* ஆறடி உயரம், அகன்ற தோள்கள், பரந்த மார்பு, ‘சிக்ஸ்பேக்’ கட்டழகன்- கவுரவ் அரோரா.
* கோதுமை நிறம், வாளிப்பான உடம்பு, காந்தக் கண்கள், மின்னல் வசீகர அழகி- கவுரி.
இவர்கள் இருவருக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.
முன்னவர்தான், பின்னவர். புரியும்படி சொன்னால், கட்டுமஸ்து இளைஞர் கவுரவ் அரோராதான் கவுரி என்ற கவர்ச்சிக் கன்னியாகி இருக்கிறார்.
மாடல் இளைஞரான கவுரவ் அரோரா, எம்.டி.வி.யில் தோன்றுவார், ஆண்களுக்கான ‘பிட்னஸ்’ இதழ் அட்டையில் சிரிப்பார், இவரைப் போன்ற உடம்பு நமக்கு வாய்க்காதா என்று இளைஞர்களை ஏக்கப் பெருமூச்சு விட வைப்பார்.
இப்படிப்பட்ட இளைஞர்தான், திடீரென்று ஒருநாள் பெண் அவதாரம் எடுத்து நின்றார், தான் ஒரு திருநங்கை என்று அறிவித்தார்.
கவுரவ் அரோராவுக்கு எப்படி விளம்பர, தொலைக்காட்சி வாய்ப்புகள் குவிந்தனவோ அதே மாதிரி ‘கவுரி’க்கும் வாய்ப்புகள் துரத்துகின்றன.
தான் ஒரு பையனாக பிறந்து வளர்ந்தாலும், அப்போதிருந்து உள்ளுக்குள் பெண்ணாகவே உணர்ந்து வந்ததாக சமீபத்தில் உண்மையை உடைத்திருக்கிறார், கவுரவ்… ஸாரி, கவுரி.
“விவரம் தெரியத் தொடங்கிய நாள் முதல் என்னை என் அம்மா, சகோதரிகளின் ஆடைகள்தான் ஈர்த்தன. சிலநேரங்களில் நான் அவற்றை அணிந்து பார்த்ததும் உண்டு. எனது நடவடிக்கைகள் என் குடும்பத்தினரின் கண்களில் படத்தான் செய்தன. ஆனால் அவர்கள் கண்டும் காணாதது போல் இருந்தனர். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற பயம் அவர்களுக்கு. சமூகத்தில் ஓரளவு அந்தஸ்துள்ள வசதியான குடும்பம் எங்களுடையது. அதனாலேயே என்னை ஒரு திருநங்கையாக ஏற்றுக்கொள்வதில் அவர்களுக்கு சங்கடம் இருந்தது” என்கிறார் கவுரி.
தங்களின் புறத்தோற்றத்துக்கு மாறாக நடப்பவர் களை உலகம் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்வதில்லை என்பதுடன், அவர்கள் மீது மோசமாகவும் நடந்துகொள்ளும். அதுதான் கவுரி விஷயத்தில் நடந்தது. 11 வயதில் அவர், சீனியர் மாணவர்கள் சிலரால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானார். அவரை ஒரு பெண்ணைப் போல காமக்கண் கொண்டு பார்த்துவந்தவர்கள், ஒருநாள் அவரை வேட்டையாடிவிட்டனர்.
அந்த வயதில் தனக்கு நடந்தது என்னவென்று தெரியவில்லை, ஆனாலும் அது தவறானது என்று மட்டும் புரிந்தது என்கிறார் கவுரி.
அந்தச் சம்பவத்தையும்விட மோசம், கவுரியின் தாய் அவரை சமாதானப்படுத்தி, நடந்ததை யாருக்கும் தெரியாமல் மறைத்து, மறந்துவிடலாம் என்று கூறியதுதான். ஆனால் அவரது அப்பா அதை அறிந்ததுமே போலீசில் புகார் செய்து, சம்பந்தப்பட்ட பையன்களை தண்டிக்க வைத்தார். ஆனால் விஷயம் வேறு வடிவம் எடுத்தது. எல்லா இடங்களிலும் அத்தகவல் பரவியதால், அவர் நடந்து போகும்போதெல்லாம் மற்றவர்கள் அவரைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரிக்க ஆரம்பித்தனர்.
“நான் என்னவோ வேண்டுமென்று இப்படிப் பிறந்தது போல மற்றவர்களின் செயல்கள் இருந்தன” என்று கூறும் கவுரியின் குரலில் கனத்த வருத்தம்.
வெளி ஆட்கள் மட்டுமல்ல, தன்னுடன் கூடப் பிறந்தவர்கள் கூட தன்னைப் புரிந்துகொள்ளவில்லையே என்பதுதான் கவுரியின் குறை.
கவுரிக்கு இயற்கை வழங்காததை அறிவியல் வழங்கியிருக்கிறது. குறைந்தபட்சம் வெளித்தோற்றத்தில் அழகான பெண்ணாக உருவெடுக்க உதவியிருக் கிறது.
“நான் எனது மூக்கைச் சீரமைத்தேன். லேசர் டிரீட்மெண்ட் மூலம் முகத்து முடிகளைக் குறைத்தேன். உதடுகளைப் புஷ்டியாக்கினேன்… இப்படி ஒவ்வொரு பாகமாய் பார்த்துப் பார்த்துச் செதுக்கிக்கொண்டேன். ஒவ்வொரு மாதமும் இந்த விஷயங்களுக்காக மட்டும் ஐம்பதாயிரம் ரூபாய் வரை செலவழிக்கிறேன். இப்போதுஒவ்வொரு நாளும் என் அழகு கூடிக்கொண்டே இருக்கிறது. இன்னும் மூன்று மாதம் கழித்துவந்து பாருங்கள், மயக்கம் போட்டுவிடுவீர்கள்” என்று சிரிக்கிறார், கவுரி.
கவுரிக்கு இப்போது 24 வயதாகிறது. இந்த வயதில் ஆண் குரலை பெண் குரலாக மாற்றும் முயற்சி மிகவும் தாமதமானது என்று டாக்டர்கள் கூறுகிறார்களாம்.
“பயிற்சியின் மூலம் நான் எனது குரலை ஓரளவு மாற்றிக்கொள்ளலாம் அல்லது குரலை மாற்றியே தீர வேண்டும் என்றால் குரல்வளை அறுவைச்சிகிச்சைக்கு முயற்சிக்கலாம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். ஆனால் குறைந்தபட்சம் ஓராண்டுக்கு நான் குரல்வளை அறுவைச்சிகிச்சை செய்துகொள்ளப் போவதில்லை” என்கிறார்.
“பாலுறுப்பு மாற்றம்தான் மிக முக்கியமானதும், சிக்கலானதும் ஆகும். அதன்பின் இயல்பு நிலைக்குத் திரும்புவதும் கஷ்டமானது, வலி நிறைந்தது. ஆனால் அதன் மூலம்தான் தான் ஒரு முழுமையான பெண் ஆவேன் என்பது தன்னைப் பொறுத்தவரை அபத்தம்” என்கிறார் கவுரி.
ஆனால் இவர் தனது பெண்மைக் கனவுக்காக வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட வேண்டும். ஆயுள் முழுவதும் ஹார்மோன் மருந்துகளை உட்கொண்டபடியே இருக்க வேண்டும்.
“பெண்ணாக மாற்றும் சிகிச்சையின்போது ஏற்படக்கூடிய எல்லா ‘ரிஸ்க்’கையும், பக்கவிளைவுகளையும் ஏற்றுக்கொள்கிறேன்’ என்ற ஒப்பந்தத்தில் நான் கையெழுத்திட்டிருக்கிறேன். நான் மேற்கொள்ளும் சிகிச்சையெல்லாம் எனது ஈரலை எந்த அளவுக்குப் பாதிக்கும், எந்த நேரத்திலும் நான் இறந்துபோய்விடக்கூடும் என்பதை அறிவேன். ஆனாலும் இவ்வளவு முயற்சிகள் செய்வதைப் பார்த்துச் சிலர் சிரிக்கும்போது எனக்கு வேதனையாக இருக்கிறது. யாராவது சும்மா தமது உயிரோடு விளையாடுவார்களா?” என்கிற கவுரியின் குரலில் கோபமும் வருத்தமும் இழைகிறது.
கவுரிக்கு தற்போது நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றனவாம்.
“நான் ஒரு நட்சத்திரம் ஆக விரும்பவில்லை. நிஜ வாழ்வில் ஒரு கதாநாயகி ஆக ஆசைப்படுகிறேன்” என்கிறார், ‘நச்’சென்று.