் குமுறல்களுக்கு எல்லாம் அது நல்ல வடிகாலாக அமைந்திடும்.

குழந்தை : திருமணத்திற்கு பிறகு குழந்தை வேண்டும் என்று ஏங்கி மகிழ்ச்சியில் திளைத்து குழந்தையை பெற்றுக் கொள்வீர்கள். குழந்தை பிறந்த சில ஆண்டுகளில் பொறுப்புகள் அதிகரித்ததும் இந்த வாழ்க்கையே வெறுக்கும் சூழல் ஏற்படும். குழந்தை விஷயத்தில் சிக்கல் வருவதற்கான முதல் காரணம் குழந்தையை நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும், என்று ஒருவர் மீதே எல்லா பொறுப்புகளையும் திணிப்பதால் தான்.

காதல் வாழ்க்கையில் உங்களுடைய பொறுப்புகளையும் பகிர்ந்து கொள்வது மிகவும் அவசியமானது. குழந்தை எப்போதும் நீங்கள் நினைப்பது போலவே அல்லது சொல்வது எல்லாமே கேட்டு நடக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்.

குழந்தைகளின் உலகம் : குழந்தைகளின் உலகத்தை நீங்கள் அணுகும் விதம் வித்யாசமாகத்தான் இருக்கும். அந்தந்த பருவத்தில் அவர்கள் செய்ய வேண்டியதை எல்லாம் கண்டிப்பாக செய்திட வேண்டும் என்ற எண்ணம் வேண்டாம்.

அதே நேரத்தில் என் குழந்தை எல்லாவற்றிலும் டாப்பில் தான் இருக்கவேண்டும். எதிலும் எங்கும் முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் நிறுத்துங்கள். வெற்றி மட்டுமே கிடைத்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற உங்களது எண்ணம் தான் அவர்களின் தோல்விக்கு வழி வகுத்திடும். தோல்வியைத் தாங்கும் மன வலிமையையும் தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் அவர்களுக்கு கிடைக்கச் செய்யுங்கள்.

அதற்கான வாய்ப்புகளை கொடுங்கள். ஒரு தோல்வி வந்தாலே இனி அவர்கள் எழவே முடியாது என்ற ரீதியில் அவர்களை வதைக்காதீர்கள். தன்னம்பிக்கை கொடுங்கள்.

அன்பு : பிரதிபலன் எதிர்பாராத அன்பு கிடைக்கும் ஓரிடம் நம்முடைய குடும்பமாக இருக்க வேண்டும். காதலிக்கும் போதும் நன்றாக இருந்தது அதே திருமணத்திற்குப் பிறகு கசப்பாக மாறுவதற்கு காரணமும் இந்த அன்பு தான். திருமணம் முடிந்து விட்டது இன்னும் என்ன காதல்? குழந்தை பிறந்தாகிவிட்டது இன்னும் என்ன காதல் ? என்று சொல்லி சொல்லியே இந்த வாழ்க்கையை ரசிக்காமல் இன்னும் கடினமானதாக மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.

காதல் என்றவுடன் மரத்தைச் சுற்றி டூயட் பாடுவது. ஐ லவ் யூ என்று குறுஞ்செய்தி அனுப்புவது தான் என்று நினைக்காதீர்கள். உங்கள் செயல்களில், நீங்கள் காட்டும் அக்கறையுல் உங்களுடைய அன்பு வெளிப்பட வேண்டும். வாய் வார்த்தைகளில் உங்கள் காதலை சொல்வதை விட அதனை செயல்களில் காட்டினால் நல்ல பலன் உண்டு.

அமைதி : இது பல பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே தடுத்திடும். பிரச்சனைகள் தானாக வருவது ஒரு வகை என்றால் நாமே பேசி வளர்த்துக் கொள்வது இன்னொரு வகை. இந்த பேசியதால் வரும் பிரச்சனையை ஒப்புக்கொள்வதில் யாருக்கும் மனம் இருப்பதில்லை. படிப்படியாக அது உங்களுடைய ஈகோ பிரச்சனையாக மாறிடுகிறது. இதனைத் தவிர்க்க, சில விஷயங்களை பெரிதுப் படுத்தாமல் இருப்பது நன்று. அது உங்கள் உடலுக்கும் மிகவும் நல்லதாக அமைந்திடும்.

விவாதங்கள் : குடும்பத்தின் உறவு மேம்படுவதற்கு ஆணி வேராக இருப்பது பேச்சு தான். இந்த பேச்சு நாகரிகமாக அல்லது அன்பு நிறைந்ததாக இல்லையென்றால் குடும்ப உறவில் நிச்சயம் விரிசல் ஏற்படக்கூடும். விவாதங்கள் ஆரோக்கியமானதாக இருந்தால் மட்டுமே அங்கே சண்டைச் சச்சரவுகள் இன்றி இருக்க முடியும்.

போட்டிக்குப் போட்டியாக நீ செய்தால் நானும் செய்வேன். என்னை நீ காயப்படுத்திவிட்டாய் அந்த வலி எப்படி இருக்கிறதென்று உனக்கும் தெரிய வேண்டும் என்று நினைப்பது எல்லாம் முட்டாள்தனமானது.

மன்னிக்க : உங்களிடம் அடிப்படையாகவே இருக்க வேண்டிய குணம் இது. உங்களின் வாழ்க்கைத் துணையாகட்டும், குழந்தையாகட்டும் யாராக இருந்தாலும் மன்னித்து விடுங்கள்.

தவறுகள் செய்வது சகஜம் தான் அதனை ஏற்றுக் கொண்டு அவர்களை மன்னித்து அதனை திருத்திக் கொள்வதற்கான இன்னொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தாருங்கள்.

எனக்குப் பிடிக்காத விஷயத்தை செய்து விட்டாள், என்னிடம் பொய் சொன்னாள், என்ற ஏதேதோ காரணங்களுக்காக அவர்களைப் பற்றிய தவறான அபிப்ராயங்களை மனதில் வளர்த்துக் கொண்டு பகைமையை வளர்க்காதீர்கள். இது குழந்தைகள் மனதில் கூட பெரும் தாக்கத்தை ஏற்படுத்திடும்.