அலர்ஜி என்பது வெளியில் இருந்து உடலுக்கு ஒவ்வாத பொருள்கள் நுழையும்போது, உடல் காட்டும் நோய் எதிர்ப்பு தன்மையின் காரணமாக உருவாவது ஆகும். இது உடலில் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். உடம்பில் ஒவ்வாமை ஏற்பட்டால் அரிப்பு ஏற்படும்.
உடலில் தடிப்புகள் உருவாகும். உதடு வீங்கும். மூச்சு வாங்கும். அலர்ஜி என்பது எல்லா வயதிலும் வரும். ஒவ்வாமையால் உடம் பில் கொப்பளம்போல் உருவாகும். அது வெடித்து புண் ணாகி அரிப்பு ஏற்பட்டு சீழ் உருவாகி காய்ச்சல் ஏற்படும்.
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளான நாய், பூனை ஆகியவற்றின் தோலில் உள்ள ஒரு பொருள், முடி ஆகியவற்றில் இருந்தும் ஒவ்வாமை ஏற்படலாம். அலர்ஜி ஏற்படுத்தும் பொருள்களுடன் தொடர்பு ஏற்பட்டதும் உடல் இம்யுனோகுளோபின் இ என்ற எதிர்ப்பு பொருளை உற்பத்தி செய்கிறது.
இதன் விளைவாக கண் மற்றும் சுவாச வழிகளில் ஹிஸ்டமின் போன்ற எதிர்ப்பு தன்மை மிகுந்த பொருள்கள் உருவாகின்றன. இதுபோன்ற வேதிப் பொருள்கள் உடலில் உற்பத்தியாவதால் கண்ணில் நமைச்சல், கண்கள் வீங்கி சிவத்தல், மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தொடர் தும்மல், இருமல், தோலில் சிவந்த தடிப்பு போன்ற ஒவ்வாமைக்கான அறிகுறிகள் உண்டாகிறது.
பூக்கும் காலத்தில் காற்றில் பரவும் பூக்களின் மகரந்தம் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். வீட்டில் உள்ள தூசில் பூஞ்சைக் காளான் துகள்கள் இருக்கும். மேலும் தூசில் நுண்ணுயிரிகள் கலந்துள்ளன. புளிப்பான மற்றும் குளிர்ச்சியான உணவுகள்கூட சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். உணவை வாயில் வைத்தவுடன் கூசும்.
முகச்சுளிப்பு கூட ஏற்படும். சாப்பிட்ட பின் நாக்கில் வெடிப்பு ஏற்பட லாம், உடலில் அரிப்பு, சிறு கொப்புளங்கள் தோன்றலாம். மூச்சுவிடுவதில் சிரமம், பெருமூச்சு விடுதல், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
சில உணவுகள் சாப்பிட்ட ஒரு சில நிமிடங்களில் ஒத்துக் கொள்ளாமல் பிரச்சினை எற்படும். சில உணவுகள் 2 மணி நேரத்திற்குள்ளாக பின்விளைவை உண்டாக்கும். ஒவ் வாமை ஏற்பட்டால் குடல், சுவாசம், தோல், ரத்தசெல்கள் ஆகியவை பாதிப்படையும்.
வேர்க்கடலை, பட்டாணிக்கடலை போன்ற பருப்பு வகைகள் அதிக ஒவ்வாமையை ஏற்படுத்தும். இவை இம்யுனோகுளோபின் என்ற ரசாயனத்தை சுரந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கச் செய்யும். முட்டை, பால், வேர்க்கடலை, கோதுமை, பாதாம் பருப்பு, மீன், நத்தை வகை போன்றவை 90 சதவீதம் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியவை. இவற்றில் வேர்க்கடலை, மீன், நத்தை போன்றவைகளால் ஒவ்வாமை ஏற்பட்டால் அது வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும்.
மற்ற உணவுகள் தற்காலிகமாக ஒவ்வாமையை ஏற்படுத்தும். உணவில் ஒவ்வாமை ஏற்படுவதற்கு சிலவகை புரதங்கள் காரணமாகின்றன. பசும்பால், முட்டை, கடலை, கோதுமை, மீன், ஷெல்மீன், சோயா போன்ற பொருள்களில் இவ்வகை புரதம் காணப்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கு சில வகை சாக்லெட்டுகளால் ஒவ்வாமை ஏற்படலாம்.
பாதுகாப்பு முறைகள்
தூசு, பூக்களின் மகரந்த தூளினால் ஒவ்வாமை ஏற்படு பவர்கள் வெளியில் செல்லும்போது முகத்தை துணியால் மூடிக்கொண்டு செல்லலாம். பாய், தலையணை, மெத்தை போன்றவற்றை தூசு இல்லாமல் தூய்மையான முறையில் பயன்படுத்தவேண்டும்.
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளை வாரம் ஒருமுறை சோப்பு போட்டு குளிப் பாட்டவும். வீட்டுக்கு வெளியே வைத்து அவற்றை பராமரிக் கலாம். முக்கியமாக படுக்கை அறையில் அனுமதிக்கக் கூடாது.
நைலான் உள்ளிட்ட வழவழப்பான துணி வகைகளால் தோல் ஒவ்வாமை வரலாம். புதிய துணிகளில் உள்ள சாயம் ஒத்துக்கொள்ளாமல் போகலாம். எனவே துணியை துவைத்த பின் பயன்படுத்தவேண்டும்.
ஒவ்வாமை பிரச்சினை இருக்கும் நேரத்தில் உப்பில் ஊற வைத்த பொருள்களான ஊறுகாய், வற்றல், கருவாடு, கரம் மசாலா சேர்க்கப்படும் பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகள், பிரிட்ஜில் அதிக நாள்கள் வைத்திருக்கும் பால், தயிர், மட்டன், சிக்கன் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. இதன் மூலம் மூக்கடைப்பு உள்ளிட்ட தொந்தரவுகள் அதிகரிக்கும்.
சில சிப்ஸ் வகைகள், சீன உணவு வகைகளில் அஜினமோட்டோ உப்பு சேர்க்கப்படுவதால் அவற்றை உண்பதை தவிர்க்கவேண்டும். எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் பஜ்ஜி, போண்டா, பூரி ஆகியவற்றையும் தவிர்ப்பது நல்லது. ஒவ்வாமைக்கு ஒத்துக்கொள்ளாத உணவு வகைகளை தவிர்ப்பதன்மூலம் அதனால் உண்டாகும் தொல்லைகளைத் தவிர்க்க முடியும்.
சீரகத்தை வறுத்து பொடியாக்கி தினமும் தண்ணீரில் போட்டு காய்ச்சி குடித்து வருவதன்மூலம் ஒவ்வாமை ஏற்படுவதைத் தவிர்க்கலாம். மேலும் புதினாவை வாரத்தில் 3 முறை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். மோரில் உப்பு கலந்து வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிப் போட்டு சாப்பிடுவதன்மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.