நெயில் புஷ்ஷர், நெயில் ஃபைலர், நெயில் கிளீனர், ஃபிங்கர் பிரஷ் என மெனிக்யூருக்கு தேவையான சில அடிப்படையான கருவிகள் உள்ளன. நகங்களை சுத்தப்படுத்த, நகங்களின் இடுக்குகளில் உள்ள அழுக்கை வெளியேற்ற, கியூட்டிகிள் எனப்படுகிற தேவையற்ற சதை வளர்ச்சியை அகற்றவெல்லாம் மேற்சொன்ன கருவிகள் அவசியம்.
முதலில் கைகளை ஊற வைப்பதற்கு முன் கைகளுக்கு பேக் போடுவோம். அதற்கு முன் கைகளில் உள்ள இறந்த செல்களை அகற்ற வேண்டும். இறந்த செல்களை அகற்ற டெட் செல் எக்ஸ்போலியேட்டர் எனப்படுவதை, அதாவது, இறந்த செல்களை அகற்றக்கூடிய க்ரீம் இருந்தால் உபயோகிக்கலாம். அது இல்லை என்பவர்கள் சீனியை தூளாக்கி கொள்ளவும், பாதாம் எண்ணெய் என ஏதேனும் ஒன்றை எடுத்துக் கைகளில் தடவிக் கொள்ளவும். கைகளில் எண்ணெய்ப் பசை இருக்கும் போதே, தூள் செய்த சர்க்கரையை அதன் மேல் வைத்து நன்கு தேய்க்கவும்.
வட்ட வடிவமான மசாஜ் செய்து கைகளில் தேய்த்து குளிர்ந்த தண்ணீரில் கழுவும் போது கைகளில் உள்ள இறந்த செல்கள் வெளியேறி விடும். இறந்த செல்கள் வெளியேறினாலே கைகளுக்கு உடனடியாக ஒரு பொலிவு உண்டாகும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். கைகள் மென்மையாகும். அதன் பிறகு கைகளுக்கு போடக்கூடிய பேக். கைகளுக்கு ஒரு ஈரப்பதம் வேண்டும் என நினைத்தால் பொடித்த பனை சர்க்கரை (இது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிறது) 2 தேக்கரண்டி எடுத்து, ஒன்றரை தேக்கரண்டி தேன் கலந்து நன்கு அடித்துக் கரையும் வரை கலக்கவும்.
அது க்ரீம் மாதிரி வர வேண்டும். அதில் 10 முதல் 15 சொட்டு எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். 2 சிட்டிகை உப்பு போட்டு அந்தக் கலவையினை கைகள் முழுக்கத் தடவி 10 நிமிடங்கள் வைத்திருந்து கழுவலாம். பிறகு கைகளை ஊற வைக்க வேண்டும். கை பொறுக்கும் சூட்டில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். அதில் 1 கைப்பிடி எப்சம் உப்பு சேர்க்கவும். 1 கைப்பிடி மூன் ஸ்டோன் எனப்படுகிற ஒரு வகை உப்பையும் சேர்க்கவும். இது கைகளுக்கு ஒரு வித மென்மையையும் பளபளப்பையும் கொடுக்கக்கூடியது.
இது எல்லா கடைகளிலும் கிடைக்கிறது. பிறகு சமையலுக்கு உபயோகிக்கும் கல் உப்பு 1 கைப்பிடி சேர்த்து, 1 தேக்கரண்டி விளக்கெண்ணெயும் 1 தேக்கரண்டி தேனும் 2 தேக்கரண்டி கிளிசரின் சேர்க்கவும். 1 தேக்கரண்டி பூந்திக் கொட்டைதூள் சேர்க்கவும். 10 மி.லி. ஆப்பிள் சிடர் வினிகர் விடவும். எல்லாவற்றையும் நன்கு கலந்து அதில் கைகளை நன்கு ஊற வைக்கவும். இது கைகள், நகங்களில் உள்ள அழுக்குகள், இறந்த செல்கள் எல்லாவற்றையும் எடுத்து விடும். அந்தத் தண்ணீர் முழுக்க குளிர்ந்ததும் கைகளை எடுத்து கழுவி விடுங்கள்.
இப்போது உங்கள் கைகள் அழகு கொஞ்சும் அளவுக்கு மென்மையாக மாறியிருக்கும். இது அழகுக்கான சிகிச்சை. இதையே ஆரோக்கியமான மெனிக்யூராக மாற்றலாம். இதே கரைசலில் 10 சொட்டு பிளாக் பெப்பர் எண்ணெய் 10 சொட்டு கேம்ஃப்பர் எண்ணெய், 10 சொட்டு டீ ட்ரீ எண்ணெய், 10 சொட்டு பெர்கமாட் எண்ணெய் எல்லாம் கலந்து இதில் கைகளை ஊற வைக்கும் போது வின்ட்டர் ஆர்த்ரைடிஸ் எனப்படுகிற பிரச்சனை அப்படியே காணாமல் போகும். வாரத்தில் 3 நாட்கள் இதைச் செய்ய, கைகளில் உள்ள வலி குறைந்து நிவாரணம் கிடைப்பதை உணரலாம்.