Home இரகசியகேள்வி-பதில் என் மார்புப் பகுதியில் கட்டிகள் மாதிரி இருக்கிறது

என் மார்புப் பகுதியில் கட்டிகள் மாதிரி இருக்கிறது

43

நான் ஒரு கல்லூரி மாணவி. என் மார்புப் பகுதியில் கட்டிகள் மாதிரி இருக்கிறது. காம்புகள் உள் நோக்கி இருக்கின்றன. புற்று நோயாக இருக்குமோ என பயப்படுகிறேன். வீட்டில் சொல்லவும் பயமாக இருக்கிறது. மார்பகப் புற்று நோய்க்கு எங்கே சிகிச்சை அளிக்கிறார்கள்? எவ்வளவு செலவாகும்? – பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

தாமதிக்காமல் முதலில் மருத்துவரை அணுகுங்கள். அது புற்று நோய்தானா அல்லது வெறும் நீர்க் கட்டிகளா எனப்பாருங்கள். நீர்க் கட்டிகளாக இருந்தால், அவற்றை அகற்றுவது சுலபம். புற்றுநோய் என நீங்கள் சந்தேகப்படும் பட்சத்தில் உடனடியாக வீட்டில் விஷயத்தைச் சொல்லி சிகிச்சை மேற்கொள்ளுங்கள். தாமதித்தால், அது பரவி, மார்பகங்களையே அகற்றும் நிலை ஏற்படலாம். மகப்பேறு மருத்துவரை முதலில் போய் பாருங்கள். எல்லா மருத்துவமனைகளிலும் இன்று இதற்கான சிறப்பு மருத்துவர்கள் இருக்கிறார்கள்.

என் வயது 30. உறவு குறித்து எனக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளன. என் கணவர் ஆபாச ஆங்கிலப் படங்களை டி.வியில் போட்டுக் காட்டி அதன்படி உறவு கொள்ள என்னையும் வற்புறுத்துகிறார். அதெல்லாம் அறுவருப்பானதில்லையா? உடல்நலத்தைப் பாதிக்காதா? நான் கர்ப்பமாக இருக்கிறேன். கர்ப்ப காலத்தில் எந்தெந்த மாதங்களில் உறவு கொள்ளலாம்? செக்ஸ் உணர்வு அதிகரிக்க எப்படிப்பட்ட உணவுகள் உட்கொள்ள வேண்டும்? – வ. குயிலி, தூத்துக்குடி.

உறவு அலுத்துப் போகாமலும், நெருக்கம் அதிகரிக்கவும் உங்கள் கணவரை மாதிரி செக்ஸில் புதுமைகளைக் கையாள்பவர்கள் உண்டு. அதில் உங்கள் இருவருக்கும் விருப்பம் இருக்கிற பட்சத்தில் தவறேதுமில்லை. உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. அதற்கு உடன்படுவதும், மறுப்பதும் உங்கள் தனிப்பட்ட விருப்பம். கர்ப்பம் தரித்த முதல் மூன்று மற்றும் ஏழாவது மாதம் முதல் பிரசவம் வரை உறவைத் தவிர்ப்பது பாதுகாப்பானது. இடைப்பட்ட மாதங்களிலும் பக்க வாட்டு, பின் பக்க நிலைகளில் வயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுக்காத போஸ்களில் உறவு கொள்வதே பாதுகாப்பு. உடலுறவு என்பது மனம் சம்பந்தப்பட்ட விஷயம். எப்படிப்பட்ட ஆரோக்கியமான உணவும் ஆரோக்கியமான செக்ஸுக்கு உதவும். அதிகக் கலோரிகள் உள்ளவற்றைத் தவிர்க்கவும். மனம் ஆரோக்கியமாக இருந்தால், உறவும் நன்றாக இருக்கும்.

என் வயது 38. கர்ப்பப்பை அறுவை செய்து மூன்று மாதங்கள் ஆகிறது. லேசாகத் தொட்டாலே வயிறு வலிக்கிறது. வெள்ளையாக சீழ் போலக் கசிகிறது. நான் பஞ்சாலையில் பணிபுரிகிறேன். மீண்டும் வேலைக்குப் போகலாமா? இந்த அறுவைக்குப் பிறகு உடல் பலவீனமாகிவிடும் என்பதும், எடை ஏறும் என்பதும் உண்மையா? – ராஜி, பழனி.

கர்ப்பப்பை அறுவையால் உடல் பலவீனமாகாது. நீங்கள் குறிப்பிட்டிருக்கிற அறிகுறிகளைப் பார்த்தால் தையல் போட்ட இடத்தில் இன்பெக்ஷன் ஆகியிருக்குமோ எனத் தோன்றுகிறது. அதனால்கூட வயிற்று வலி இருக்கலாம். பரிசோதனை மேற்கொண்டு, சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த அறுவை சிகிச்சைக்கும், உடல் எடை ஏறுவதற்கும்கூட எந்தத் தொடர்புமில்லை. அது உங்கள் உடல்வாகைப் பொறுத்தது. நடைப்பயிற்சி நல்ல தீர்வு தரும். நீங்கள் இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகள், கீரை, வைட்டமின் அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு ஆஸ்துமா மாதிரியான சுவாசக் கோளாறுகள் இல்லாத பட்சத்தில் நீங்கள் வேலையைத் தொடர்வதில் பிரச்சினை இருக்காது.

என் வயது 28. மார்பகங்கள் சிறியதாக இருப்பதால் கணவர் வெறுக்கிறார். மற்ற பெண்களுடன் சகவாசம் வைத்திருக்கிறார். மார்பகங்களைப் பெரிதாக்க ஏதேனும் மருந்தோ, சிகிச்சையோ இருந்தால் சொல்லுங்கள். வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொடுங்கள். – நிர்மலா தேவி, ரத்தினபுரி.

மார்பகங்களின் அளவு என்பது பரம்பரை வாகு, உடலமைப்பு போன்ற பல விஷயங்களைப் பொறுத்தது. மார்பகங்கள் என்பவை வியர்வை சுரப்பிகள் மாதிரி ஒரு வகை சுரப்பிகள் என்பதை உங்கள் கணவரிடம் சொல்லுங்கள். சரியான அளவுள்ள பிரா, உடற்பயிற்சி போன்ற சில விஷயங்கள் உங்கள் பிரச்சினைக்கு உதவும். மார்பகங்களைப் பெரிதாக்குவதாகச் சொல்லப்படும் மாத்திரைகள், மருந்துகள் போன்றவை பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அவையெல்லாம் ஆபத்தானவை. கணவரிடம் பொறுமையாகப் பேசிப் புரிய வையுங்கள்.

என் வயது 25. இன்னும் திருமணமாகவில்லை. பிறந்தது முதல் நான் ஒரு கிட்னியுடன்தான் வாழ்கிறேன். அதனால் மாதவிலக்குப் பிரச்சினைகள், கை, கால் வீக்கம், வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படுகின்றன. ஒரு கிட்னியுடன் உள்ள நான் கல்யாணம் பண்ணலாமா? உடலுறவிலோ, கர்ப்பம் தரிப்பதிலோ பாதிப்பிருக்குமா? பிறக்கப்போகும் குழந்தையும் ஒரு கிட்னியுடன் பிறக்க வாய்ப்புண்டா? – எஸ்.பிரியா, திருச்சி.

நீங்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றில்லை. உங்களை ஏற்றுக் கொள்ளும் நல்ல கணவர் கிடைத்தால் தாராளமாகச் செய்து கொள்ளலாம். ஒரு கிட்னியுடன் இருந்தாலும், ஆரோக்கியமாக இருக்கிறீர்களா என்பது தான் முக்கியம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மற்ற பிரச்சினைகளுக்கு சரியான சிகிச்சைகளின் மூலம் தீர்வு காணலாம். ஒரு கிட்னியுடன் இருப்பதால் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையிலோ, கர்ப்பம் தரிப்பதிலோ பாதிப்பிருக்காது. ஆனால் உங்களுக்குப் பிறக்கும் குழந்தையும் ஒரு கிட்னியுடன் பிறக்க ஐம்பது சதவிகிதம் வாய்ப்புகள் உண்டு.

என் வயது 18. பூப்பெய்தி நான்கு வருடங்கள் ஆகிறது. என் மார்பகங்களில் காம்புகள் உள்ளே இழுத்த படி உள்ளன. நாளுக்கு நாள் மார்பகங்கள் சிறுத்துக் கொண்டே போகிறது. தீர்வு சொல்வீர்களா? -சுகன்யா, கோவை.

இது இன்வர்ட்டட் நிப்பிள்ஸ் எனச்சொல்லக் கூடிய பிரச்சினையாக இருக்கலாம். அப்படியிருப்பின் நீங்கள் கல்யாணமாகி, கர்ப்பம் தரிக்கும்போது மார்பகங்கள் பெரிதாகிற சமயத்தில் இந்தப் பிரச்சினை தானாகச் சரியாகும். மற்றபடி மார்பகங்களில் ஏதேனும் வீக்கம் இருக்கின்றனவா எனப் பாருங்கள். கட்டிகள் ஏதேனும் இருக்கின்றனவா எனத்தெரிய வேண்டும். நல்ல மகப்பேறு மருத்து வரை நேரில் கலந்தாலோசியுங்கள். வலி இருந்தாலும் உடனடி மருத்துவப் பரிசோதனை அவசியம். பிரசவத்துக்குப்பிறகு, குழந்தை தாய்ப்பால் குடிக்கிறபோது சரியாகும். கவலை வேண்டாம்.

என் வயது 14. வயதுக்கு வந்து 2 ஆண்டுகளாகிறது. மார்பகங்கள் பெருத்துத் தொங்கிக் காணப்படுகின்றன. என்ன தீர்வு? – பெயர், ஊர் சொல்ல விரும்பாத வாசகி.

உடற்பயிற்சி ஒன்றுதான் ஒரே தீர்வு. மார்பகங்களில் உள்ளவை வெறும் கொழுப்புத் திசுக்கள். மார்பகக் கீழ் தசைகளுக்கான பயிற்சிகளைச் செய்தால் ஓரளவு சரியாகும். சரியான அளவுள்ள, பட்டை வைத்த பிரா அணிவதும் அவசியம். அளவைக் குறைக்கிற சிகிச்சைகள் அறிவுறுத்தத் தக்கவையல்ல.

என் வயது 21. கணவருக்கு 28. திருமணத்தன்றே தலைவலி ஆரம்பித்து விட்டது. பத்து வருடங்களாக சுய இன்பப் பழக்கம் இருந்ததால் என் கணவரால் முதலிரவன்றே உறவில் ஈடுபட முடியவில்லை. இன உறுப்பில் வலி இருக்கிறது என்கிறார். எனக்கோ செக்ஸ் ஆசை அதிகமாக இருக்கிறது. நான் அவரை விவாகரத்து செய்து விடலாமா? அல்லது அவரைக் குணப்படுத்த முடியுமா? – பெயர் வெளியிட விரும்பாத நாகர்கோயில் வாசகி.

கல்யாணச் சடங்குகளாலும், அதனால் ஏற்படுகிற களைப்பாலும் பெரும்பாலான தம்பதியருக்கு முதலிரவு முழுமையான இரவாக அமைவதில்லை. கல்யாணத்தன்றே உடல் சங்கமம் நடந்தாக வேண்டும் என்றில்லை. உடலும், உள்ளமும் சகஜ நிலைக்குத் திரும்பிய பிறகு உறவில் ஈடுபடலாம். உங்கள் விஷயத்திலும் அப்படி நிகழ்ந்திருக்கலாம். கணவரின் சுய இன்பப் பழக்கத்துக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. மனம்தான் காரணம். தன் மனைவியை திருப்திப்படுத்த முடியுமா, ஆண்மையை நிரூபிக்க முடியுமா என்கிற பயத்தால்கூட உங்கள் கணவர் உறவைத் தவிர்க்கலாம். அவருக்குத்தைரியம் சொல்லுங்கள். செக்ஸ் மருத்துவர் அல்லது மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று கவுன்சலிங் செய்யலாம். அவராலும் ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபட முடியும் என நம்பிக்கை அளியுங்கள். உறுப்புகளில் வலி இருப்பதாகச் சொல்வதற்கும் மருத்துவரிடம் சரியான சிகிச்சை பெற்று தீர்வு காணலாம்.

என் வயது 22. திருமணமாகவில்லை. மாதவிலக்கின்போது கட்டி, கட்டியாக ரத்தம் வெளியேறுகிறது. இதனால் பாதிப்பு ஏதும் உண்டா? – எம். மனோன்மணி, டி.எம்.பாளையம்.

அளவுக்கதிக இரத்தப் போக்கு இருக்கிறதா என்றும் பாருங்கள். பொதுவாக இது ஒரு பெரிய பிரச்சினையே இல்லை. கழிவுத் திசுக்கள் அதிகமிருந்தால், இப்படி கட்டி, கட்டியாக இரத்தம் வெளிறேலாம். கர்ப்பப்பையில் கட்டி ஏதேனும் இருந்தாலும் இப்படி இருக்கலாம். ஹார்மோன் கோளாறு உள்ளதா என்றும் பார்க்கவும். இது எல்லாமே குணப்படுத்தக் கூடியவையே. இரத்தம் அதிகம் வெளியேறினால் இரத்த சோகை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ போன்றவை அதிகமுள்ள உணவுகளை நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம். பயப்பட வேண்டிய அவசியமில்லை.

என் வயது 43. கணவருக்கு 50. ஏழு மாதங்களுக்கு முன்பு அவருக்கு முதல் முறையாக மாரடைப்பு வந்தது. இந்த வயதிலும் அவருக்கு இல்லற வாழ்க்கை ஈடுபாடு குறையவில்லை. மாரடைப்பு வந்ததால் நான்தான் பயப்படுகிறேன். மாரடைப்பு வந்தவர்கள் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். குழப்பம் தீர்க்கவும். – தேவி, வளவனூர்.

மாரடைப்புக்கும், இல்லற வாழ்க்கை ஈடுபாட்டுக்கும் நீங்கள் பயப்படுகிற அளவுக்கு தொடர்பில்லை. இன்னும் சொல்லப்போனால் பலரும் இந்த மாதிரி தேவையற்ற பயங்களின் காரணமாக, இயல்பான உணர்வுகளைக் கூட அடக்கி வாழப் பழகுகிறார்கள். அப்படி அடக்கிக் கொள்கிறபோது அது மாரடைப்பில் கொண்டு போய்விட வாய்ப்புகள் அதிகம். ஆண்களுக்காவது இந்த ஆர்வத்துக்கு வடிகாலாக வழிகள் உண்டு. ஆனால் பெண்களுக்கு அப்படியில்லை. இருதயக் கோளாறுகளால் பாதிக்கப்படுகிற பல பெண்களின் வரலாறை ஆராய்கிறபோது இப்படி இயல்பான உணர்வுகளை அடக்குவது காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது. கணவன்- மனைவியான உங்களுக்குள் இந்த விஷயத்தில் கட்டுப்பாடு வேண்டாம். கணவரின் உணவு விஷயத்தில் கவனமாக இருங்கள். நெய் மற்றும் எண்ணெயை அறவே தவிர்க்கவும். குறிப்பாக உறையும் தன்மை கொண்ட எண்ணெய்களைத் தொடவே வேண்டாம். நல்லெண்ணெய் அளவோடு சேர்த்துக் கொள்ளலாம். காய்கறி, கீரைகள் நிறைய இருக்கட்டும். பதப்படுத்திய உணவுகளை சாப்பிட வேண்டாம். ருசிக்காக சாப்பிடுவதைத் தவிர்த்து, ஆரோக்கியத்துக்காக சாப்பிடப் பழக வேண்டும். மாரடைப்பு ஒரு முறை வந்தால் மீண்டும் வந்துதானாக வேண்டும் என்றில்லை. மேற்சொன்ன விஷயங்ளில் கவனமாக இருக்கிற பட்சத்தில் அது வருவது தள்ளிப் போகவோ, வராமலே போகவோ கூடும்.

எனக்குத் திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. குடும்பச்சூழல் காரணமாக நாங்கள் குழந்தையே வேண்டாம் என முடிவு செய்திருக்கிறோம். சித்த மருத்துவத்தில் குழந்தையில்லாமல் செய்ய சிகிச்சை ஏதும் உண்டா? – பெயர் வெளியிட விரும்பாத செஞ்சி வாசகி.

நீங்கள் நினைக்கிற மாதிரி குழந்தையே பிறக்காமலிருக்கச் செய்ய சிறப்பு சிகிச்சைகள் ஏதும் கிடையாது. பாதுகாப்பான நாட்கள் என்று சொல்லக் கூடிய நாட்களில் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது ஒன்றுதான் இதற்கான வழி. அதாவது மாதவிலக்கான ஒன்பதாம் நாள் முதல் பதினெட்டாம் நாள் வரை தாம்பத்திய உறவைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பத்தைத் தள்ளிப்போட மாத்திரைகள் உண்டு. அவையெல்லாம் ஒன்றிரண்டு மாதங்கள் சாப்பிடத்தானே தவிர, நீண்ட காலத்துக்கு எடுத்துக் கொள்கிற பட்சத்தில் பக்க விளைவுகளை உண்டாக்கும். கரு உருவாகாமல் பாதுகாப்பாக இருக்கப் பாருங்கள். உண்டான பிறகு அதை அழிக்க நினைக்காதீர்கள். என் மருத்துவ அனுபவத்தில் முதல் குழந்தை வேண்டாம் என அதை அபார்ஷன் செய்தார் ஒரு பெண். அதன் பிறகு அவருக்குக் கருக்குழாய் அடைப்பு ஏற்பட்டு பத்தாண்டுகளாகியும் இன்னும் குழந்தை தங்காமல் சிகிச்சையில் இருக்கிறார். இப்போது குழந்தையே வேண்டாம் என நினைக்கிற நீங்கள் பிற்காலத்தில் மனம் மாறலாம். குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதிக்கு இப்போதே முற்றுப்புள்ளி வைத்து விட்டால்? எனவே முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள். திருமணமான ஒரே வருடத்தில் செய்யக் கூடிய முடிவில்லை இது.

என் வயது 26. ஒரு குழந்தை உண்டு. கடந்த சில நாட்களாக எனக்கு சிறுநீரை அடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு நிமிடம் கூட அடக்க முடியவில்லை. சில சமயங்களில் உடை நனைந்து தர்ம சங்கடத்தை உண்டாக்குகிறது. இதைக் குணப்படுத்த முடியுமா? – விஜிலா, நெல்லை.

திடீரென உங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல், பிரச்சினைகளைக் குறித்த பயம் போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம். சர்ககரை நோய்க்கான சோதனையைச் செய்து பாருங்கள். உங்களுடைய உணவு எப்படிப்பட்டது எனத் தெரியவில்லை. அதில் எல்லா வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன் மற்றும் தாதுப் பொருட்கள் இருக்கிற மாதிரிப் பார்த்துக் கொள்ளுங்கள். பருப்பும், முட்டையும் தினம் சேர்த்துக் கொள்ளவும். காய்கறி, கீரை, பழம் மூன்றும் தினசரி மெனுவில் இருக்கவேண்டும். பாலில் தண்ணீர் விடாமல் காய்ச்சி அப்படியே குடிக்கவும். ச்யவனபிராஷ் லேகியம் சாப்பிடலாம். மருத்துவரிடம் நேரடிப் பரிசோதனை மேற்கொண்ட பிறகு, அவரது ஆலோசனையின் பேரில் காலையிலும், மாலையிலும் அஷ்வ கந்தா மாத்திரை ஒவ்வொன்று சாப்பிடலாம். மாலை நேரத்தில் கைப்பிடியளவு பொட்டுக் கடலையும், ஒரு ஆப்பிளும் சாப்பிடவும். இந்தப் பிரச்சினைக்கென்றே பிரத்யேக யோகாசனங்கள் உள்ளன. அவற்றையும் மருத்துவர் அல்லது யோகாசன நிபுணரின் ஆலோ சனையின் பேரில் செய்யலாம். மனத்தை ஒரு முகப்படுத்தும் தியானப் பயிற்சி இந்தப் பிரச்சினைக்கு மிக அருமையான சிகிச்சை. முடிந்தால் தினம் வாக்கிங் செல்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். மன ஆரோக்கியம்தான் இப்பிரச்சினைக்கான முதல் சிகிச்சை. எந்தப் பிரச்சினைக்கும் டென்ஷன் ஆகாமல், தைரியமாக சந்திக்கப் பழகுங்கள். உணவே மருந்து என வாழப் பழகுங்கள், மருந்தே உணவு என்ற நிலை ஆபத்தானது.

எனக்குத் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகிறது. வயது 30. எனக்கு முகம், கை, கால் என உடலெங்கும் ரோம வளர்ச்சி மிக அதிகமாக இருக்கிறது. இதனாலேயே எனக்கும், என் கணவருக்கும் ஒத்துப் போகாமல் அவர் என்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டார். என் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வே கிடையாதா? -பெயர் வெளியிட விரும்பாத நாகப் பட்டிணம் வாசகி.

பரம்பரைத் தன்மை, முறையற்ற மாதவிலக்குக்காக எடுத்துக் கொள்ளும் சிகிச்சைகள், ஹார்மோன் கோளாறு போன்ற ஏதேனும் ஒன்றுதான் இப்படிப்பட்ட ரோம வளர்ச்சிக்குக் காரணம். செயற்கை மணம் மற்றும் குணம் நிறைந்த உணவை அடிக்கடி சாப்பிடுகிறவர்களுக்கும் இப்படி ஹார்மோன் கோளாறு உண்டாகி, ரோம வளர்ச்சி அதிகரிப்பதாக ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது. தேவையற்ற ரோமங்களை அகற்ற வாக்சிங் செய்து கொள்ளலாம். சர்க்கரை, எலுமிச்சை மற்றும் கிளிசரினின் கலவையே வாக்ஸ். இது சருமத்தை பாதிக்காது. கெமிக்கல் கலந்த கிரீம்களை உபயோகிக்காதீர்கள். குளிப்பதற்கு சோப்புக்குப் பதிலாக பயத்தம் மாவு உபயோகிக்கலாம். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் கஸ்தூரி மஞ்சளையும் அத்துடன் சேர்த்து அரைத்து உபயோகிக்கலாம். இத்துடன் எலுமிச்சை சாறு அல்லது தேன் இரண்டை யும் மாற்றி மாற்றி சேர்த்து புருவங்களில்படாமல் தேய்த்துக் குளிக்கலாம். நாட்டு மருந்துக் கடைகளில் கோரைக் கிழங்கு என்று கிடைக்கும் அதை வாங்கி அரைத்து அப்படியே உடம்புக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், ஆறு மாதங்களில் ரோம வளர்ச்சி நன்கு குறையும். வாரம் ஒரு முறை உப்பில்லாத வெண்ணையை முகத்தில் தடவி, பதினைந்து நிமிடங்கள் ஊறிக் கழுவவும். முகம் பட்டு போலாகும். வீட்டுப் பெரியவர்களிடம் விஷயத்தைச் சொல்லி, கணவரிடம் பேசி சேர்த்து வைக்க ஏற்பாடு செய்யச் சொல்லுங்கள்.

என் வயது 26. மிகவும் ஒல்லியாக இருப்பதால் திருமணம் தள்ளிப் போகிறது. உடல் இளைக்க மாத்திரைகள் இருப்பதைப்போல், குண்டாக்க ஏதேனும் சிகிச்சைகள் இருந்தால் சொல்லுங்களேன். – மாலா, நெற்குன்றம்.

குண்டான உடலைக் குறைப்பதுதான் இப்போது பல பெண்களுக்கும் பிரச்சினையே. குண்டாக விரும்புவோர் உணவின் மூலமே அதை சாத்தியப்படுத்தலாம். அரைக்கிலோ உடைத்த கடலை, கால் கிலோ சர்க்கரை இரண்டையும் பொடி செய்து, அதில் கால் கிலோ நெய் சேர்த்து சின்னச் சின்ன லட்டு களாகப் பிடித்து தினம் ஆறு அல்லது ஏழு சாப்பிடவும். அமுக்கராக் கிழங்கு சூரணம் ஒரு சிட்டிகையை நெய்யில் குழைத்து தினம் மூன்று வேளைகள் சாப்பிடவும். ச்யவன பிராஷ் லேகியம் தினம் மூன்று வேளைகள் சாப்பிடவும். தினம் சிறிது தேங்காயைப் பச்சையாக சாப்பிடவும். உணவிலும் தேங்காய் அதிகம் சேர்த்துக் கொள்ளவும். தினம் இரு வேளை ஐந்து பாதாம், ஒரு முட்டை சாப்பிடவும். தினம் நான்கு டம்ளர் பால் குடிக்கலாம். வாரம் ஒரு முறை ஆட்டிறைச்சி சேர்த்துக் கொள்ளவும். மேற்சொன்ன உணவுகள் செரிக்க தினம் ஒரு கீழா நெல்லி மாத்திரை சாப்பிடவும். காபி, டீயைக் குறைக்கவும். ராத்திரியில் கைப்பிடியளவு கொண்டைக்கடலையை மண் சட்டியில் ஊற வைத்து காலை யில் சாப்பிடலாம். இவற்றையெல்லாம் செய்து பாருங்கள், மூன்றே மாதங்களில் வியப்பான மாற்றம் காண்பீர்கள.

நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன். கர்ப்பம் உறுதியான நாள் முதல் ஆளாளுக்கு ஒரு ஆலோசனை சொல்லி பயமுறுத்துகிறார்கள். ரொம்பவும் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் அபார்ஷன் ஆகிவிடும் என்கிறார்கள். அபார்ஷன் எந்தெந்தக் காரணங்களால் ஏற்படும்? – கே.எஸ்., திண்டிவனம்.

அபார்ஷன் எனப்படுகிற கருச்சிதைவுக்கு மூன்று முக்கிய காரணங்கள் உண்டு. கருத்தரிக்கும் ஆற்றல் உள்ள உயிரணுக்கள் குறைந்திருந்து நீங்கள் கருத்தரித்திருந்தால்.- முதல் மூன்று மாதங்களில் அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்குதல், நீண்ட தூரப் பயணம் மேற்கொள்தல், அளவுக்கதிக டென்ஷன் போன்றவற்றால்.- காரமான உணவுகளை அதிகம் உண்பதால். கோழி, பப்பாளி, அன்னாசி, பலா போன்றவற்றை முதல் 90 நாட்களுக்குத் தவிர்க்க வேண்டும். உணவில் காரத்தையும், புளிப்பையும் குறைத்து செயற்கை மணம் மற்றும் நிறத்தைத் தவிர்த்து உண்ணவும். இயற்கையான பழம், காய்கறிகள், ஜூஸ் சாப்பிடவும். தினம் 3 முதல் 4 டம்ளர் பால் கட்டாயம் குடிக்கவும். கர்ப்பத்தில் எந்தவிதத் தொந்தரவுகளும் இல்லை என்ற பட்சத்தில் அடிக்கடி ஸ்கேன் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். 14-வது வாரம் ஸ்கேன் செய்தால் போதும். இப்படியெல்லாம் இருந்தாலே உங்களுக்கு நல்லபடியாக பிரசவம் நடக்கும். கவலை வேண்டாம்.

எனக்குப் பதினேழு வயதில் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த நான்கு வருட காலமாக வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கிறது. இதனால் எப்போதும் தர்ம சங்கடமாகவே உணர்கிறேன். என்னதான் தீர்வு? – வி. சங்கீதா, சென்னை-30.

அதிக சூடுதான் வெள்ளைப் படுதலுக்குக் காரணம். உணவில் உப்பு, காரம் தவிர்க்கவும். வாரம் ஒரு முறை புளித்த கீரை சேர்த்துக் கொள்ளவும். தினம் ஒரு பெரிய நெல்லிக்காயும், கொஞ்சம் உலர்ந்த திராட்சையும் சாப்பிடவும். அடிக்கடி பொன்னாங்கண்ணிக் கீரை சேர்த்துக் கொள்ளவும். வெள்ளை முள்ளங்கியை வேக வைத்த தண்ணீரைக் குடிக்கவும். வாழைத் தண்டும், பயத்தம் பருப்பும் வேக வைத்து கூட்டு மாதிரி சமைத்து சாப்பிடவும். நீர்மோர் நிறைய குடிக்கவும். ஊறுகாய் பக்கமே போகாதீர்கள். உணவில் காய் கறிகள், பழங்கள், கீரை மூன்றும் அதிக மிருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். அமுக்கராக் கிழங்கு மாத்திரையை வேளைக்கு ஒன்றாக தினம் மூன்று சாப்பிடவும். மாதுளம் பழத்தின் ஓட்டைக் காய வைத்துப் பொடித்து ஒரு சிட்டிகையை தண்ணீரில் கலந்து மூன்று வேளைகள் குடிக்கவும். அந்தரங்க உறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தினம் இரண்டு வேளைகள் உள்ளாடைகளை மாற்றவும். காட்டன் உள்ளாடையையே அணியவும். மருந்துக் கடைகளில் பொட்டாசியம் பர்மாங்கனேட் என்று கிடைக்கும். அதில் சிட்டிகையை எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து அந்தரங்க உறுப்பை சுத்தம் செய்யவும். போதிய அளவு ஓய்வு, சரிவிகித உணவு என எல்லாம் இருந்தும் தொடர்ச்சியாக வெள்ளைப்படுகிற பட்சத்தில் ஸ்கேன் செய்து பார்க்கலாம.

என் வயது 25. திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது. இன்னும் குழந்தை இல்லை. எனக்கு மாதவிலக்கு எப்போதும் பத்து, பனிரெண்டு நாட்களுக்கு நீடிக்கிறது. இதனால் எங்களுக்குள் இல்லற வாழ்க்கை என்பதே அபூர்வமாகி விட்டது. இந்நிலையில் நான் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டால் குழந்தை உண்டாக வாய்ப்பு உண்டா? – விஜி, சென்னை.

மாதவிலக்கு என்பது இப்படி பத்து, பனிரெண்டு நாட்களுக் கெல்லாம் வரக் கூடாது. அது இரத்த சோகையில் கொண்டு விடும். முதலில் உங்களுக்கு ஏன் இத்தனை நாட்கள் உதிரப் போக்கு தொடர்கிறது என இரத்தப் பரிசோதனை செய்து பாருங்கள். பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் இரத்த இழப்பை ஈடுகட்ட அவர்கள் போஷாக்கான ஆகாரம் உட்கொள்ள வேண்டும். தினம் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை என ஏதேனும் ஒரு பழம் சாப்பிட வேண்டும். பேரிச்சம் பழம் சாப்பிடலாம். இரண்டு வகை காய், கறிவேப்பிலை, முருங்கைக் கீரை மற்றும் முட்டை அடிக்கடி சாப்பிட வேண்டும். இவை மாத விலக்கின் போது உதிரப் போக்கில் உடல் இழக்கும் இரும்புச் சத்தை ஈடுகட்டி, எதிர்ப்பு சக்தியைத் தரும். முதல் வேலையாக மருத்துவரை சந்தித்து இத்தனை நாட்கள் உதிரப் போக்கு வராமலிருக்க சிகிச்சை மேற்கொள்ளுங்கள். கவனிக்காமல் விட்டால் விரைவில் நோயாளி மாதிரி ஆகி விடுவீர்கள். இப்பிரச்சினையை சரி செய்த பிறகு குழந்தைப் பேற்றைப் பற்றி யோசிக்கலாம். பொதுவாக உதிரப் போக்கு இருக்கிற நாட்களில் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது என்பது அசவுகரியமாக இருக்கலாம். தொற்றுக் கிருமிகள் பரவவும் அது காரணமாக அமையும். தாமதிக்காமல் சிகிச்சையைத் தொடங்குங்கள்.

எனக்கு சமீபத்தில் தான் திருமணமானது. என் வயது 21. எடை 61 கிலோ. எனக்கு மார்பகங்கள், தொடைகள் போன்ற இடங்களில் கோடுகள் காணப்படுகின்றன. அவற்றைப் பார்த்து என் கணவர் என் நடத்தையில் சந்தேகப்படுகிறார். நான் திருமணத்துக்கு முன்பு எந்தத் தவறும் செய்ததில்லை. இருந்தும் எனக்கு ஏன் இப்படி இருக்கிறது? எப்படி சரி செய்யலாம்? – பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

21 வயதில் 61 கிலோ எடை என்பது கொஞ்சம் அதிகம்தான். அளவுக்கதிக எடையின் காரணமாகவே உங்களுக்கு மார்பகங்கள் மற்றும் தொடைகளில் கோடுகள் விழுந்திருக்கின்றன. உடலின் எடை முழுவதையும் உங்கள் குதிகால்கள் தாங்குகின்றன. அதன் விளைவே இந்தக் கோடுகள். வாழைத் தண்டு சாற்றில் சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்து அடிக்கடி குடிக்கவும். வாரம் இரண்டு முறை வாழைத் தண்டும், பயத்தம் பருப்பும் சேர்த்து சமைத்து சாப்பிடவும். தினசரி உணவில் கொத்தமல்லி, புதினா, இஞ்சி, பூண்டு, மிளகு அதிகம் உள்ளபடி பார்த்துக் கொள்ளவும். வாரம் இருமுறை கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சிட்டிகை பெருங்காயம் சேர்த்துக் குடிக்கவும். சாதம் ஒரு கப், காய்கறிகளும், கீரையும் இரண்டு கப் என சாப்பிடவும். தினம் மூன்று முதல் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடக்கவும். இதையெல்லாம் செய்து வந்தாலே உங்கள் உடலின் ஊளைச் சதைகள் குறைந்து, வரிகளும் காணாமல் போகும். கணவரிடம் இதை விளக்கமாக எடுத்துச் சொல்லிப் புரிய வையுங்கள். எடையைக் குறைத்து, அதை நிரூபிப்பது இன்னும் சிறந்தது.

என் வயது 27. திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகிறது. மாத விலக்கு நான்கைந்து மாதங்களுக்கொரு முறை தான் வரும். இந்நிலையில் குழந்தையும் இல்லாததால், டி அண்ட் சி செய்தால் மாத விலக்கு சுழற்சியும் சரியாகும், கர்ப்பம் தரிக்கவும் வாய்ப்புண்டு என என் தோழி சொன்னதைக் கேட்டு இரண்டு முறைகள் அதையும் செய்து கொண்டேன். இப்போது எனக்குப் புதிதாக உடலெங்கும் ரோம வளர்ச்சி அதிகமாக ஆரம்பித்திருக்கிறது. டி அண்ட் சி செய்ததுதான் தவறா? ரோம வளர்ச்சி இப்படியே அதிகரிக்குமா? நிறுத்த வழி உண்டா? – பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

ரொம்பவும் பயந்திருக்கிறீர்கள். மாதவிலக்கை முறைப்படுத்த நீங்கள் உட்கொண்ட மருந்துகள் தான் உங்களுடைய இந்தப் புதிய பிரச்சினைக்குக் காரணம். ஸ்டீராய்டு மருந்துகள் செய்த வேலை தான் எல்லாம். அவற்றைத் தொடர்ந்து உட்கொள்வது கூடாது. கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சிட்டிகை பெருங்காயம் சேர்த்து மாதவிலக்கான முதல் இரண்டு நாட்களுக்குக் குடியுங்கள். அதற்கடுத்த மாதம் மாதவிலக்காகிற முதல் இரண்டு நாட்களுக்கு வெற்றிலை, பத்து மிளகு, ஐந்து பற்கள் பூண்டு சேர்த்து வெறும் வயிற்றில் காலையில் சாப்பிடவும். அதற்கும் அடுத்த மாதவிலக்கின் போது வேப்பங்கொழுந்து சாப்பிடவும். இதெல்லாம் உங்கள் மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்தும். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் கோரைக் கிழங்கை அரைத்து சோப்புக்குப் பதில் உடலுக்குத் தேய்த்துக் குளிக்கவும். அதிகப்படியான ரோமத்தை நீக்க, வாக்சிங் செய்து கொள்ளலாம். சர்க்கரை, எலுமிச்சை மற்றும் கிளிசரின் கலவை அது என்பதால் சருமத்தையும் பாதிக்காது. மாத விலக்கு சுழற்சி சரியானாலே, ரோம வளர்ச்சி குறையும். கருத்தரிக்கும் வாய்ப்புகளும் கூடும். கவலை வேண்டாம்.