கணவன்-மனைவி இடையேயான பந்தம் நீடித்த உறவாக நிலைத்திருக்க சில அடிப்படை குணங்களை இருவரும் பின்பற்ற வேண்டியது அவசியம். காதலித்து திருமணம் செய்தவர்களாக இருந்தாலும், பெற்றோர் பார்த்து நிச்சயித்து திருமணம் செய்து கொண்டவர்களாக இருந்தாலும் இருவருக்குமிடையே பரஸ்பரம் புரிதல்கள் இருக்க வேண்டும். அதிலும் கணவனிடம் மனைவியை பற்றிய புரிதல்கள் அதிகம் இருக்க வேண்டும்.
* கணவன் எப்போதும் இயல்பான மனநிலையில் இருக்க வேண்டும் என்பது பெண்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். திருமணமான புதிதில் இருவருக்கும் இடையே அதிக நெருக்கமும், பாசப்பிணைப்பும் உருவாகும். நாளடைவில் நெருக்கமான அந்த பிணைப்பில் தொய்வு ஏற்படுவதை பெண்கள் விரும்ப மாட்டார்கள்.
* தங்களிடம் காட்டும் அன்பும், பாசமும் எப்போதும் ஒரே மாதிரியாக நிலைத்திருக்க வேண்டும் என்றும் பெண்கள் எதிர்பார்ப்பார்கள். அதனை புரிந்து கொண்டு செயல்படுவதில் சிலர் சுனக்கம் காட்டிவிடுகிறார்கள். அதுவே இருவருக்கும் இடையே மனஸ்தாபத்தை தோற்றுவித்துவிடுகிறது.
* மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தங்கள் உறவில் இடைவெளி ஏற்பட்டுவிடக்கூடாது என்பது பெண்களின் முக்கியமான எதிர்பார்ப்புகளில் ஒன்றாகும். இதனை கணவன்மார்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டியது அவசியம்.
* கணவன் எப்போதும் தன்னுடைய அருகாமையில் இருப்பது போன்ற உணர்வை மனைவியிடத்தில் உருவாக்க வேண்டும். அதனை பெண்கள் உணர்வுபூர்வமாக ரசிப்பார்கள். வேலைக்கு செல்பவர்களாக இருந்தாலும், சுயதொழில் செய்பவர்களாக இருந்தாலும் மனைவியுடனான அருகாமை உணர்வில் இருந்து விலகிவிடக்கூடாது. கொஞ்ச நேரம் பேசினாலும், எப்போதும் கணவர் அருகில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும்.
* சிலர் அலுவலக ரீதியாக வெளியூருக்கோ, வெளிமாநிலத்திற்கோ செல்ல நேரும்போது அங்கேயே சில நாட்கள் தங்கவேண்டியதிருக்கும். அந்த சமயத்தில் தனிமை உணர்வு பெண்ணை வாட்டும். அப்போது கணவனின் பேச்சு ஆறுதலாக இருக்க வேண்டும். முக்கியமாக அலுவலகத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடியை ஒருபோதும் மனைவியிடம் கொட்டிவிடக்கூடாது. எத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்தாலும் மனைவியிடம் அதன் தாக்கத்தை வெளிப்படுத்திவிடக்கூடாது. பிரிவில் வாடும் துணை அதனை புரிந்து கொள்ளும் மனநிலையில் இருக்கமாட்டார்.
* கணவன், மனைவியிடம் திருமணமான புதிதில் கடைப்பிடித்த பொறுமையையும், புரிதல் உணர்வையும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். அதில் இருந்து விலகினால் தன் மீது கணவனுக்கு அக்கறையே இல்லை என்ற உணர்வு மனைவியிடம் உருவாகிவிடும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது. சின்னச், சின்ன விஷயங்கள் மூலம் அவற்றை தக்கவைத்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
* எந்த விஷயமாக இருந்தாலும் அதனை கணவன் நிதானமாக கையாள வேண்டும் என்பது மனைவியின் விருப்பமாக இருக்கும். அவசரகதியில் செய்யும் எந்த வேலையையும் பெண்கள் ரசிக்கமாட்டார்கள். அது குடும்ப நலன் சார்ந்த விஷயமாகவே இருந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
* குழந்தைகள் பிறந்த பிறகு கணவன்-மனைவி இடையேயான உறவில் சற்று தொய்வு ஏற்படக்கூடும். பெண்கள் குழந்தைகளுடனேயே அதிக நேரத்தை செலவிட ஆர்வம் காட்டுவார்கள். குறைந்தபட்ச நேரத்தையாவது இருவரும் தங்களுக்காக ஒதுக்கி உறவை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அதில் அன்புடன் அரவணைப்பும், அக்கறையும் அதிகம் கலந்திருக்க வேண்டும்.
* காதல் தம்பதியர் காதலிக்கும்போது அடிக்கடி ‘ஐ லவ் யூ’ சொல்லி ஆனந்தமழையில் நனைந்திருப்பார்கள். குழந்தை பிறந்த பிறகு காதலில் இடைவெளி விழுந்திருந்தாலும், அவ்வப்போது ‘ஐ லவ் யூ’ சொல்லி பந்தத்தை இணக்கமாக்கிக் கொள்ளவேண்டும்.
* ஆண்கள், திருமணமான புதிதில் மனைவிக்கு பிடித்தமான விஷயங்களை பார்த்து, பார்த்து செய்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள். குழந்தை பிறந்த பிறகு அது தலைகீழாக மாறி, குழந்தையின் பக்கம் திரும்பிவிடும். அது மனைவிக்கு மனக் குறையாக மாறிவிடும். குழந்தை பிறந்த பின்னரும் மனைவியின் விருப்பு, வெறுப்புகள் எதுவும் மாறி இருக்காது. அதனை புரிந்துகொண்டு அவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும்.
* குடும்பத்துக்குள் மூன்றாம் நபர்களின் தலையீட்டுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்றாலும் சில சந்தர்ப்பங்களில் அனுமதித்தே ஆக வேண்டியிருக்கும். அந்த நபர் கணவன்-மனைவி இருவரை பற்றி நன்கு அறிந்தவராக, அவர்களின் நலனில் அக்கறை மிகுந்தவராக இருக்க வேண்டும். கணவன்-மனைவி இடையே சண்டை, சச்சரவுகள் தலைதூக்கும்போது இருவரும் தங்கள் பக்க நியாயத்திற்குத்தான் வலுசேர்க்க நினைப்பார்கள். அது தம்பதியரிடையே விரிசலை அதிகப்படுத்தும் பட்சத்தில் மூன்றாம் நபரின் தலையீடு சுமுக உறவை மேம்படுத்துவதாக அமைய வேண்டும்.
* பிள்ளைகளின் நலனுக்கோ, எதிர்கால திட்டமிடலுக்கோ செய்யும் எந்த காரியமாக இருந்தாலும் மனைவியின் பங்களிப்பும் அதில் இருக்க வேண்டும். அதனை பெண்கள் நிச்சயம் எதிர்பார்ப்பார்கள். ஒருசிலர் மனைவியிடம் கேட்காமலே தாங்களே சுயமாக முடிவெடுத்து விடுவார்கள். அதுபற்றி அடுத்தவர் மூலம் அறிந்து கொள்ளும் சூழ்நிலையில் மனைவி இருந்தால், நிச்சயம் குடும்பத்தில் சச்சரவுகள் தலைதூக்கிவிடும்.
* மனைவி ஏதாவது மனக்கசப்பில் இருந்தால், கணவன் எதுபற்றி பேசினாலும் ஒற்றை வார்த்தையிலேயே பதில் அளிப்பார்கள். அதனை கணவர் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். ‘ஒண்ணுமில்லை’ என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தால் அதற்குள் பல பிரச்சினைகள் புதைந்திருக்கும். மனைவியின் உள்ளக்குறிப்பை அறிந்து பிரச்சினைக்கு தீர்வு காண முயல வேண்டும்.
* கணவன்-மனைவி இருவரில் யார் தவறு செய்திருந்தாலும் அதனை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்க தயங்கக் கூடாது. அதில் ஈகோவுக்கு இடம் கொடுத்தால், நிம்மதியை தொலைக்க வேண்டிவரும். அதுபோல் மன்னிப்பு கேட்டபிறகு, ஏதாவது ஒரு பிரச்சினையின்போது பழைய சம்பவத்தை நினைவுக்கு கொண்டு வந்து அவர்கள் மனம் நோகும்படி பேசக் கூடாது.